தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி
ஜாதி ஒழிப்புக் களத்தில் உயிர்நீத்த மாவீரன் இமானுவேல் சேகரன் நூற்றாண்டு இது. தென் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடிய ஜாதிவெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடிய மாவீரன். 1924, அக்டோபர் 09ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூரில் அவர் பிறந்தார். இராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக் காலங்களில் ஊருக்கு வரும் போது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார். மக்களை அணிதிரட்டினார். ஒருகட்டத்தில் இராணுவத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புக் களத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டார். தேவேந்திர குல வேளாளர் என்ற ஜாதிப் பிரிவில் அவர் பிறந்தாலும் சுயஜாதியைக் கடந்து தீண்டாமையால் பாதிக்கப்பட்ட நாடார் உள்ளிட்ட அனைத்து ஜாதிகளையும் அவர் ஒருங்கிணைத்தார். 1953இல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை அவர் தொடங்கினார். ஜாதி ஒழிப்புடன் பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். கணவனை இழந்தப் பெண்கள் மறுமணம் செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் நேரடியாகச் சென்று பரப்புரை செய்தார். அன்றைய காலகட்டத்தில் இராஜகோபாலாச்சாரி...