பாஜக என்றால் பம்முகிறார் விஜய்!
“ஈரோடு கூட்டத்திற்கு நடிகர் விஜய்க்கு பேச்சு எழுதிக் கொடுத்தவர்களுக்கு விஜய் மீது என்ன கோபமோ தெரியவில்லை. அவருக்கே ஆப்பு வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் “மக்களுக்கு ஒன்று என்றால் ஓடிவந்து மக்களோடு நிற்பேன், மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை கேட்டு அறிந்த பிறகுதான் இங்கே பேச வந்திருக்கிறேன்” என்ற டயலாக்கை விஜயை வைத்தே பேச வைத்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் பங்களாவுக்கு அழைத்து சந்திக்கும் ஒருவரை இதைவிட கிண்டல் அடிக்க முடியாது. “விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்கள் உரிமைத்தொகை” என்று தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளது. இதுகூட விஜய்க்கு தெரியாது என்பதை மக்களிடம் அம்பலப்படுத்துவதற்காக இலவச திட்டம் என்று திமுக கூறுவதாக பொய்யாக பேச வைத்து மக்கள் மன்றத்தில் காமெடியன் ஆக்கி இருக்கிறார்கள்.
விஜய் எதிர்ப்பு அரசியலை திமுக கண்டு கொள்வதே இல்லை. அவரது பெயரைக் கூட தமிழ்நாடு முதல்வர் உச்சரித்ததே இல்லை ஆனால் ஏதோ தங்கள் கட்சியைப் பார்த்து மிரண்டு நிற்பதாக வசனத்தை எழுதி கொடுத்துப் பேச வைத்திருப்பதை மக்கள் கைதட்டி ரசிக்கிறார்கள்.
திமுகவின் வயது 75. திராவிட மாடல் ஆட்சி பொருளாதாரத்தில், கல்வியில், ஏற்றுமதியில், தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம் பெற்று நிற்கிறது. ஒன்றிய அரசாலும் ரிசர்வ் வங்கியாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த உண்மைகள் எல்லாம் விஜய்க்கு ஏதும் தெரியாது என்ற காரணத்தினால் இங்கே ஆட்சி நடக்கவில்லை கண்காட்சி நடக்கிறது என்று பேச வைத்திருக்கிறார்கள் அவரும் அப்படித்தான் நடக்கிறது போலும் என்று கருதி உச்ச சுருதியில் முழங்கினார்.
இன்னொரு கூத்து நடந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றிக் காட்டுவோம் என்று சவால் விட்ட அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில் “மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம், எங்கள் கேரக்டரே உங்களுக்கு புரியவில்லையே” என்று பதிலடி தந்தார். இதற்கு அமிஷாவிற்கு பதிலாக விஜயை பேச வைத்திருக்கிறார்கள் அவருக்கு பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள்.
“எங்களைப் பஞ்ச் டயலாக் பேசுவதாக கூறும் முதல்வர் அவர்களே! நீங்கள் பேசுவது பஞ்ச் டயலாக் அல்லவா” என்று அமித்ஷாவுக்காக வாய்ஸ் கொடுக்க வைத்துள்ளார்கள். இதற்கு அமித்ஷா அல்லவா பதில் கூற வேண்டும்? “என்னை ஏன் பேச வைக்கிறீர்கள்?” என்று விஜய் அரசியல் அறிவோடு கேட்க மாட்டார் என்பதும் பேச்சை எழுதிக் கொடுப்பவர்களுக்கு புரியும் போல் இருக்கிறது.
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக; என்று பேசி வந்தவரை மடைமாற்றி கொள்கை எதிரி, அரசியல் எதிரி இரண்டுமே திமுகதான் என்று அவரையே பேச வைத்து. அதையே கூடியிருந்த கூட்டத்தின் முழக்கமாக விஜய் வாயிலாகவே சொல்ல வைத்ததோடு இந்த கட்சி பாஜகவின் தொங்கு சதைதான் என்பதை விஜய் வழியாகவே அம்பலப்படுத்திவிட்டனர். திருப்பரங்குன்றம் பற்றியோ, காந்தி பெயர் நீக்கம் குறித்தோ நிகழ்கால பாஜக அரசியல் குறித்து ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல் ஈரோடு ஷுட்டிங் நடந்து முடிந்துள்ளது.
– விடுதலை இராசேந்திரன், 18.12.25
பெரியார் முழக்கம் இதழ் 25122025
