பெரியார் ஒருவர்தான் பெரியார்!

சனவரி 3-ஆம் தேதி மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரியாரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய சீமான் பெரியாரைத் தரக்குறைவாக விமர்சித்தும், தமிழ்நாட்டுக்குப் புதிதாக பல பெரியார்களை அறிமுகம் செய்தும் வைத்திருக்கிறார். ஜாதி ஒழிப்புக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பெரியாரை ‘பெரியார்’ என ஏற்க முடியாது எனக்கூறும் இவர், புதிதாக பட்டியலிட்டிருக்கும் பலர் எத்தனை முரண்பாடுகளாக இருக்கின்றனர் என்பதை தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“ஜாதிய பாகுபாடுகளை எதிர்த்ததால், கொலை செய்யப்பட்ட இம்மானுவல் சேகரனாரும் பெரியார்! அவர் கொலைக்கு காரணமான பசும்பொன்னும் பெரியார்!

“தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து செத்தே போன சங்கரலிங்கனாரும் பெரியார்! பெயர் வைக்க மறுத்த காமராஜரும் பெரியார்!!

தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற பெருஞ்சித்திரனாரும் பெரியார்!

சமஸ்கிருத மந்திரங்கள் தேவை என்ற மபொசியும் பெரியார்!!

இது ஆரிய நாடு என்ற பாரதியாரும் பெரியார்!

ஆரியக் கவிபாடி உடைத்த திராவிடப் பாவேந்தர் பாரதிதாசனும் பெரியார்!!

“நாடகக் காதல்” ராமதாசும் பெரியார்!

“ஆணவக்கொலை எதிர்ப்பு” திருமாவளவனாரும் பெரியார்!!

மொழிப்போர் ஈகியரும் பெரியார்!

போலீஸ் மந்திரி கக்கனாரும் பெரியார்!!

“இந்துவாகச் சாக மாட்டேன்” னு சொன்ன அம்பேத்கரும் பெரியார்!

அம்பேத்கர் கருத்தை எதிர்த்த எம்.சி. ராஜாவும் பெரியார்!!

முதலாளித்துவத்தை எதிர்த்து போரிட்ட தமிழரசனும் பெரியார்!

முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சி நடத்திய சேரசோழபாண்டியரும் பெரியார்!!

பிரபாகரனை தூக்கிலிடச் சொல்லி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய மாமனார் காளிமுத்துவும் பெரியார் தானாம்!!!”

என முரண்பாடுகளின் முழு உருவமாக சீமான் இருப்பதை சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சீமானுக்கு பதிலடி தரும் வகையில், அதே மயிலாடுதுறையில் மறுநாளே ‘பெரியார் ஒருவர்தான் பெரியார்’ என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுக்கூட்டம் நடத்தியுள்ளது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்தாளர்கள் பலரும் சீமானின் பிதற்றல் கருத்துக்களை எதிர்த்தும், நாக்பூர் ஏஜெண்டாக – முழு சங்கியாக மாறியிருப்பதை அம்பலப்படுத்தியும் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்தனர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களை இங்கே தருகிறோம்.

சுபவீ: 1885-இல் திராவிட பாண்டியன் என்று ஒரு இதழ் இந்த மண்ணிலே வந்தது. ஜான் ரத்தினம் என்பவர் தொடங்கினார். அதில் ஆசிரியராக இருந்தவர் அயோத்திதாச பண்டிதர். 1892-இல் திராவிடத்தை பெயராக வைத்து தன் அமைப்பை தொடங்கியவர் அயோத்திதாச பண்டிதர்.

1894-இல் திராவிடம் என்கிற சொல்லை வைத்து ஒரு கட்சியை தொடங்கியவர் நம்முடைய தாத்தா ரெட்டைமலை சீனிவாசன். திராவிட இயக்கத்தினரை சொல்வதைப் போல அயோத்திதாசரையும் இரட்டைமலையாரையும் திராவிட பன்றிகள் என்று சொல்லுவதற்கு தைரியம் உள்ளதா? இல்லை என்பதை உரத்துச் சொல்லுங்கள். இனி எந்த ஊரில் நீங்கள் பெரியாரை பற்றி இழிவு செய்து பேசினாலும் அதே ஊரில் அதே இடத்தில் அடுத்த நாள் இப்படி ஒரு பெரும் கூட்டத்தை நாங்கள் நடத்தியே தீருவோம். திராவிட மாணவர் பேரவை நடத்துகிற முதல் பொதுக்கூட்டம் இது. உங்களுக்காவது தேர்தலில் நின்று டெபாசிட் வாங்க வேண்டும் என்கிற கவலை இருக்கிறது.

எங்களுக்கு எந்த வேலையும் இல்லை திராவிட இயக்கத்தை பரப்புவதுதான் சாகிற வரைக்கும் எங்களின் வேலை. அடுத்து நான் அதிபராகிவிட்டால் அதிபராகிவிட்டால் என்று அலைந்து கொண்டிருக்கிறீர்களே, முதலமைச்சர் பதவி தேடி வந்தபோது வேண்டாம் என்று சொன்னவரடா எங்கள் கிழவன். சுயமரியாதை இயக்கத்தைப் போல ஒரு இயக்கத்தையும், இந்த நாட்டுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெரியாரை போல ஒரு தலைவரையும் நான் பார்த்ததில்லை என்று வஉசி எழுதியுள்ளார்.

கரு.பழனியப்பன்: தன் வீட்டு கார் ஓட்டுநரை மட்டும்தான் இன்னும் சீமான் பெரியார் என்று கூறவில்லை. ராமதாஸ் வரை வந்துவிட்டார். அய்யய்யோ ராமதாஸை கூறிவிட்டோமே என பதற்றத்தில் விசிக தலைவர் திருமாவளவனையும் பட்டியலில் சேர்த்துக்கொண்டார். சீமான் யாரையெல்லாம் பெரியார் என்று சொன்னாரோ அவர்களெல்லாம் பெரியார் என்று கூறியதே பெரியாரைத்தான். சீமான் பெரியார் என்று சொல்கிற பழனி பாபா என்ன சொன்னார்? பெரியாரை திட்டுபவனை நம்பாதே என்று சொன்னார். பெண்களுக்கு சொத்தில் பங்கு தர வேண்டுமென்று சொன்னவர் பெரியார்; சட்டம் போட்டவர் கலைஞர்.

பெரியார் சொல்லி கலைஞர் செய்தது இது, எனவே என் மனைவிக்கு சொத்து வேண்டாம் என்று அவருடைய அப்பாவிடம் சீமான் சொல்வாரா? பெரியார் தன் சொத்துக்களை அவரே வைத்துக்கொண்டார் என சொல்லும் சீமான் தன் சொத்துக்களைக் கொடுப்பாரா?

பார்ப்பான் என்றால் எல்லோரையும் சமமாகப் பார்ப்பான் என்று புதுவிளக்கம் வேறு கொடுத்திருக்கிறார். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற யவை’ என்ற குரலில் மாடல்ல என்றால் செல்வத்தை குறிப்பது. ஆனால் அதை மாட்டை குறிக்கிறது என வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டுகிறார்.

1920 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை விதவைகள் இருந்தனர். திருமணமாகி கணவன் இறந்து போன பெண் பிள்ளைகள் 1920-இல் ஒரு வயசுக்கு கீழே இருந்தவர்கள் 497 பேர். ஒரு வயதில் இருந்து ரெண்டு வயதுக்குள் இருந்தவர்கள் 494 பேர். 3 வயதுக்குள் இருந்த விதவைகள் 1,237 பேர். 3முதல் 4 வயதுக்குட்பட்ட விதவைகள் 6,867. 4 முதல் 5 வயதுக்குட்பட்ட விதவைகள் 18,000 பேர். 10-இல் இருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒன்னேகால் கோடி பேர். சீமான் சொல்வது போல இதெல்லாம் வாட்ஸ் ஆப் உருட்டு அல்ல. அரசின் தரவுகள். இந்த விதவைப் பெண்களை மொட்டை அடித்து மூலையில் உட்கார வைத்துவிடுவார்கள். பெரியாரின் தங்கை மகளும் இப்படி 10 வயதில் விதவையானார். அந்த பெண் குழந்தை பின்னாளில் பருவமடைந்த பின்னர் மறுமணம் செய்துவைக்கிறார் பெரியார். விதவை மறுமணம் அங்கு ஆரம்பித்தது. இந்தத் தேர்தலில் சீமான் தான் தமிழ்நாட்டுக்கு பொழுதுபோக்கு, அவர் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது.

பேரா.செயராமன்: பெரியார் முதலமைச்சராக இருந்ததில்லை, பிரதமராக இருந்ததில்லை, எந்த அமைச்சராகவும் இருந்ததில்லை. 1940-லும் 42-லும் முதல்வராக இருக்க அழைப்பு ஆளுநரிடமிருந்து வந்தும் அதை நிராகரித்தவர். ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டாக பெரியார் தான் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார். “ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்றான்”னு சொன்ன மாதிரி, பெரியார் சொன்னார் நீதிக்கட்சி செய்தது. பெரியார் சொன்னார் காமராசர் செய்தார். பெரியார் சொன்னார் அண்ணா செய்தார், கலைஞர் செய்தார். பெரியார் இல்லாவிட்டாலும் கூட வழிகாட்டு நெறிமுறைகளாக பெரியாரினுடைய தத்துவமும் சொற்களும்தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த பெரியார் மீது அவதூறை வாரி இறைத்திருக்கிறார்கள். நாக்பூரில் இருக்கக்கூடிய RSS-ன் தலைவர் மோகன் பகவத்தின் கட்டளைப்படி, சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தியால் அந்த உலைக்களத்தில் தயாரிக்கப்பட்ட “பிராமணக் கடப்பாரை” மயிலாடுதுறைக்கு வந்திருக்கிறது. “திராவிடக் கோட்டையை நான் இடிப்பேன், பிராமணக் கடப்பாரை வைத்து” என்று அவர் சொன்னார். பிராமணர்களின் கையில் இவர்தான் கடப்பாரை. உண்மையிலேயே ஒரு வலிமையான பார்ப்பன கடப்பாரை இங்கே இருந்தது. ராஜகோபாலாச்சாரியார் என்ற பெயரில். எவ்வளவோ முயன்ற அந்த கடப்பாரையை தனது இடது கையால் தூக்கி எறிந்தவர் பெரியார்.

பெரியார் என்ன செய்தார்? கலைஞர் கருணாநிதி சொன்னார், “ஐயா நீங்கள் போராட வேண்டாம், நான் அதற்கான சட்டம் போடுறேன்” என்று சொல்லி, ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று சட்டம் இயற்றினார். 2021-இல் கலைஞர் கருணாநிதியினுடைய மகன், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன செய்தார் என்றால் மூன்று பெண் துணை அர்ச்சகர்களை நியமனம் பண்ணார். அந்தப் பொண்ணுங்க பேரு ரஞ்சிதா, ரம்யா, கிருஷ்ணவேணி. ரஞ்சிதா தலித், ரம்யா எம்.பி.சி., கிருஷ்ணவேணி வள்ளுவர் சமூகத்தைச் சேர்ந்தவர். பெரியார் சிரிக்கிறார்… பதறுறான் பதறுறான்… திராவிட இயக்கம் 1000, 2000 ஆண்டு மேலாதிக்கத்தைத் தகர்த்தது. திராவிடத்தைத் தகர்க்காமல் விடமாட்டோம் என்று வருகிறான் கடப்பாரை எடுத்துக்கொண்டு. இந்த கடப்பாரைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்படும். பெரியார் சாகாதவர், நிரந்தரமானவர், என்றென்றும் அரணாக நின்று காக்கக்கூடியவர்.

சிற்பி செல்வராசன்: பெரியார்கள் எல்லாம் ஏற்றுக்கொண்ட பெரியார் எங்கள் பெரியார் என்பதுதான் இங்கே வரலாறு. பெரியார் செத்துப்போய் 52 ஆண்டுகள் ஆகியும் எதிரிகளால் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவர்தான் பெரியார். நான் இந்த நேரத்தில் எச்சரிக்கையாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். நண்பர்களே ஒவ்வொருவரையும் சுட்டிக்காட்டி பேசினார். அதில் இருவரை மட்டும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேவநேய பாவாணர் ஐயா பாவாணர் தமிழ்ச் சமுதாயத்திற்காக பாடுபட்டவர், மிகப்பெரிய புலவர் என்று சொன்னார் சீமான். நாங்களும் மறுக்க விரும்பவில்லை. அந்த தேவநேய பாவாணருக்கு திராவிட மொழிநூல் ஞாயிறு என்கிற பட்டத்தை வழங்கிய மாமனிதர் பெரியார். அவர் வேலை இல்லாமல் காட்பாடியில் சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் உதவிகள் செய்து காப்பாற்றியவர் பெரியார். எங்களுக்கு தமிழ் உணர்ச்சியை கொடுத்தவர் பாவேந்தர் என்று சொல்கிறார்.

தோழர் ரேவதி: 1939-இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரியாரை பற்றி ஒரு வரியை சொல்லியிருப்பார். அதைச் சொல்லி சீமான் அவர்களையும் சீமானின் தம்பிகளையும் நாங்கள் எச்சரித்துக் கொள்கிறோம்.‘பிரிட்டிஷ் சிங்கத்தின் பிடரியை பிடித்து ஆட்ட நினைப்பவர்கள் இன்றைக்கு ஈவேராவின் தலைமுடியை பிடித்து ஆட்ட நினைக்கிறார்கள் அவர்களுக்கு ஒன்று தெரியுமா? ஈவெராவின் அந்த தாடியை பிடித்து ஆட்ட நினைக்கிறார்கள். அந்த தாடியில் ஒட்டுமொத்த தமிழ்நாடே இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியுமா?

இன்றைக்கு அவர்கள் ஒரு மயிரை அசைக்க நினைத்தாலே ஒட்டுமொத்த தமிழ்நாடும் பொங்கிவிடும்’ என்று சொன்னார் அண்ணா. அதை நாங்கள் இன்றைக்கு சொல்லி உங்களை எச்சரித்துக் கொள்கிறோம். ஏனென்றால் தமிழ்நாடுதான் பெரியார். பெரியார்தான் தமிழ்நாடு என்பதை இந்த முட்டாள் சீமானுக்கு யாராவது சொல்லிப்புரிய வைக்க வேண்டும். உங்களுக்கு பெரியார் என்ற சொல்லும், திராவிடம் என்ற சொல்லும் கசக்கும் என்று சொன்னால் நாங்கள் திரும்பத் திரும்ப சொல்லுவோம். பெரியார் ஒருவர்தான் பெரியார்.

பெரியார் முழக்கம் இதழ் 08012026

You may also like...