பெரியார் பெயரை மறைப்பதா? கழகம் எதிர்வினை!
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளமான ஏற்காட்டிற்கு செல்லும் வழியில் இருபது கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் ஒவ்வொரு வளைவிற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது, அதன்படி எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரை நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக வைக்கப்பட்டிருந்தது.
கடந்த டிசம்பர் 24 தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவு நாளை இருட்டடிப்பு செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு தந்தை பெரியார் வளைவு என்ற பெயரின் மீது கருப்பு மையை பூசி விட்டு அதன் மீது தகடூர் அதியமான் வளைவு என்ற பதாகையை ஒட்டி பெரியாரைப் பற்றி வசைச்சொற்களால் கூச்சலிட்டுச் சென்றனர்.
இந்த அராஜகச் செயலைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையிடமும், நெடுஞ்சாலைத் துறையிடமும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் முறையாக மனு கொடுக்கப்பட்டது, ஆனால் காவல் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் சேர்ந்து அந்த நபர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நபர்களின் மிரட்டலால் நெடுஞ்சாலைத்துறை சார்பாக நாம் தமிழர் கட்சியினர் எழுதிய அதே பெயரான தகடூர் அதியமான் வளைவு என்று எழுதி விட்டனர்.
புகார் மனு கொடுத்து இரண்டு நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், இன்று டிசம்பர்26, 2025 அரசு நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்ட தந்தை பெரியார் வளைவு என்ற பெயர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களால் மீண்டும் வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் வாயிலாக தொடர்ந்து தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டு கொண்டிருக்கிற நாம் தமிழர் கட்சியினர் இந்த போக்கினை நிறுத்திக் கொள்ள வேண்டும் . இதே போன்ற அவதூறு செயல்கள் தொடருமானால் திராவிடர் விடுதலைக் கழக தோழர்களின் பதிலடி மிகவும் காட்டமாக இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர்கள் தெரிவித்தனர்
பெரியார் முழக்கம் இதழ் 01012026
