யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா பின்னணி!
ஒன்றிய பாஜக அரசின் சிந்தனையில் உருவானதுதான் தேசிய தேர்வு முகமை. வெறும் ஒரு குடியிருப்போர் நலச்சங்கம் போல சொசைட்டியாகப் பதிவு செய்யப்பட இந்த முகமை நீட், ஜேஇஇ என முக்கியமான பல தேர்வுகளை நடத்துகிறது. அதில் பலப்பல மோசடிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என பல வகையான மோசடிகள் அம்பலமாகி நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து தினமும் பல மோசடி நபர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணி இடங்களை நிரப்புவதற்கான ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்திலும் (யுபிஎஸ்சி) பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரான யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவரது ராஜினாமா பின்னணி குறித்து பல பரபரப்பு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன....