ஜீவாவும் மொழி வழி மாநில சீரமைப்பும் ; ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (7) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பலர் எழுதி இருந்தாலும் 1946-இல் வெளிவந்த தோழர் இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டும் அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த ஒன்றாகும். 1963 ஜனவரியில் முடிவெய்திய தோழர் ஜீவா குறித்து, ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் 1966-ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த அவரது சிலை திறப்பு விழாவில் வெளியிடப்பட்டிருந்தாலும் நூலினை எழுதிய தோழர் கே.பாலதண்டாயுதம் இறுதிக்காலத்தில் ஜீவாவோடு நெருக்கமாக இருந்த ஒருவர் ஆவார். அதில் பதியப்பட்டுள்ள செய்திகள் பெரும்பாலும் ஜீவாவிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாகவும், ஏற்கெனவே அறிந்ததை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும்தான் இருக்க முடியும்.
அதில் மொழி வழி மாநிலங்கள் உருவான காலத்தில் வட எல்லையிலும் சென்னை குறித்தும் தெற்கெல்லைப் போராட்டம் குறித்தும் பதிவாகியுள்ள நிகழ்வுகளின் பற்றிய உண்மைத் தன்மையைக் குறித்து திறனாய்வு செய்ய வேண்டியுள்ளது.
அந்நூலின் 72 ஆம் பக்கத்தில் உள்ள “தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைய 1949-இல் அப்பகுதியில் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் ஜீவா தலைமறைவில் இருப்பினும் பல்வேறு தலைவர்களுடன் ரகசியமாக தொடர்புகொண்டு அறப்போராட்டத்திற்கு சர்வ கட்சி ஆதரவை திரட்டினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குமரிப் போராட்டம்!
தோழர் பொன்னீலன் அவர்களால் எழுதப்பட்டு 1982-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்த ‘ஜீவா என்றொரு மானுடன்’ என்ற நூலில், “1954-இல் கேரளம் இரண்டாவது பொதுத் தேர்தலைச் சந்தித்து. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றகோஷத்தை முன்வைத்து திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் தமிழர் வாழும் பகுதிகளில் போட்டியிட்டு பரிபூரண வெற்றி அடைந்தது. அச்சமயத்தில் மத்திய அரசு மாநில சீரமைப்புக் கமிஷனை தெற்கே அனுப்பியது. திருவாங்கூர் தமிழ்ப் பகுதியைக் கேரளத்தில் இருந்து பிரித்து ஐக்கிய தமிழகம் உருவாக்க வேண்டுமென எங்கும் போராட்டம் வெடித்தது. திருவாங்கூர் முதலமைச்சர் பட்டம் தாணுப் பிள்ளை போலீசைக் கொண்டு போராட்டக்காரர்களைத் தாக்கினார். தேவி குளத்தில் கொடூரமான அடக்குமுறை தாண்டவம் ஆடியது. இதை எதிர்த்து 1954 ஜூன் 30இல் ‘தேவிகுளம் தினம்’ அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போதைய திருவாங்கூர் கொச்சி முதலமைச்சர் பட்டம் தாணுப் பிள்ளை 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். ஆனாலும் போராட்டம் வேகம் பெற்றது. போராட்டத்திற்கு ஆதரவாக தேவி குளத்துக்குப் போன நேசமணி, சிதம்பரநாதன், ரசாக் ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனால் போராட்டம் நாஞ்சில் நாட்டிலும் கொழுந்து விட்டு எரிந்தது.
1954 ஆகஸ்ட் 11-ஆம் தேதி விடுதலை தினமாக தமிழ்ப்பகுதி எங்கிலும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்ட போராட்டத்தை பட்டம் தாணுப் பிள்ளையின் அரசு துப்பாக்கி முனையில் சந்தித்தது. புதுக்கடை, தொடுவெட்டி ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பேர் படுகாயம் அடைந்தனர். ஆகஸ்ட் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாகப் பங்கெடுத்தது.
அன்று மாலையில் ஜீவா போராட்டத்தை ஆதரித்து தெரிசனங்கோப்பில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசினார். கூட்ட முடிவில் ஜீவாவைக் கைது செய்ய போலீசார் முயன்றபோது, அவர் தப்பி கல்லும் முள்ளும் நிறைந்த கடுக்கரை மலையைத் தாண்டி வள்ளியூருக்குப் போய்விட்டார். களைப்பு மிகுதியால் ஒரு கடை திண்ணையில் படுத்து தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் தற்செயலாக அவரைச் சந்தித்து அதிசயத்த தோழர்களிடம், ‘கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்; பட்டத்தை (கேரள முதல்வர்) இங்கிருந்து கொண்டே பிய்த்து எறிவோம்” என்றார். ஆகஸ்ட் போராட்டம்தான் 1956-இல் குமரி மாவட்டமாக பழுத்துக் கனிந்து நமக்குக் கிடைத்தது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “தேவிகுளம், பீர்மேடு, சிற்றூர் (சித்தூர்),நெய்யாற்றின் கரை, செங்கோட்டையின் மேல்பாகம் ஆகியவை கேரளத்துக்கே உரியன என்ற நால்வர் கமிட்டியின் தீர்ப்பை எதிர்த்து பிப்ரவரி 2இல் தமிழகமெங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஜீவா முன் நின்றார். சென்னையில் நடந்த கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடிப் பிரயோகம் செய்தனர். ஜீவாவும், எம்.ஆர்.வெங்கட்ராமனும் தடியடிப் பிரயோகத்திற்கு ஆளாகிப் பலத்த காயமடைந்தனர்” என்றெல்லாம் கூறுகிறது பொன்னீலனின் ‘ஜீவா என்றொரு மானுடன்’ நூல்.
“இரண்டாவதாக தேவிகுளம் பீர்மேடு சர்வ கட்சி அணிவகுப்பு 1956 ஜனவரி முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெற்றது. அந்த அமைப்பின் செயலாளர்களில் ஒருவராக ஜீவா தீவிரப் பங்காற்றினார்” என்கிறது தோழர் கே.பாலதண்டாயுத்த்தின் ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’. இரண்டில் எது உண்மையாக இருக்கும்? இது நமக்குள் எழும் கேள்வி.
உண்மை என்ன?
மொழி வழி மாநிலங்கள் உருவான காலத்தில் வட எல்லையிலும் சென்னை குறித்தும், தெற்கெல்லைப் போராட்டம் குறித்தும், பதிவாகியுள்ள நிகழ்வுகளின் உண்மைத்தன்மை குறித்து திறனாய்வு செய்வோம். ஜீவாவின் மீதும், அவருடைய எழுத்துக்களின் மீதும் பற்றும் மதிப்பும் கொண்டு கொண்டவரும், பாரதியை போற்றுவோரும் ஆன ஜீவபாரதி அவர்கள் 56 ஆண்டுகள் வாழ்ந்த ஜீவாவின் படைப்புகளையும், அவரைப் பற்றிய நூல்களாகவும் மொத்தம் 56 வெளியிட முனைந்து வெளியிடப்பட்ட 5ஆவது நூல் என்ற பதிப்புரையுடன் 2012 பிப்ரவரியில் வெளியாகி இருக்கும் ‘சட்டப்பேரவையில் ஜீவா’ என்ற தொகுப்பின் 36-ஆம் கட்டுரையாக ‘எல்லைப் பிரச்சினைகள் தீர ஏற்ற வழி’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. தலைப்பின் கீழே அடைப்புக்குறிக்குள் ‘மாநில சீரமைப்புக் குழுவின் சிபாரிசுகளின் பெயரில் நடந்த விவாதத்தின் போது 1955 நவம்பர் 21-இல் ஜீவா பேசியது’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியாகச் சொன்னால் அந்த உரை தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற சட்டம் முன்வரைவின் (மசோதாவின்) மீது நடந்த விவாதத்தில் ஜீவா ஆற்றிய உரையே!
அவ்வுரையில், “கம்பம், கூடலூர், வண்டிப்பெரியாறு ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு இருந்தால் அவற்றிலிருந்து வரும் தண்ணீர் நமக்குக் கிடைக்கும்” என்று விவாதத்தில் அமைச்சர் சி சுப்பிரமணியம் கூறியதற்கு, ஜீவா “தண்ணீரின் உற்பத்தி ஸ்தானம் அங்கே இருந்தாலும் இங்கே உபயோகப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது காவிரி தண்ணீர் கூர்க்க நாட்டில் இருந்து செல்வதால், அங்கே அந்த நதி தேக்கி விட வேண்டும் என்று சொன்னால் அதில் நமக்கு பிரயோஜனம் இல்லை,” என்று கூறுகிறார். உடனே அமைச்சர் “அந்த பெரியாறுத் தண்ணீரை அங்கே (கேரளத்தில்) உபயோகிப்பதற்கு இடமில்லை; அது நேரே கடலில் போய் விழுகிறது. அங்கே உபயோகிப்பதற்கு நிலம் இருந்தால் அப்போதுதான் அதைப் பற்றி பேச முடியும்” என்று பதிலளிக்கிறார்.
அதற்கு ஜீவா, “இன்றைக்கு இந்தக் கமிஷன் ரிப்போர்ட் நமக்கு பிரதிகூலமாக (பாதகமாக) இருக்கிறது. தமிழர்கள் நிறைய இருக்கக் கூடிய பிரதேசம் நமக்கு கிடைக்க முடியாதபடி இருக்கிறது. அதைப் பார்க்கும் போது இந்த ராஜ்யத்தில் இருக்கும் மக்கள் (தமிழர்கள்) பயப்படுகிறார்கள். இருந்தாலும் இந்திய யூனியனிலேயே நாம் இருப்பதால் எங்கிருந்தாலும் கவலை இல்லை என்று சொல்லப்படுகிறது” என்றார்.
முன்னுக்குப் பின் முரண்!
மேலும், “தண்ணீர் விஷயம் பொருத்தவரையில், மின்சார விஷயம் பொருத்தவரையில், நீர்ப்பாசன விஷயம் பொருத்தவரையில் உள்ள எல்லா பிரச்சனைகளிலும் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன. அவைகளைத் தீர்ப்பதற்கு மக்கள் எல்லோரும் சகோதர மனப்பான்மையில் விவாதித்து அதற்கு வேண்டிய பரிகாரம் தேட வேண்டும். அதற்கு உதவி செய்வதற்கு அங்குள்ள (கேரளாவில் உள்ள) மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதற்குத் தகுந்த முறையில் பேச்சு இருக்க வேண்டும். ஜனநாயக முறையில் அவைகளைத் தீர்க்க வேண்டும்; அப்படி தீர்க்கவும் முடியும்; அப்படித் தீர்ப்பதற்கும் முயற்சி செய்ய வேண்டும். இது என்னுடைய கருத்து. இவைகளில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் சமாதான முறையில் அவைகளைத் தீர்க்க வேண்டும் என்பது என் கருத்து.” என்று பேசுகிறார் ஜீவா.
அதற்கு அவை முன்னவரான அமைச்சர் சி.சுப்பிரமணியம், “இதுவரையில் கனம் ஜீவானந்தம் பேசியதைக் கேட்டு வந்தேன். அவர் பேசியதில் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகத் தெரிகிறது. மணியக்காரர் உடைய மாடு முன்னால் பார்த்தால் ஒரு மாதிரியும், பின்னால் பார்த்தால் ஒரு மாதிரியாக இருப்பதாகச் சொல்லுவார்களே (ஒரே சிரிப்பு) அதைப்போல இருக்கிறது. பீர்மேடு, தேவிகுளம் முதலியவைகளை நம் ராஜ்யத்துடன் சேர வேண்டும் என்பது அவருடைய கருத்தா, அல்லது அவைகளைத் திருவாங்கூருடன் (கேரளத்துடன்) சேர்க்க வேண்டும் என்பது அவருடைய கருத்தா என்பதை அறிய விரும்புகிறேன். அந்த அபிப்ராயத்தை தெரிவித்தால் அதன்மேல் நான் பேசும்போது பதில் சொல்வதற்கு வசதியாக இருக்கும்” என்கிறார்.
அதற்குப் பதிலாக ஜீவா “என்னுடையப் பேச்சைக் கவனித்தால் ஒரு முடிவுக்கு வர முடியும். அவைகள் நம்முடன் இருக்க வேண்டுமா? அல்லது திருவாங்கூருக்குப் போக வேண்டுமா? என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன் சகோதர அங்கத்தினர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வழி செய்ய வேண்டும். அங்குள்ள பிரச்சினை ரொம்பவும் சிக்கலாக இருக்கிறது. சிரமம் இல்லாமல் மக்களுடைய அபிப்ராயத்தைக் கேட்டு இந்தச் சிக்கலைத் தீர்க்கவேண்டும்.
இரண்டு பேருடைய கருத்தையும் கேட்டால் இதை சுகமாக முடிக்க முடியும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து. என்னுடைய கருத்தும் கூட” என்று தேவிகுளம் பீர்மேடு சிக்கல்களுக்கு தன் கருத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தையும் தங்கள் நிலைப்பாட்டையும் ‘மிக மிகத் தெளிவாக’ குழப்பி உரையை முடித்துள்ளார். இதுவே ஜீவா தெற்கெல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்த பெரும் சிறப்பு. தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசால் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்ட 21.11.1995 அன்று ஜீவா ஆற்றிய உரையின் பகுதிகளே மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை.
24.11.1955 இல் விவாதித்து முடிந்த பின்னால் நடந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும், அதற்கு எதிராக 18 வாக்குகளும் கிடைத்ததால் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஜீவா, பி.ராமமூர்த்தி, எம். கல்யாணசுந்தரம் உள்ளிட்ட தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேரும் நடுநிலை வகிப்பதாகக் கூறி வாக்களிக்கவில்லை. இந்தியா ஈழச்சிக்கல் குறித்த தீர்மானங்களுக்கு வாக்கெடுப்புகள் நடந்தபோதெல்லாம் நடுநிலைமை வகித்து வாக்களிக்காததைப் போல. (தொடரும்).

“பீர்மேடு,தேவிகுளம் முதலியவைகளை நம் ராஜ்யத்துடன் சேர வேண்டும் என்பது அவருடைய கருத்தா, அல்லது அவைகளைத் திருவாங்கூருடன் (கேரளத்துடன்) சேர்க்க வேண்டும் என்பது அவருடைய கருத்தா என்பதை அறிய விரும்புகிறேன். அந்த அபிப்ராயத்தை தெரிவித்தால் அதன்மேல் நான் பேசும்போது பதில் சொல்வதற்கு வசதியாக இருக்கும்”.

பெரியார் முழக்கம் இதழ் 18122025

You may also like...