இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது.

சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

சனவரி 26: பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுக்கு சென்னை ராயப்பேட்டையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பேராசிரியர் ஜெயரஞ்சன், மூத்த வழக்குரைஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், எழிலன் எம்.எல்.ஏ, மரு. அமலோற்பவநாதன், மனநல மருத்துவர் சிவபாலன், மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன், பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

சனவரி 30: கோவை சிவானந்தா குடியிருப்புப் பகுதியில் கழகத்தின் சார்பில் ‘தமிழீழமும் திராவிடர் இயக்கமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

பிப்ரவரி 1: பல்கலைக்கழக மானியக்குழு விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்து, பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்ததைக் கண்டித்து கழகத்தின் சார்பில் சேலம், சென்னை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, தேனி, மயிலாடுதுறை, வேலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், மதுரை, திருச்சி காஞ்சிபுரம் என தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பிப்ரவரி 02: பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவுநாளையொட்டி 26-வது நிமிர்வோம் வாசகர் வட்ட கூட்டம் ராயப்பேட்டை விஜய் மகாலில் நடைபெற்றது. ஊடகவியலாளர்கள் கரிகாலன், மில்ட்டன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பிப்ரவரி 22: தூத்துக்குடியில் ‘திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

பிப்ரவரி 22: கோபியில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் தலைமையில் ‘பெரியார் என்னும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் நடைபெற்றது. ஊடகவியலாளர்கள் கரிகாலன், இந்திரகுமார் தேரடி, மில்டன், யூ2புரூடஸ் மைனர், அதர்மம் மனோஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

பிப்ரவரி 23: புதுக்கோட்டையில் ‘ஏன் வேண்டும் பெரியார்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஊடகவியலாளர் கரிகாலன், அதர்மம் மனோஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

பிப்ரவரி 26: இந்தித் திணிப்பு, வெள்ள நிவாரண நிதி மறுப்பு என தமிழர் விரோதப் போக்குடன் செயல்படும் பா.ஜ.க. அரசை கண்டிக்கும் விதமாக, கோவை ஈஷா மையத்திற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

மார்ச் 15 முதல் சென்னை, விழுப்புரம், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து ‘பெரியார் இன்னும் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?’ என்ற தலைப்பில் பரப்புரைப் பயணம் தொடங்கி, மார்ச் 22 அன்று மயிலாடுதுறையில் மாநாட்டுடன் முடிவுற்றது. தமிழ்நாடெங்கும் 500 இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் பேராதரவோடு நடைபெற்றன.

ஏப்ரல் 8 – 14: ‘சூத்திர, பஞ்சமர்களிடமிருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்று இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு’ என்ற மயிலாடுதுறை மாநாட்டுத் தீர்மான விளக்க பரப்புரைக் கூட்டங்கள் சென்னை, திருப்பூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற்றன.

ஏப்ரல் 20: சேலம் மாவட்டம் மேச்சேரியில் இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு’ என்ற மயிலாடுதுறை மாநாட்டுத் தீர்மான விளக்க பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி கருத்துரையாற்றினார்.

ஏப்ரல் 21: மயிலாடுதுறை மாநாட்டு தீர்மானத்தின்படி, இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரியை கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றார். கோவை, நாமக்கல், ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, திருப்பூர், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 25, 26: நியமனப் பொறுப்பில் வரும் ஆளுநர்களை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் என துணைவேந்தர்கள் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னரும் உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியதை அடுத்து, ஆர்.என்.ரவியை கண்டித்து சேலம், மதுரை, சென்னை, கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 26: இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரியைக் கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 28: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில், ‘இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு’ என்ற மயிலாடுதுறை மாநாட்டுத் தீர்மான விளக்க பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் சிறப்புரையாற்றினார். ‘இன ஒதுக்கல் கருத்தைப் பேசிய சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு’ என்ற மயிலாடுதுறை மாநாட்டுத் தீர்மான விளக்கம் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

ஏப்ரல் 30: தோழர் பத்ரி நாராயணன் நினைவுநாளையொட்டி ‘கற்போம் களம் காண்போம்’ என்ற தலைப்பில் சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பில் முழு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கழகத் தோழர்கள் பிரகாசு, ஜெயப்பிரகாசு, மகிழவன், திமுக சூர்யா கிருஷ்ணமூர்த்தி, ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர்.

மே 03: தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் ‘திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

மே 03: ‘ஏன் வேண்டும் திராவிட மாடல் ஆட்சி’ என்ற தலைப்பில் கோவை சின்னியம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வடகாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொங்கல் விழா நடத்தியதற்காக ஆதிக்க ஜாதியினர் கொடூரமான தாக்குதல் நடத்தினர். திவிக தோழர்கள் வடகாட்டில் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு, நீதி கிடைக்க துணைநிற்போம் என உறுதி அளித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சீர் வாசகர் வட்டம் சார்பாக 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் போராளி விருது அறிவிக்கப்பட்டது.

மே 9: திருவாரூர் தங்கராசு நூற்றாண்டையொட்டி நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 27-வது கூட்டம் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.

மே 16: மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசிய மதுரை ஆதீனத்தை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் மற்றும் தோழமை இயக்கத்தினர் பலர் கண்டன உரையாற்றினர்.

மே 17: தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து சென்னை ராயப்பேட்டையில் குழந்தைகளுக்கான ஒரு நாள் பழகு முகாம் நடத்தியது. ஆசிரியர் சிவகாமி, முத்துராணி, விரட்டு கலைக்குழு ஆனந்த் பயிற்சி வழங்கினர். சிற்பி ராஜனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மே 18: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் நாகர்கோவிலில் திரை நட்சத்திர இசை விழா நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கழகத் தலைவர் வேண்டுகோளை அடுத்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

மே 24: சேலம் மாவட்டம் கொளத்தூரில் பெண்கள் தலைமையேற்று நடத்திய நாத்திகர் விழா நடைபெற்றது. இவ்விழாவின் மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலக் காட்சிகள் மற்றும் மாநாட்டு உரைகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி விவாதத்தை ஏற்படுத்தியது.

சூன் 01: ‘இடஒதுக்கீடு – அ முதல் ஃ வரை’ என்ற தலைப்பில் கழகத் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் புதிய தோழர்களுக்கான அறிமுக வகுப்பு நடைபெற்றது.

சூன் 01: மடத்துக்குளம் மோகன் 4-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மடத்துக்குளம் நான்கு சாலை சந்திப்பில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. குமரலிங்கம், கொழுமம், காரத்தொழுவு, கணியூர் ஆகிய இடங்களில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரியை கண்டித்து பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. 20 ஆண்டுகளாக சரித்திர குற்றவாளி பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் சட்டப் போராட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டார்.

சூன் 10: ஆனைமலை முக்கோணம் பகுதியில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் சிவகாமி, இரா.உமாபதி, காசு.நாகராசன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

சூன் 12: மேட்டூர் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தாய்த்தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு ‘அறிவரண் தளபதி பொட்டு அம்மான்’ நூலை வெளியிட்டார். இனமுரசு சத்யராஜ் நூலைப் பெற்றுக்கொண்டார்.

சூன் 21: பாலஸ்தீன ஆதரவுக்குழு சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் ரவுண்டானா வரை பேரணி நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

கோவை சிவானந்தா குடியிருப்புப் பகுதியில் கழகத்தின் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.

சூன் 25: வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தபசி குமரன் தலைமையில் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சூலை 04: புரட்சிப்பெரியார் முழக்கம் நிதிநிலை மற்றும் வளர்ச்சி குறித்து இணைய வழியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

சூலை 05: நங்கநல்லூரில் குடிஅரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆகியோர் உரையாற்றினர்.

சூலை 05: ‘இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் சேலம் பொன்னம்மாபேட்டையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

சூலை 07: கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி, ஒன்றிய அரசைக் கண்டித்து மதுரை திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் மதக் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார் அமைப்புகளைக் கட்டுப்படுத்தக் கோரி சென்னை மற்றும் ஈரோடு தெற்கில் காவல்துறையிடம் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 28-வது கூட்டம் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். எட்வின் பிரபாகரன், பிரகாசு ஆகியோர் நூல் திறனாய்வு செய்தனர்.

சூலை 12: ‘இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் சேலம் அம்மாபேட்டையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

சூலை 26: தாய்த்தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் உருவான காட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். தோழர் தியாகு பெற்றுக்கொண்டார்.

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 29-வது கூட்டம் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் தலைமையில் வேலு பிரபாகரன் நினைவேந்தல் கூட்டமாக நடைபெற்றது. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் வேலு பிரபாகரனின் கொள்கைசார் பணிகளை பகிர்ந்துகொண்டனர். நெல்லையில் பொறியியல் பட்டதாரி கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து கழகத் தலைவர் அறிக்கை, கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து கோவை உக்கடத்தில் மடியட்டும் ஆணவப் படுகொலைகள்; மனிதம் நம் அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

சூலை 27: சாலிகிராமத்தில் நடைபெற்ற வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், இனமுரசு சத்யராஜ், கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

பெரியார் முழக்கம் இதழ் 08012026

You may also like...