எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் அவர்களின் இணையர் தோழர் யாழ்மொழி அவர்கள் உடல் நலக்குறைவால் 26.12.2025 அன்று இயற்கை எய்தினார். 29.12.2025 கோவை பூ மார்கெட், சிரியான் சர்ச் ரோடுல் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாரமரன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல் (மாநகரத் தலைவர்), வெங்கட்(மாநகரச் செயலாளர்), அன்னூர் விஷ்னு, மோகன கிருஷ்ணன், நவீன் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.

சமூக வலைதளப் பக்கத்தில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதியிருந்த பதிவில், “அன்புத் தோழர் பாமரனின் இணையர் யாழ்மொழியின் இறப்புச் செய்தி, உண்மையிலே என்னை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு சில முறைதான் அவரை நான் சந்தித்திருக்கிறேன். நீண்ட காலம் பழகியது போல் உணர்வுகளையும் உரிமைகளையும் எடுத்துக்கொண்டு கலகல என்று அவர் கொட்டிய அன்பு மொழிகள் அப்படியே என் கண் முன் தெரிகிறது.

அன்புத்தோழர் பாமரனை வாழ்க்கையில் அவர் சுமந்தார். இணையர்களுடன் சந்திப்பில் இடைவெளி விழுந்து விட்டது. ஆனாலும் இதயம் ஏற்றுக் கொண்டவர்களை இந்த இடைவெளிகள் எப்போதும் பாதிப்பதே இல்லை. அன்புத்தோழர் தங்கவேலுவிடம் விசாரித்துக் கொண்டே இருப்பேன். பாமரன் இந்த இழப்பை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் கலங்குகிறது. அவரிடம் ஆறுதல் கூறுவதற்கு எனக்குத்துணிவு வர மறுக்கிறது, அவரது துயரங்களை மனச்சுமையோடு பகிர்ந்துகொள்கிறேன் என்ற வார்த்தைகளைத்தான் என்னால் பதிவு செய்ய முடிகிறது ” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெரியார் முழக்கம் இதழ் 01012026

You may also like...