சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம்!
காஞ்சிபுரம் மாவட்ட மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக புதிய சிந்தனையாளன் பொங்கல் மலர் – 2026 வெளியீட்டு விழா, தன்னுரிமைத் தமிழ்தேசம் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம் 04.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், இந்திரா காந்தி சாலை (நெல்லுக்காரத் தெரு) – வில் உள்ள இராஜாஸ் லாட்ஜில் நடைபெற்றது.
வாலாசா வல்லவன் (மா.பெ.பொ.க துணைப் பொதுச் செயலாளர், புதிய சிந்தனையாளன்-ஆசிரியர்) தலைமையேற்று உரையாற்றினார். முருகேசன் (மா. பெ. பொ. க திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார்.
முகிலன் (மா.பெ.பொ.க தலைமைக் குழு உறுப்பினர்) தொடக்கவுரையாற்றினார்.
வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர். கருணானந்தம் சுயமரியாதை இயக்கத்தின் தேவையும் எதிர்காலமும் என்ற தலைப்பில் ஜாதி ஒழிப்பு மற்றும் சமத்துவம், பெண் விடுதலை, பகுத்தறிவுப் புரட்சி, பொருளாதார சமத்துவம், மனித மாண்பு ஆகியவற்றை தேவையாகவும், தொடர்ச்சியான விழிப்புணர்வு, அரசியல் மற்றும் சமுக நீதி, பகுத்தறிவு பரப்புரை, சமூக மாற்றத்திற்கான கருவி ஆகியவற்றை எதிர்காலமாகவும் மனிதன் முழுமையான சமத்துவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழும் வரை அதன் தேவையும், எதிர்காலப் பணிகளும் தொடரும் என்பதைச் சொல்லி கருத்துரையாற்றினார்.
ஊடகவியலாளர் சுகுணா திவாகரன் ‘சுயமரியாதை இயக்கம் இருப்பும் நம் பொறுப்பும்’ என்ற தலைப்பில் பிறப்பால் யாரும் உயர்ந்தவர் இல்லை என்ற தத்துவத்துடன், சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்து, தமிழ்நாட்டின் அரசியல், பண்பாடு, சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு புரட்சிகர சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிக் கூறி கருத்துறையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுயமரியாதை இயக்கம் ஒரு மீள்பார்வை என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்க வரலாற்றையும், இயக்க நூற்றாண்டு விழாவை மகிழ்ச்சியோடு எடுப்பதோடு மட்டும் இல்லாமல் பொறுப்போடு, மிகுந்த அக்கறையோடு சிந்திக்க வேண்டும் என்றும், எந்தெந்த வழிகளில் எடுத்துச் செல்லலாம் என்றும், இப்போது ஓரளவுக்கு நமக்கு உடன்பாடாக இருக்கிற திராவிட மாடல் அரசை நம் கொள்கைக்காக பயன்படுத்திக் கொள்வதைப் பற்றியும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைப் பற்றியும் எல்லாம் பேச வேண்டிய தேவையாக இருக்கிறது எனக் கூறி நிறைவுரையாற்றினர்.
காஞ்சிபுரம் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ரவிபாரதி, ஏழுமலை, ராமஜெயம், மற்றும் மா. பெ. பொ. கட்சியினர், விசிக-வினர் மற்றும் இடதுசாரி அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15012026
————————————————-
