குடிமங்கலத்தில் பெரியார் நினைவுநாளில் ஜாதி எதிர்ப்பு பரப்புரை
குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று “மனிதம் நமது அடையாளம் ; ஜாதி என்பதுஅவமானம்” எனும் தலைப்பில் மடத்துக்குளம் ஒன்றிய மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கணக்கன் (மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர்) தலைமை தாங்கினார். சிவானந்தம் (மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்), கடத்தூர் அய்யப்பன் (மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 11:00 மணிக்கு குடிமங்கலம் நான்கு சாலை சந்திப்பு, மதியம் 12.00 மணி அளவில் கொங்கல் நகரம் பேருந்து நிறுத்தம் அருகில், மாலை 03.00 மணியளவில் பெதப்பம் பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் என் மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. துரைசாமி (கழகப் பொருளாளர்), பரிமள ராசன் (சமூக வலைதள பொறுப்பாளர்), முகில் ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), தமிழ் அமுதன் ( மார்க்சிய சிந்தனையாளர்), வழக்கறிஞர்.பெரியார்தாசன் (ஆதித்தமிழர் பேரவை), ஈழவேந்தன் (ஆ.த.பே.மாநில அமைப்புச் செயலாளர்), கௌசல்யா காந்தி (மாவட்டச் செயலாளர் தாராபுரம் தி.வி.க) செல்வராஜ் (பெரியாரிய உணர்வாளர்) தாராபுரம் ராஜாமணி ஆகியோர் உரையாற்றினார்கள்.
தி.மு.க. பொறுப்பாளர் தோழர் கோபால கிருஷ்ணன் ரூ.1000 நன்கொடை வழங்கினார். தோழர் சுரேஷ் அனைவருக்கும் தேநீர் வழங்கினார். பொதுமக்கள் 1750 ரூபாய் நன்கொடை அளித்தனர். தெருமுனைக் கூட்டங்களை மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் நெறியாள்கை செய்தார். அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழர்கள் ஈழமாறன், யாழிசை, யாழினி ஆகியோர் பங்கேற்றனர்.
மடத்துக்குளம்: ஒன்றிய கழகத்தின் சார்பில் பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று உடுமலை கோட்டமங்கலம் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு கழகப் பொருளாளர் தோழர் துரைசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. சசிகலா(சிபிஎம்), செல்வராஜ் (இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்), குப்புசாமி என்கிற அய்யனார், சுசீலா (மாதர் சங்க ஒன்றியச் செயலாளர்) முருகன் (சிபிஎம்) ஆகியோர் பங்கேற்றனர்.
கொளத்தூர்: தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாளையொட்டி, கொளத்தூர் சோதனை சாவடி அருகே, ஒன்றிய கழகத்தின் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரியார் முழக்கம் இதழ் 08012026
