ஜாதி ஒழிப்பு இயக்கம் தொடரும்!
சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுக்கும் ஒன்றிய அரசு, மசோதாக்களை நிறுத்திவைக்கும் ஆளுநர், சிறப்புத் தீவிர திருத்தத்தின் பெயரால் சாமானியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம், அப்பட்டமான அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அமலாக்கத்துறை, சோதனை நடத்தி நடிகர்களை அரசியலுக்கு இழுத்து வரும் வருமான வரித்துறை என ஒன்றிய பா.ஜ.க. அரசு தரும் நெருக்கடிகளும், இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை தி.மு.க அரசு தந்திருப்பதும்தான் இந்தத் தேர்தலில் இதுதான் பேசுபொருளாக இருக்கப்போகிறது. அரசியல் களம் அதை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த விவாதத்தை முன்னெடுத்து, பாஜகவின் சூழ்ச்சிகளை, தமிழர் விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டியது அவசியமானது. எனினும் பெரியார் இயக்கத்திற்கு அடிப்படையான ஜாதி ஒழிப்பு கொள்கையை சமரசமில்லாமல் முன்னெடுக்க வேண்டியதே, மற்ற எல்லாவற்றையும் விட தலையாய கடமை. அந்த கடமையின் பொருட்டு, சேலத்தில் 2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற, ‘இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை’ மாநாட்டில் வைக்கம் நூற்றாண்டை முன்னிட்டு ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “வைக்கம் போராட்டம் இன்னும் முடியவில்லை” என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் திண்டுக்கல், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் கிராமப்புறங்களில் தற்போதும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து, கழகத் தோழர்கள் பட்டியல் எடுத்தனர்.
இந்த நவீன காலத்திலும் இரட்டைக்குவளை முறை, பொது வீதிகளில் நடமாட தடை, கோயில் நுழைவு அனுமதி மறுப்பு, முடி திருத்தகங்கள்- இடுகாடுகளில் ஜாதி பாகுபாடு என்று தீண்டாமைக் கொடுமைகள் நிலவுவது குறித்து பட்டியல் தயாரித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் கழகப் பொதுச்செயலாளர் நேரில் சென்று சமர்பித்து, இப்பாகுபாடுகளை களைய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அதன்பின்பு ஓராண்டுக்கு மேலாகியும் அரசின் தரப்பில் அப்பட்டியல் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே நெல்லையில் பட்டதாரி இளைஞர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை ஒட்டி, ‘மனிதம் நமது அடையாளம், ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்களை கழகம் நடத்தியுள்ளது. ஆணவப் படுகொலைகள் மட்டுமின்றி ஜாதிச்சங்கங்களின் துணிச்சலான செயல்பாடுகள், ஜாதிய வரண்கள் பார்க்கும் திருமண தகவல் மையங்கள், குருபூஜை என்ற பெயரில் ஜாதிச்சங்க தலைவர்களின் பிறந்தநாள், இறந்தநாளில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் போக்கு என ஜாதிவெறி நவீனமாகி பல வடிவங்களில் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, கண்டுகொள்ளாமல் விடுவதும், ஜாதிச் சங்கங்களுக்கு துணை நிற்பதுமான போக்கைத்தான் வெளிக்காட்டுகிறார்கள்.
எனவே, 2023-இல் திராவிடர் விடுதலைக் கழகம் சேலத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஜாதிய தீண்டாமைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் உறுதியான சட்ட நடவடிக்கை கோரி, 29.12.2025 அன்று கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கழகம் நடத்தியது. கழகத் தோழர்களும், நிர்வாகிகளும் திரண்டு, ஜாதி ஒழிப்புக்களத்தில் உறுதியோடு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் போராட்டமாக இது அமைந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள், தோழமை இயக்கத்தினரை ஒருங்கிணைத்து கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் சிறப்பான முறையில் இந்த போராட்டத்தை நடத்தியது பாராட்டுதலுக்குரியது.
பெரியார் இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அங்கம் வகிக்கும் இயக்கம் கிடையாது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைவரும் கலந்த ஓர் இயக்கம். அந்தவகையில், திராவிடர் விடுதலைக் கழகம் தயாரித்த பட்டியலில் நிலவும் தீண்டாமைகளை இழைக்கும் சமூகத்தில் இருந்தே கருப்புச்சட்டை அணிந்த பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்று, தங்கள் சுயஜாதிக்கு எதிராக கொள்கை முழக்கமிட்டனர். சுயஜாதி எதிர்ப்பில்தான் ஜாதி ஒழிப்பின் வீரியம் நிறைந்திருக்கிறது. அத்தகைய வீரியமிக்க களப்பணியாளர்களாக திராவிடர் விடுதலைக் கழகத்தில் இருக்கிறார்கள் என்பதை கோவை போராட்டம் உறுதி செய்திருக்கிறது. அதுவே இந்த போராட்டத்தின் தனித்துவம். அந்த தனித்துவம்தான் ஜாதி ஒழிப்புக் களத்தில் வெல்லும்.
திராவிட மாடல் அரசு வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதைப் போல, ஜாதிய பாகுபாடுகளை களைந்து சமத்துவ சமுதாயத்தை அமைப்பதிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தில் சமத்துவம் இல்லாவிட்டால் எந்த திட்டமாக இருந்தாலும், அது நியாயமாக போய்ச்சேர வேண்டிய எல்லோரையும் சென்றடையாது. மேலே இருப்பவர்கள்தான் மென்மேலும் வளர்வார்களே தவிர, சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்கள் மேலும் பலவீனமாகவே இருப்பார்கள். அவர்களையும் பலப்படுத்த திட்டங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது, சமூக சமத்துவமும் இன்றியமையாதது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இணைந்து ஜாதிய பாகுபாடுகளுக்கு எதிராக உறுதியாக நிற்கும்போதுதான் அந்த சமத்துவம் நிலைபெறும்.
எனவேதான் ஜாதிய தீண்டாமைகளுக்கு எதிரான அரசின் வலுவான சட்ட நடவடிக்கைகள் கோரி, கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்தை முன்னெடுத்தது. ஜாதிச்சங்கங்களுக்கு கடிவாளம் போட்டு, நவீன தீண்டாமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் இந்த ஜாதி ஒழிப்பு இயக்கம் தொடரும். மனிதம் ஒன்றே நமது அடையாளம்; ஜாதி எவருக்கும் அவமானமே!
பெரியார் முழக்கம் இதழ் 01012026
