திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு பிப்.15, 2023 பகல் 11 மணியளவில் சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், ஆசிரியர் சிவகாமி, சென்னை உமாபதி, விழுப்புரம் அய்யனார், பரிமளராசன், காவலாண்டியூர் ஈசுவரன், மயிலாடுதுறை இளையராசா ஆகியோர் பங்கேற்றனர். ஏப்ரல் 29, 30 தேதிகளில் சேலத்தில் கழகத்தின் மாநில மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு அது குறித்து நிகழ்ச்சிகள், தலைப்புகள், மாநாட்டு நோக்கங்கள், மாநாட்டுக்கான பேச்சாளர்கள், மாநாட்டுக்கு நன்கொடை திரட்டும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு” என்று மாநாட்டின் தலைப்பு முடிவு செய்யப்பட்டது....