டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்! ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டிசம்பர் 29-ஆம் தேதி, ஜாதி தீண்டாமைக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகள் கோரி போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டுக் கிராமங்கள் இன்னமும் ஜாதியக் கட்டமைப்புக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே ஒரு வெட்கப்படத்தக்க நிலையாகும். இன்னமும் கிராமங்களில் ஜாதி தீண்டாமைகள் எப்படி நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநாட்டப்பட்டு வருகின்றன, அதன் வடிவங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதையெல்லாம் கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று ஆராய்ந்து, அதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆணையத்தின் முன் திராவிடர் விடுதலைக் கழகம் கையளித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
‘ஜாதி ஒரு அவமானம், மனிதம் நமக்கு அடையாளம்’ என்ற ஒரு தலைப்பில் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் ஜாதியத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஒரு மகத்தான இயக்கத்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பல்வேறு முறைகளில் திசை திரும்பிக் கொண்டிருந்தாலும், பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கொள்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறது.
கிராமங்களில் இன்னமும் முடி திருத்துகின்ற நிலையங்களில், தேநீர் கடைகளில், கோயில் விழாக்களில், கோயில் யாருக்குச் சொந்தம் என்கின்ற ஒரு பிரச்சினையில் பல்வேறு வடிவங்களில் ஜாதியமும் தீண்டாமையும் கொடூரமாக ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றன. கோயில்கள் இன்றைக்குச் ஜாதிக்கு ஒரு கோயில்களாகி, ஜாதிகளுக்குள்ளே மிகப்பெரிய கலவரங்கள் மூண்டு கோயில்களை இழுத்து மூடுகின்ற நிலையும் நாட்டில் இருந்து வருகிறது.
ஜாதி கட்டமைப்பு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஒரு இறுக்கமான கட்டமைப்பு. அதைத் தகர்ப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி உரிமையை நாம் கொண்டு வந்தோம், இட ஒதுக்கீடு உரிமையை நாம் கொண்டு வந்தோம், பொருளாதார வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. மற்றொரு பக்கம் அறிவியல் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் கல்வி, பொருளாதாரம், அறிவியல் என்ற மூன்று கருவிகள் வந்தாலும் கூட, இன்னமும் ஜாதி கட்டமைப்பு உயிர்த்துடிப்போடு இருந்து கொண்டிருப்பதைப் பார்ப்பது என்பது மிகப்பெரிய அவலமாகும்.
ஒவ்வொரு முறையும் ஜாதி ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. படித்தவர்களுக்கு இடையே நடக்கின்ற திருமணம் கூட, அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்கிறார் என்று சொன்னால் அவர்களை வெட்டிச் சாய்க்கின்ற ஒரு அவலம் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த ஆணவப் படுகொலை நடக்கின்றபோது இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதும், ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு ஒரு சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதும், அதோடு ஜாதி எதிர்ப்புப் பிரச்சாரம் முடங்கிவிட்டது என்பது போன்ற நிலைதான் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
திராவிடர் விடுதலைக் கழகம் இதில் ஒரு மாறுபட்ட நிலையை எடுக்கிறது. ஆணவப் படுகொலைச் சட்டம் வரவேண்டும், அதோடு சட்டம் வரவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் வலியுறுத்திவிட்டு அந்தப் பிரச்சினையை அத்துடன் நிறுத்திவிடுவது என்பது எந்தப் பயனும் தராது. சமூகத்தில் மக்களிடத்திலே ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை, ஜாதிய ஒடுக்குமுறைக் கருத்துக்களைக் கொண்டு சென்று, குறிப்பாக இளைஞர்களிடத்திலேயே இதுகுறித்த ஒரு விழிப்புணர்வும் மாற்றமும் வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மகத்தான மக்கள் பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
அந்த பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகத்தான், இப்போது கோயம்புத்தூரில் இந்த ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. இந்தப் பணி தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டிய ஒரு பணியாகும். தமிழ்நாடு அரசு இன்றைக்குப் பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை, மேம்பாட்டுத் திட்டங்களைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கொண்டு வந்தாலும் கூட, அரசின் திட்டங்களினால் பயன்பெற்று வந்தாலும் கூட, ஜாதியக் கட்டமைப்பு என்பது இன்னமும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. பல அரசியல் கட்சிகள் இவைகளைக் கடந்து போகின்றன. வாக்கு வங்கி அரசியல் இதுகுறித்து அவர்களுடைய கவனத்தை ஈர்க்க முடியாமல் செய்துவிடுகின்ற ஒரு அவல நிலையை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
எனவே தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் பெரியாரின் ஜாதி ஒழிப்பு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்தப் போராட்ட அறிவிப்பு வந்ததற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கிடைக்கின்ற ஆதரவுகள் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருவதாக இருக்கின்றன. ஏராளமான ஆதரவுக் கரங்கள் நம்மை நோக்கி நீண்டு கொண்டு இருக்கின்றன.
இந்த ஆதரவுக் கரங்களை ஒன்று சேர்த்து இளைஞர் படை ஒன்றை உருவாக்கி, ஒவ்வொரு கிராமம்தோறும் ஜாதி எதிர்ப்புக்கான ஒரு கண்காணிப்புக் குழுவை உருவாக்கி, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஜாதியினுடைய கட்டமைப்பு தகர்க்கப்படக்கூடிய அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்ற ஒரு வரைவுத் திட்டத்தை நாம் உருவாக்கி முன்னேறுவதற்கும், அரசின் கவனத்திற்கு கிராமங்களில் இன்றைக்கு நிலவுகிற தீண்டாமை வடிவங்களை எடுத்துக்காட்டி அதனுடைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கும் நடைபெறுகிற இந்த போராட்டத்திற்குத் திரளாகத் தோழர்கள் திரண்டு வரவேண்டும். தமிழ்நாடெங்கும் இருந்து கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிக் கொண்டு வரும் செய்திகளும் சமூக வலைதளங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. தோழாமை இயக்கத்தினரும் இதில் இணைந்துகொள்ள வேண்டுமென்று அழைக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்… வாரீர்…
பெரியார் முழக்கம் இதழ் 25122025
