விஷச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக்கூடாது!

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் டிசம்பர் 21-ஆம் தேதி பொருநை அருங்காட்சியத்தை தமிழ்நாடு அரசு திறந்துவைத்துள்ளது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடத்தில் இரும்பின் பயன்பாடு இருந்ததை, இரும்பை உருக்கி ஆயுதங்கள் தயாரிக்கும் அறிவைப் பெற்றிருந்தனர் என உலகை வியக்கவைத்தது பொருநை அகழாய்வு முடிவுகள். அதேபோல கீழடியிலும் தமிழர்களின் நாகரிகம் உயர்ந்தது என்பதற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அங்கும் ஒரு அருங்காட்சியகத்தை திமுக அரசு அமைத்திருக்கிறது. டிஜிட்டல் வசதிகளுடன் இரு அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தோடு கீழடி, பொருநை நாகரிகங்கள் ஒத்துப்போகின்றன என்பது மட்டுமல்ல, இரண்டு இடங்களிலும் கடவுள், மத, ஜாதி அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் வெளிநாட்டு வணிகத் தொடர்புகளுடன், ஒரு உயர்ந்த நாகரிகமாக தமிழர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளாக அவை திகழ்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பித்து, இடையே புகுத்தப்பட்ட ஜாதி – மதப் பாகுபாடுகளை விட்டொழித்து நாம், ஜாதியற்ற- மதமற்ற தமிழர்களாக ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துவதுதான் கல்வித்துறையின் சேவையாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, ஆரியம் தூக்கி வரும் இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை மாணவர்கள் மத்தியில் புகுத்துவது விஷமச் சிந்தனை. அந்த வேலையை செய்திருக்கிறது கோவையில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியும் தென்னிந்திய ஆய்வு மையமும் இணைந்து, ‘சிந்து- சரஸ்வதி நாகரிகம்’ என்ற தலைப்பில் இருநாள் கருத்தரங்கை டிசம்பர் 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தியுள்ளன.

பதவிக்காலம் முடிந்த பின்பும் எந்தவித அறிவிப்பும் இன்றி ஆளுநராக தொடர்ந்து வரும் ஆர்.என்.ரவி இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசும்போது, “சரஸ்வதி நதியைப் பற்றி ரிக்வேதம் குறிப்பிடுகிறது. இந்த நதி தனித்துவம் வாய்ந்தது. சரஸ்வதி நதி பற்றிய செய்திகள் புராணமல்ல. அறிவியல் ரீதியாக சரஸ்வதி நதி இருந்தது உறுதியாகியுள்ளது. மகாபாரதத்தில் அந்த நதியைக் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன” எனப் பேசியுள்ளார்.

புராணங்களே பொய், கட்டுக்கதைகள் என்னும்போது, புராணங்களில் குறிக்கப்பட்டதால் அப்படியொரு நாகரிகம் இருந்தது என்று கூறி விட முடியுமா? சரஸ்வதி நதி எங்கே இருக்கிறது, எங்கே ஓடுகிறது என்பதற்கு இதுவரை எந்தவொரு தெளிவான விளக்கமும் இல்லை. இமாச்சலப் பிரதேசம் தொடங்கி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் வழியாக குஜராத்துக்குள் நுழைந்து அரபிக்கடலில் கலந்து விடுகிறது என்கின்றனர். ஆனால் இந்திய ஒன்றியத்தின் அனைத்து நதிகளும் வங்கக்கடலில்தான் கலக்கின்றன என்பதே உண்மை. இல்லாத நதியை ராஜஸ்தானிலும், குஜராத்திலும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கண்டுபிடித்து ஆய்வகங்களில் உறுதிப்படுத்த கீழடி, பொருநை நாகரிகங்களை போதிய சான்றுகள் இல்லை என ஏற்க மறுக்கிறார்கள். இந்த உண்மைகளைத்தான் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர, சரஸ்வதி நாகரிகம் என்ற புராண புளுகுகள் அல்ல, அவர்களுக்கு தேவைப்படுவது.

மாணவர்கள் மத்தியில் பரப்ப வேண்டியது வரலாற்றையும் அறிவியலையும்தானே தவிர, ஆரிய கற்பனைகளை அல்ல. தமிழ்நாட்டில் பள்ளி, மாணவர்கள் மத்தியில் இத்தகைய பார்ப்பனியச் சித்தாந்தத்தை விதைக்கும் கல்வி நிறுவனங்களை அரசு அடையாளம் கண்டு, அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளோ அல்லது சமூக செயற்பாட்டாளர்களோ பள்ளி, கல்லூரிகளில் தங்களது அரசியல் போக்கை, சிந்தனைகளை எடுத்துச்சொல்ல எந்த கல்வி நிறுவனமும் அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டின் தலையாய பிரச்னைகளில் கூட தனியார் கல்லூரி மாணவர்கள் கருத்துச் சொல்லவோ, ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுக்கவோ அனுமதிப்பதில்லை.

அப்படியிருக்கும்போது ஆர்.எஸ்.எஸ் கருத்தரங்குகள், பயிலரங்குகளை மட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் துணிச்சலைப் பெற்றிருப்பது ஆபத்தான போக்கு. இதே கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் உள்ள தனியார் தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளியில் 2022-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தியது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் இப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மதுரை, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, குடியாத்தம், தஞ்சை ஆகிய 5 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டை ஒட்டி 2022-இல் இருந்து பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலேயே நடைபெற்றுள்ளன.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, இந்த ஆண்டு மே மாதத்தில் திருச்செங்கோடு எஸ்.பி.கே. பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு, அதன் தலைவர் மோகன் பகவத் வருகை தந்தார். அங்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் அவரை சந்தித்தனர். குடியரசுத் தலைவர், பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பைப் போல மோகன் பகவத்திற்கு பாதுகாப்பு அளித்து அங்கு அழைத்துச் சென்றனர். இவையெல்லாம் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்தன. இப்படி துணிச்சலாக கல்வி நிறுவனங்களுக்குள் ஆர்.எஸ்.எஸ் நுழைவது தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கு பேராபத்தை விளைவிக்கும்.

திராவிடம் மாணவர்களை படிக்க அழைத்து, வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்பைப் பெருக்கி அவர்கள் வாழ்வை சிறக்க வைக்கும். ஆரியம் அவர்களை கலவரப் பாதைக்குத்தான் இட்டுச்செல்லும். இத்தகைய கல்வி நிறுவனங்களை இனங்கண்டு, எச்சரிக்கையோடு புறக்கணிக்க இருக்க வேண்டியது மாணவர்கள், பெற்றோர்களுக்கும் அவசியமானது.

You may also like...