காரைக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்!

‘பெரியார் எனும் அறிவியல்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள குறளரங்கத்தில் 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. முதல் வகுப்பாக EH you tube channel, கழக பேராவூரணி நகர அமைப்பாளர் கலைச்செல்வன் ‘மனித பரிணாமமும் பகுத்தறிவும்’ என்ற தலைப்பில் ஆரம்ப காலம் முதல் இப்பொழுது இருக்கும் காலம் வரை மனிதன் பரிணாமம் அடைந்ததைப் பற்றி அறிவியல்பூர்வ விளக்கவுரையாற்றினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘அறிவியல் பார்வையில் பெரியாரியம்’ என்ற தலைப்பில் பார்பனர்கள் நம் மக்களை கடவுள் பெயரைச் சொல்லி அடிமைப்படுத்தியதையும், சுரண்டி பிழைப்பு நடத்தியதையும் அதிலிருந்து பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களிடம் எடுத்துக்கூறி மீட்ட வரலாற்றைப் பற்றியும் விளக்கவுரையாற்றினார். பெரியார் தொண்டர் சிற்பி இராசனின் ‘மூடநம்பிக்கையும் அறிவியலும்’ என்ற தலைப்பில் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கடவுள் என்ற பெயரால் சாமியார்கள் மக்களை ஏமாற்றும் வகையிலும், பணம் சேர்க்கும் வகையிலும் செய்யும் வித்தைகளை செய்து காண்பித்தார், இந்நிகழ்ச்சியை புதிய தோழர்கள் வியப்புடனும், ஆர்வத்தோடும் கண்டுகளித்தனர்.

கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ‘ஜாதியும் அறிவியலும்’ என்ற தலைப்பில் ஜாதியில் மறைந்திருக்கும் மூடநம்பிக்கைகள் பற்றியும், அதிலிருந்து எவ்வாறு மீண்டு அறிவியல் ரீதியாக நம் வாழ்வில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது பற்றியும் விளக்கவுரையாற்றினார். பெரியார் எனும் அறிவியல் குறித்த கேள்விகளுக்கு விளக்கவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழக பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பேராவூரணி நகர அமைப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் பதில் அளித்தனர்.கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவாக அசைவ உணவு வழங்கப்பட்டது.

புதிய விடியல் பதிப்பகம் அரசெழிலன் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் திராவிட இயக்க சிந்தனைகள் பற்றிய புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியை முனைவர் தென்றல் ஒருங்கிணைத்தார். மதுரை, தஞ்சாவூர், கடலூர் மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் பேராவூரணியைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என 120-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15012026

You may also like...