பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது கொடுத்தது சரியே! பெரியார் விருதை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 5,00,000 விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப் படுகிறது. கடந்த ஆண்டு (2024) திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் புது வெண்ணாம்புதூர் என்ற ஊரைச் சார்ந்த டி. ஸ்ரீதர் என்பவர் பெரியார் பெயரில் விருது வழங்கக்கூடாது என்று ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதேபோல, விடுதலை இராசேந்திரன், கலி பூங்குன்றன், சுப.வீர பாண்டியன் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கியது தகுதியானது அல்ல என்றும், மூவருக்கும் வழங்கப்பட்ட விருதுகளைத் திரும்பப் பெற்று புதிதாகத் தகுதி பெற்ற நபர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மீண்டும் முறையீடு செய்தார். பெரியார் விருதே கூடாது என்று ரிட் மனு தாக்கல் செய்த இந்த நபர், தான் பல்வேறு சமூகப் பணிகளை செய்வதாகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், தனக்கு ‘பெரியார் விருது’ வழங்க வேண்டும் என்றும் முறையிட்டார்.
மேலும், நடப்பாண்டுக்கான பெரியார் விருது விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக தமிழ்நாடு அரசு டிசம்பர் 9-ஆம் தேதி அறிவித்தது. தான் தொடர்ந்த ரிட் மனு நிலுவையில் இருப்பதால், இந்த அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்றும் மனுதாரர் முறையிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா அவர்கள் முன்பு 09.01.2026 அன்று விசாரணைக்கு வந்தது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சார்பில் கழக வழக்குரைஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பிரதான வழக்கை விசாரிக்கலாம் என வழக்குரைஞர் திருமூர்த்தி முறையீடு செய்தார். அதனை ஏற்றுக்கொண்டு பிரதான வழக்கை நீதிபதி விசாரித்தார். அப்போது, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் பெரியாரின் கொள்கைகள், சமூக நீதி லட்சியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர். பெரியாரிய கொள்கைகளை செயல்படுத்துவதற்காக களத்தில் அயராது செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கி அனைவரும் மக்கள் மத்தியில் பரப்புவதற்கு வழிவகை செய்துள்ளது. அத்தகைய களப்போராளிக்கு பெரியார் விருது கொடுத்ததில் என்ன தவறு?” என்று அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தார்.
தோழர் திருமூர்த்தியின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி. ஆஷா, விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு பெரியார் விருது கொடுத்தது சரிதான் என ஏற்றுக்கொண்டு, ரிட் மனுவையும் சேர்த்து தள்ளுபடி செய்தார். பெரியார் பெயரில் விருது தரக்கூடாது என்ற சங்கிகளின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளார் தோழர் வழக்குரைஞர் திருமூர்த்தி. அவருக்கு நமது பாராட்டுகள்!
பெரியார் முழக்கம் இதழ் 15012026
