கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆள்பிடித்தாரா பெரியார்? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (9) – கொளத்தூர் மணி

தோழர் ஜீவாவால் எழுதப்பட்ட ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூல் 1947 டிசம்பர் முதல் 1948 பிப்ரவரி முடிய மூன்று மாதங்கள் பொதுவுடைமை இதழான ‘ஜனநாயகத்’தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதை நாம் முன்னரே பார்த்தோம். அதில் 1946-இல் நடந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலையொட்டி எழுதப்பட்ட சில செய்திகளை அந்த நூலில் இருந்து எடுத்து, கீழே கொடுத்திருக்கிறோம்.
“ஜாதி ஒழிப்பு, மதவொழிப்பு விஷயங்களை முக்கியப்படுத்தி திராவிடர் கழகத்தில் நல்ல அபிப்பிராயத்தோடும், பற்றுதலோடும் இருந்த இளைஞர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களைக் கண்டு புத்துணர்ச்சி அடைந்து வந்ததைத் தடுக்க நயமான முறைகளில் சூழ்ச்சி செய்தது. ‘ப.ஜீவானந்தம் நம் ஆள்தான்’ என்றும் ‘கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசமில்லை” என்றும் பொதுவுடைமை ஆர்வமுள்ள வாலிபர்களைத் திராவிடர் கழகம் வலை வீசிப்பிடிக்க முயன்றது” என்கிறார் ஜீவா.
ஜீவா எழுதியதை நம்பி ஏற்றுக்கொண்டால், அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது; மக்களின் ஆதரவைப் பெற்று இருந்தது; அதனால் மக்கள் ஆதரவற்ற திராவிடர் கழகத்தார் பொய்யாக ஜீவானந்தம் நம்மாள்தான் என்று ஜீவாவின் பெயரைச் சொல்லியும், பொதுவுடைமைக் கட்சிக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை என்று பொய்யாகச் சொல்லியும் பொதுவுடைமையில் ஆர்வம் உள்ள வாலிபர்களைத் திராவிடர் கழகத்தில் சேர்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது போலாகிறது.
வலைவீசினாரா பெரியார்?
சரி, இதுகுறித்து திறனாய்வதற்கு முன்னால் இரண்டு செய்திகளைப் பதிவுசெய்ய விரும்புகிறோம். 1957-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில், திருச்சியில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரதிநிதிகளின் விசேஷ மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றை விளக்கி தோழர் ஜீவா, தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவே இப்பிரசுரம் என்று, 1958-ஆம் ஆண்டு ஜனவரியில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் ‘ஜாதி ஒழிப்பும், மொழிப் பிரச்சனையும்’ என்ற தலைப்பில் ஒரு நூலினை வெளியிட்டு இருக்கிறது. அந்த நூலின் 6,7-ஆம் பக்கங்களில் உள்ள செய்திகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம்.
“நான் ஆரம்பத்தில் கூறியவாறு, உலகத்தில் மூன்றில் ஒரு நிலப்பரப்பிலே உலக மக்களில் ஐந்தில் இரு பங்கு மக்களுக்கு நமது செங்கொடி ஆட்சிக்கொடியாக இருப்பதுடன் மூன்று கோடியே 30 லட்சம் கம்யூனிஸ்ட் சங்கத்தினர்கள் அணிவகுத்திருப்பதாகவும் குறிப்பிட்டேன். இந்த மகத்தான, பொழுதொரு வண்ணமாக, பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் இயக்கத்தின் ஒரு பகுதிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி; அதன் ஒரு பகுதிதான் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி. உலகம் முழுவதிலும் வீசும் வீச்சு இந்தியாவிலும் தமிழகத்திலும் 70 ஆயிரம் அங்கத்தினர்களைக் கொண்டதாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இலட்சம் கொண்டதாகவும், 5,000 அங்கத்தினர்களாக இருந்த தமிழ்நாடுப் பகுதி கம்யூனிஸ்ட் கட்சி 20,000 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டதாகவும் வளர்ந்திருக்கிறது” என்று அச்செய்தியில் பதிவாகியுள்ளது.
இந்த பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகும் இளைஞர்களைத் தடுத்து திராவிடர் கழகம், ‘ப.ஜீவானந்தம் நம் ஆள்தான்’ என்றும் “கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசமில்லை” என்றும் பொதுவுடைமை ஆர்வமுள்ள வாலிபர்களை திராவிடர் கழகம் வலை வீசிப்பிடிக்க முயன்றது என்று அங்கலாயத்து 1948லேயே எழுதியிருக்கிறார்.
இந்த செய்திகளின் உண்மைத் தன்மையைக் கொஞ்சம் திறனாய்வோம்!
1938 டிசம்பரில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி சிறையிலிருந்த பெரியாரை நீதிக்கட்சியின் மாநாட்டில், அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. நீதிக்கட்சியின் தலைமையைப் பெரியார் ஏற்ற பின்னால் அது தேர்தல் நிற்காத கட்சியாக இயங்கும் என்று முடிவெடுக்க வைத்ததால், அரசியல் அபிலாசை உள்ளவர்கள் அத்தனை பேரும் விலகிச் சென்று விட்டார்கள். அதுகுறித்து கவலைப்படாமல் சுயமரியாதை இயக்கமாக இயங்கியத் தோழர்களைப் பெரிதும் கொண்டுதான் 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் ‘திராவிடர் கழகம்’ என்ற புதிய பெயர் தாங்கி இயங்க முடிவெடுத்தது. கழகத்திற்கு முறையாக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதால் உறுப்பினர் படிவம், அதைக் கொண்டு உறுப்பினர் அட்டை போன்ற முறைகளில் உறுப்பினர்களைச் சேர்க்க தொடங்கியிருந்தார்கள்.
திராவிடர் கழகத்தின் பலம்!
அந்த அடிப்படையில் 1946-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வெளியான ‘விடுதலை’ நாளேட்டில், ‘கடந்த வாரம் நடந்த திராவிடர் கழகத்தின் மையக்குழு கூட்டத்தின்’ தீர்மானங்களைப் பற்றி விளக்கி விட்டு, உறுப்பினர் சேர்க்கை பற்றி எழுதுகிறபோது, “கழகத்திற்கு அங்கத்தினர் சேர்ப்பதில் இதுவரை 35,000 மெம்பர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இனி 65,000 அங்கத்தினர்கள் சேர்க்கப்பட வேண்டும்; முன் சேர்க்கப்பட்டிருக்கும் நண்பர்களிடமிருந்து 1946 வருட சந்தா தொகை வசூலிக்கப்பட வேண்டியதும் ஆகும்” என்று செய்தி வந்திருப்பதைக் காணும்போது 1946 ஜனவரியில் திராவிடர் கழகத்தின் உறுப்பினர் அட்டையோடு இருந்த உறுப்பினர்கள் 35,000 பேர் என்பதை அறியமுடிகிறது.
ஆனால், 1958 ஜனவரியில் வெளியான நூலில் அல்லது 1957 டிசம்பரில் ஆற்றிய உரையில் 5,000 அங்கத்தினர்களாக இருந்த தமிழ்நாடுப் பகுதி (கம்யூனிஸ்ட்) கட்சி 20,000 அங்கத்தினர்களைக் கொண்டதாகவும் வளர்ந்திருக்கிறது என்று பெருமைப்பட கூறியிருப்பதையும் முன்னர் பார்த்தோம்.
1946-ஆம் ஆண்டிலேயே 35,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்த திராவிடர் கழகம் 1958-ஆம் ஆண்டில் 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியில் இருந்து ஆள் பிடிக்க முயற்சித்தது என்பது எவ்வளவு நகைப்புக்குரியது, வேடிக்கையானது, விநோதமானது என்பதுதான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
மற்றொரு நிகழ்வையும் பார்ப்போம். 1948-ஆம் ஆண்டு மே மாதம் 8, 9 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் நடந்தேறிய திராவிடர் கழகத்தின் 18-வது திராவிடர் கழக மாகாண மாநாடு குறித்த செய்திகள் ‘குடிஅரசு’ ஏட்டின் 15.5.1948 இதழில் வெளிவந்துள்ளது. அதன் ஆறாம் பக்கத்தில் காணப்படும் செய்தித் தொகுப்பில் “பந்தலுக்குள் 82,500 பேர் அமர முனிசிபாலிடியார் லைசன்ஸ் கொடுத்து இருந்தாலும் ஒன்றரை லட்சத்திற்கு அதிகமான ஆண்களும் பெண்களும் குழுமியிருந்தார்கள். பந்தலின் அளவில் ஆறில் ஒரு பங்குக்கு அதிகமாக பெண்கள் திரண்டு இருந்தார்கள் என்றால், பெண்கள் எத்தனை ஆயிரம் பேர் இருக்கலாம் (25,000) என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்” என்று காணப்படுகிறது.
1948 மே மாதத்தில் நடந்த தூத்துக்குடி மாநாட்டை அடுத்து, ஈரோட்டில் 1948 அக்டோபர் மாதம் 19-ஆவது மாகாண (சிறப்பு) மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பெரியார் உரையைக் கேட்டாலே அப்போது இயக்கத்தின் நிலை என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
“இம்மாநாட்டைக் கூட்டுவதற்கு மூல காரணஸ்தனும் அதில் அதிக பங்குள்ளவனும் பொறுப்புடையவனும் நான் தான். இந்த மாநாட்டை இங்கேயே கூட்ட வேண்டும் என்று தீர்மானித்ததற்கும் அதிகமான பொறுப்பு உடையவன் நான்தான். காரியதரிசி என்றும், வரவேற்பு கமிட்டித் தலைவர்கள் என்றும் பல பொறுப்புகள் பிறர் பெயரால் இருக்கிறது என்றாலும் முழுவதையும் நானே என் விருப்பத்தின் பேரிலேயே எடுத்துக் கொண்டேன். மேற்படி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு நடத்தியதில் எனக்கு ஏற்பட்டத் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன். தூத்துக்குடியில் எனது முடிவுரையில் ‘இனி மாநாடு நடத்துபவர்கள் மிக கஷ்டப்பட வேண்டி இருக்கும்’ என்று சூசகமாக தெரிவித்து இருந்தேன் என்றாலும், இன்று ஏற்பட்ட வசதிக் குறைவுகள் தவிர்க்க முடியாதவை என்று சொல்வதற்கில்லை. நான் ஏமாந்து போனதற்கு முக்கியக் காரணம் சமீபத்தில் தூத்துக்குடியில் பிரயாண வசதி இன்றி
(தூத்துக்குடி மாநாடு நடந்தது 8, 9-மே-1948 ஆகிய இரு நாட்கள். மே 10 அன்று தொடர்வண்டித்துறை வேலை நிறுத்தத்தால் அனைவரும் ஒரு நாள் தூத்துக்குடியிலேயே தங்கியிருந்து மே 11ஆம் நாள்தான் திரும்பமுடிந்தது) மிக கஷ்டப்பட்டு இருக்கும்போது, மேலும் அடிக்கடி பணம் செலவு செய்ய நம் தோழர்களுக்கு வசதி இல்லாதபோது, மழை ஒரு பக்கம் பயமுறுத்திக் கொண்டிருக்கும்போது மறுபடியும் மாநாட்டிற்கு இவ்வளவு பேர் வர மாட்டார்கள் என்று நினைத்து விட்டேன்.
அதை ஒட்டியே மாநாட்டுப் பந்தலையும் சாப்பாட்டுப் பந்தலையும் சிறிதாக போட்டு விட்டேன். நண்பர்கள் எனது கணக்குத் தவறு என்று எடுத்துரைத்தனர். என்றாலும் நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு ஒப்புக்கொண்டு திட்டத்தை பெருக்க நினைத்தும் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. நாலைந்து நாட்களாக மழை எதற்கும் இடங்கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஒத்தி வைக்கலாம் என்றும் யோசனை செய்யப்பட்டது. தோழர் பழனிசாமி (பெத்தாம்பாளையம்) அவர்களைக் கேட்டதற்கு அவர் முடிவு சொல்லாமல் என் இஷ்டப்படியே என்று கூறிவிட்டார். எனவே வசதிக் குறைவிலும் மாநாடு நடத்தித் தீர வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டோம். மழை தொடர்ந்து இருக்குமானால் சொற்பப் பேரே வருவார்கள் என்றும் நினைத்தேன். அதுவும் ஏமாற்றிவிட்டது. இரண்டு நாளாக 10,000 பேர், அதிகப்பட்டால் 15,000 பேர்தான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் 40,000, 50,000 பேர் கூடிவிடவே வசதிகள் மிகவும் குறைந்து போய்விட்டன. மேலும் ஊர்வலம் 5 மைலுக்கு (8 கிலோமீட்டர்) நீளமாகிவிட்டது. ஊர்வலத்திலிருந்து பசியுடன் வந்தவர்களுக்கு உடனே உணவு கிடைக்காமல் வேறு அவஸ்தை ஏற்பட்டது.
இவ்வூர் நகராண்மைக் கழகத்தவர்கள் போதிய வசதிகள் தந்து ஒத்துழைத்தும், இவ்வூர் செல்வவான்கள் எல்லோரும் எல்லா உதவிகளையும் செய்தும், வந்தவர்களுக்குப் போதிய திருப்தி அளிக்க முடியாமல் போனதற்குக் காரணம் எனது தப்புக்கணக்குதான். அதற்காக என்னை மனமார மன்னிக்க வேண்டும் என்று வணக்கத்தோடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நமது அழைப்பிற்கு இணங்கி இவ்வளவு பெருவாரியாக வந்து பெருமைப்படுத்தியதற்காக நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். கழகத்தின் சார்பாக நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறுவதில் இருந்து அந்த மாநாட்டில் கூடிய மக்களின் எண்ணிக்கையை யூகிக்க முடியும். 5 மாதங்களுக்கு முன்னர் ஒரு மாகாண மாநாட்டை தூத்துக்குடியில், மே மாதத்தில் நடத்திவிட்டு, அதுபோலவே மற்றொரு இரண்டு நாள் மாகாண மாநாட்டை அதே ஆண்டு அக்டோபரில் ஈரோட்டில் நடத்தினால் குறைவாகத்தானே வந்திருப்பார்கள். என்றாலும் குறைந்தது 40,000 பேர் திரண்டிருந்தனர் என்று கணக்கிடலாம்.
ஜீவாவின் மிகை மதிப்பீடு!
ஆனால், அதிலிருந்து 9 ஆண்டுகள் கழிந்த பின்னர், 1957-ஆம் ஆண்டு இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20,000-ஆக உயர்ந்திருக்கிறது என்று பெருமையுடன் கூறும் ஜீவாதான் கூறியிருக்கிறார், “ஜீவா நம்மாள்தான்” “கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை” என்று சொல்லி இளைஞர்களை வலை வீசித் திராவிடர் கழகம் பிடிப்பதாக, 1948-ஆம் ஆண்டிலேயே சொல்லி இருக்கிறார். அது தனது தோழர்களை உற்சாகப்படுத்த வெளியிட்ட மிகை மதிப்பீடு என்பதை தவிர வேறு எப்படித்தான் இதனைப் புரிந்துகொள்ள முடியும்?
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வலைவீசி ஆள் பிடித்தக் குற்றச்சாட்டை அடுத்து ஜீவா தனது ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ நூலில் ஈரோட்டுப் பாதை மீது வைக்கிற குற்றச்சாட்டு, ( இவ்வாறு ஆள்பிடித்தவர்கள்) 1946 சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில், என்னைப் போன்றவர்களுக்குக்கூட ஓட்டுப் போடாமல், நடுநிலைமை வகித்தனர் திராவிடர் கழகத்தார். ‘என்னைப் போன்றவர்களுக்குக் கூட’ என்ற சொல் சுட்டிக்காட்டும் பொருள்தான் என்னவோ? 1946 சென்னை மாகாண சட்டமன்றத்தேர்தலில் மொத்தமான 215 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி 103 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. போட்டியிட்ட 103 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் 1) இரயில்வே தொழிலாளர் சங்கத் தொகுதியிலும், 2) கோதாவரி, கிருஷ்ணா மாவட்ட சங்கம் இல்லா தொழிலாளர் தொகுதியிலும் மட்டுமே வெற்றி பெற்றது.
வடசென்னை பொதுத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே. மாதவ மேனன் 83,371 வாக்குகளும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீவா 17,664 வாக்குக்களும் பெற்றிருந்தனர்; “கம்யூனிஸ்ட்களை வலைவீசி உறுப்பினர்களைப் பிடித்துக் கொண்டிருந்த திராவிடர் கழகம் நடுநிலை வகிக்காமல் இருந்தாலும் எத்தனை வாக்குகளைப் போட்டிருக்க முடியும்? 65,708 வாக்குகளைப் போட்டிருந்தால் மட்டுமே ஜீவா வென்றிருக்க முடியும்!
தொடரும்
1946-ஆம் ஆண்டிலேயே 35,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்த திராவிடர் கழகம் 1958-ஆம் ஆண்டில் 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியில் இருந்து ஆள் பிடிக்க முயற்சித்தது என்பது எவ்வளவு நகைப்புக்குரியது, வேடிக்கையானது, விநோதமானது?
பெரியார் முழக்கம் இதழ் 01012026

You may also like...