ராமர் கால வரலாறு திரும்பாது!

மகளிர் உரிமை திட்டத்தை ஒரு கோடியே 30 லட்சம் பெண்களுக்கு விரிவுப்படுத்தி இருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. உணர்வு பூர்வமாக நடந்து முடிந்துள்ள “வெல்லும் தமிழ் பெண்கள்” விழாவில் பெண்களின் அடையாளமாக கும்மியும் கோலாட்டமும் இல்லாமல் வீரத்தையும் விளையாட்டையும் முன்னிறுத்தி பயனாளிகளின் நெகிழ்வான உரைகளோடு நடந்து முடிந்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் பெண்கள் உரிமைத் திட்டங்களை இப்போது 10 மாநில அரசுகள் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன. இதில் பாஜக ஆளும் மாநிலங்களும் உண்டு.
சனாதனமும் மனுதர்மமும் பார்ப்பனியமும் ஒரே நேர்கோட்டில்தான் பயணிக்கின்றன. இதற்கான அரசியல் வடிவம்தான் இந்துத்துவம். இந்துத்துவக் கருத்துகளை வழங்கிய பார்ப்பனர்கள், சாவர்க்கரும் கோல்வாக்கரும். பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் வர்ணாசிரம சமூக அமைப்பை வலிமையாக ஆதரித்தவர்கள்.
வர்ணாசிரமம் பெண்களை அடிமையாக்கியது; பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும் அவர்கள் பிராமணர்களாக முடியாது; பூணூல் போட முடியாது; சூத்திரர்கள் தான் என்று பறைசாற்றியது. கல்வி உரிமையையும், சொத்து உரிமையையும் மறுத்தது. அதன் காரணமாகத்தான் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவது இல்லை.
பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு திட்டமும் சனாதனத்தின் மீதும் பார்ப்பனியத்தின் மீதும் விழுகிற மரண அடி இந்துத்துவ அரசியலின் தோல்வி வர்ணாசிரம கட்டமைப்பை சீர்குலைக்கும் சமூக நீதித் திட்டமான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வெளிப்படையாக எதிர்க்க முடியாமல் திணறுகிறது இந்துத்துவ அரசியல்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று ஜாதி சங்கங்களை தடை செய்திருக்கிறது உ.பி மாநில பாஜக ஆட்சி. பார்ப்பனியம் மனுநீதி வழியில் சமூகத்தில் திணித்த குழந்தைகள் திருமணம் எனும் கொடுமையை எதிர்த்து ராஜஸ்தான் மாநிலத்தில் 100 நாள் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது பாஜக ஆட்சி. அதிக குழந்தைகளைப் பெற்று இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நிராகரித்து இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை; தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் இயற்றி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் நடக்கும் ஹிமாஸ்பிஸ்வானின் பாஜக ஆட்சி வளர்ச்சி நோக்கிய சமூகப் போக்கில் காலாவதியாகி வருகிறது.
இந்துத்துவா சனாதன வர்ணாசிரமக் கொள்கைகள் திராவிட மாடல் ஆட்சியின் மகளிர் உரிமைத் திட்டம்தான், தங்களைக் காப்பாற்றும் என்று, கடைசி நேரத்தில் பெண்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து ஆட்சியைப் பிடித்தது பீகாரில் பாஜக அணி. இஸ்லாமிய எதிர்ப்பு, கிருத்துவ எதிர்ப்பு, நேரு எதிர்ப்பு என்று வெறுப்பு அரசியலை வைத்து இந்துத்துவ அரசியலைக் காப்பாற்றத் துடிக்கிறது மோடி ஆட்சி. உறுதியாகக் கூறுவோம்: வரலாற்றை ராமர் காலத்துக்கு இழுத்துச் செல்ல முடியாது.
பெரியார் முழக்கம் இதழ் 18122025

You may also like...