இந்தியை ஆதரிக்கவில்லையா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (8) – கொளத்தூர் மணி

தோழர் பொன்னீலனின் அதே நூலில் “1953 அக்டோபரில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளத்துக்கே உரியன” என்ற கருத்தை கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் வெளியிட்டார். இதை எதிர்த்து அக்டோபர் 14 தாமரை குளத்தில் ஆர்.சோமசுந்தரம் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜீவா இவ்வாறு கூறினார்: “தேவிகுளம் பீர்மேடு சம்பந்தமாக ஸ்ரீ ஏ.கே. கோபாலன் கூறியது அவரது சொந்த கருத்து. கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக கருத்து வெளியிடாமல் இருப்பது வரையிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் அவர்கள் கூறுவது கட்சியின் முடிவாகாது. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை ‘எல்லைக் கமிஷன் முடிவுக்கு விட வேண்டியது அவசியம்’ இதுதான் கட்சியின் கருத்து” என்று கறாராக அறிவித்து விடுகிறார்.

வெண்டைக்காய் பதில்

ஆனால் ‘சரியில்லாத ஈரோட்டு பாதை’ காட்டிய பெரியாரின் ‘விடுதலை’ ஏடு அதன் 22.11.1955 இதழில் “தேவிகுளம், பீர்மேடு தமிழ் வட்டாரங்களே! சென்னை சட்டசபையில் அமைச்சர் தந்த புள்ளிவிவரம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்து ஜீவாவின் வழவழா உரையைச் சுட்டிக்காட்டி 23.11.1955 நாளிட்ட விடுதலை இதழில் “கம்யூனிஸ்ட் கட்சியின் வெண்டைக்காய் பதில்” என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது. 24.11.1955-ல் நடந்த வாக்கெடுப்பில் கம்யூனிஸ்ட்களின் நிலை குறித்து “தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களின் துரோகம்! தமிழக பிரச்சினையில் மதில் மேல் பூனையாகினர். தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டுக்கே என சட்டசபை முடிவு” என்ற தலைப்பிலும் 25.11.1955 இதழின் முதல் பக்கத்தில் ஆறு காலம் செய்தியாக (விடுதலை இதழில் ஆறு காலங்கள் மட்டுமே உண்டு) வெளியிடப்பட்டுள்ளது. 26.11.1955 விடுதலை இதழில் “சட்டசபைத் தீர்மானம் என்ற தலைப்பிட்டும் எழுதப்பட்ட தலையங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளது.

ஜீவாவின் வடக்கெல்லை நிலைப்பாடு!

அடுத்து வடக்கெல்லைப் போராட்டம் குறித்து ஜீவாவின் நிலைப்பாட்டை பார்ப்போம். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர் மாவட்டம் ஆந்திராவோடு இணைப்பதாக மாநில சீரமைப்புக் குழு அறிக்கை வெளியிட்டிருந்ததைக் கண்டித்து தமிழ்நாட்டு தலைவர்கள் அனைவரும் சித்தூர் மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர்; போராடினர்.

வடக்கு எல்லைப் போராட்டத்திலும் ஜீவா இருந்தாராம். ஆனால் 26.07.1952 ‘ஜனசக்தி’யின் “புதிய தமிழகம்” என்ற தலைப்பிலான தலையங்கத்தில் ஜீவா எழுதியிருந்த சில பகுதிகளைப் பார்ப்போம். “திருப்பதி வரையில் சித்தூர் ஜில்லாவின் பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் சிறிதும் நியாயம் இல்லை. சித்தூர் ஜில்லாவும் திருப்பதியும் ஆந்திரர்களுக்கே உரியது என்று தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி 1948லேயே மிக விளக்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையை ஆந்திரர்கள் கோருகிற தவறுக்குக் குறையாத தவறு” என்கிறார்.

தலையங்கத்தின் மற்றொரு இடத்தில் “அதே மாதிரி திருவாங்கூர் ராஜ்யத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் (ஊர் பெயரோ தாலுகா வட்டம் பெயரோ குறிப்பிடாமல்) தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட வேண்டும் என்று கேரள கம்யூனிஸ்ட் கட்சியும் 1947-ஆம் ஆண்டிலேயே தெள்ளத் தெளிவாக பிரகடனம் செய்துள்ளது” என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்ளுகிறார் ஜீவா. ஆனால் 1948-இல் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம் மட்டும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆந்திரா குறித்த சட்டமன்ற விவாதத்தில் ஏற்றுக்கொண்டது. ஆனால் 1947-ஆம் ஆண்டிலேயே கேரள கம்யூனிஸ்ட் கட்சி தெள்ளத்தெளிவாக செய்த பிரகடனம், கேரளப் பகுதிகள் பற்றிய சட்டமன்றத் தீர்மானத்தின்போது கேரள கம்யூனிஸ்ட் கட்சி உதாசீனம் செய்தபோதும், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஜீவாவும் மற்ற 12 பேரும் நடுநிலை வகிக்க கேரள கம்யூனிஸ்ட் ஆகிய அனைவரும் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

இந்திக்குப் பொதுத்தேவை உள்ளதா?
1957 டிசம்பர் கடைசி வாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரதிகளின் விசேஷ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி ஜீவாவின் உரை “ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சனையும்” என்ற தலைப்பில் 1948 ஜனவரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி வெளியிட்ட நூலில் “நீங்கள் நிதானமாக சிந்தித்துப் பார்த்தால், ஈ.வெ.ரா. மாறி மாறிப் பேசுவதிலும் முன்னுக்குப் பின் முரணாக செயல்படுவதிலும் உள்ள உள்நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும்” என்கிறார் ஜீவா. ஆனால் ஜீவாவின் பேச்சில், நடைமுறையில் முன்னுக்குப் பின் முரண் உள்ளதா? என்பது ஏனோ ஜீவாவின் தோழர்களுக்குப் புரியுமா புரியாதா? என்பது மட்டும் நிதானமாக சிந்தித்துப் பார்த்தாலும் உள்நோக்கம் புரிய மாட்டேன் என்கிறது.

அதே நூலில் “மத்திய சர்க்கார் இணைப்பு மொழியாகவும், மத்திய – ராஜ்ய சர்க்கார் (ஒன்றிய- மாநில அரசுகள்) இணைப்பு மொழியாகவும், இந்திய மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒற்றுமைக்குத் துணைமொழியாகவும், இருக்க வேண்டிய அளவே இந்திக்குப் பொதுத்தேவை இருக்கும்” என்று “பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் தொடர்புமொழியாக ஆங்கிலமே போதுமே” எனும் சரியில்லாத(!) ‘ஈரோட்டுப் பாதை’யைப் போல அன்றி, பிற மாநிலங்களுக்கு இந்தியும், பிற நாடுகளுக்கு ஆங்கிலமும் தேவை; எனவே தாய்மொழி மட்டுமின்றி வேறு இரண்டு மொழிகளைக் கற்றால் என்ன? என்று கேட்கும் மோடிஜி போலவே சரியான(?) பாதையைக் காட்டிய ஜீவாவின் சிறப்பே தனிச் சிறப்புதான்!
தொடரும்..
Box
“திருப்பதி வரையில் சித்தூர் ஜில்லாவின் பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் சிறிதும் நியாயம் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையை ஆந்திரர்கள் கோருகிற தவறுக்குக் குறையாத தவறு” என்கிறார் ஜீவா.

பெரியார் முழக்கம் இதழ் 25122025

You may also like...