சமூகநீதிக் கொள்கையில் உறுதிகாட்டும் ராகுல் காந்தி!
பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதி அதிகாரிகளின் பிடியில்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் மய்யம் சிக்கிக் கிடக்கிறது. முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்த பதவிகளில் அனைத்துப் பிரிவு மக்களும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ராகுல் காந்தி.
கடந்த புதன்கிழமை டெல்லியில் ஒரு முக்கிய கூட்டம் நடந்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இடம் பெற்ற குழுவின் கூட்டம். தலைமை தகவல் ஆணையர், கண்காணிப்பு ஆணையர் மற்றும் 8 தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக இந்த குழு கூடியது.
தகவல் தொடர்பு ஆணையர் பதவி 2023-ஆம் ஆண்டில் இருந்தும் தலைமை ஆணையர்கள் பதவி கடந்த செப்டம்பரில் இருந்தும் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது. இந்தப் பதவிகளுக்கு மோடியும் அமித் ஷாவும் தேர்வு செய்துள்ள பட்டியல்களில் பார்ப்பனர்களே அதிகம்.
90 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி இந்த பட்டியலில் ஏன் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மைனாரிட்டி பிரிவினர்கள் இடம் பெறவில்லை என்ற கேள்வியை முன்வைத்தார். விளிம்பு நிலை மக்களின் புறக்கணிப்பு திட்டமிட்டு அமைப்பு ரீதியாக நடத்தப்படுகிறது என்று நேரடியாக குற்றம்சாட்டினார். ஆடிப்போன அமித் ஷாவும் மோடியும் வாய் பேசவில்லை.
இந்தக் கூட்டம் கூடுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே தேர்வு செய்யப்பட்ட பட்டியல்களின் பெயர்களை கேட்டு வாங்கி அவர்களின் ஜாதிய பின்புலத்தை ராகுல் காந்தி விசாரித்து அறிந்த பிறகுதான், இந்த கூட்டத்திற்கு வந்தார் என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ் ‘நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. தகவல் உரிமைச் சட்டம் 12(3) பிரிவு தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரையும் ஓர் உறுப்பினர். இந்த சட்டம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. அதனால்தான் இந்த வாய்ப்பும் கிடைத்தது.
விளிம்பு நிலை மக்களைப் புறக்கணிக்கும் இந்த பட்டியலில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக ராகுல் காந்தி பதிவு செய்தார். கண் துடைப்புக்காக ஒரே ஒரு பட்டியலின பிரிவு அதிகாரி பெயர் மட்டும் இடம்பெற்றிருந்தது.
ஏற்கெனவே தேர்தல் ஆணையர் மற்றும் மனித உரிமை ஆணையர்களைத் தேர்வு செய்த இரண்டு கூட்டங்களிலும் பார்ப்பனர்களையே நியமித்ததை எதிர்த்து தனது எதிர்ப்பை இதேபோல் ராகுல் காந்தி எழுத்து மூலம் பதிவு செய்தார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். இனி இந்த சட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறுவதை நீக்கி சட்டத் திருத்தம் கொண்டு வரவும் வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஊடகத்துறையிலும் உயர் அதிகார வர்க்கத்திலும் பார்ப்பன மேலாதிக்கத்தை கேள்வி கேட்டவர்தான் ராகுல் காந்தி.
தேர்தல் தோல்விகளைப் புறந்தள்ளி- சமூகநீதிக் கொள்கையில் உறுதியோடு நடை போடுகிறார் ராகுல். பார்ப்பன கூடாரமாக இருந்த காங்கிரஸ் வகுப்பு வாரி உரிமையை மறுத்தபோது பெரியார் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அதே காங்கிரஸ் கட்சியின் தலைமை பெரியார் பேசிய வகுப்புரிமைக்கு அழுத்தமாக குரல் கொடுக்கிறது ; இது பெரியாரியத்தின் மகத்தான வெற்றி! ராகுல் காந்தி இந்திய அரசியலில் முன்னெடுக்கும் இந்த சமூக நீதிப் போராட்டத்திற்கு உறுதியாக துணை நிற்போம். விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு
பெரியார் முழக்கம் இதழ் 18122025
