நிதானமும், சாந்தமும், பொறுமையும், கட்டுப்பாடும் கொண்டு வெறுப்பில்லாமலும், துவேஷமில்லாமலும் நல்ல வார்த்தையும், கூட்டுறவிலும், நயமாகவும், கெஞ்சியும் நமது நாட்டில் எத்தனை காலமாக (சீர்திருத்தம்) செய்து வந்திருக்கிறது? இதுவரை செய்து வந்த சீர்திருத்தங்கள் என்ன ஆயிற்று? இன்னும் எத்தனை நாளைக்குப் பரீட்சைப் பார்ப்பது என்கிற விஷயங்களை யோசித்தால் மேற்கண்ட வார்த்தைகள் சீர்திருத்தத்திற்கு விரோதிகளா யுள்ளவர்களிடம் மரியாதை பெறுவதற்காகவும், தங்களது சொந்த புகழுக்காகவும், பெருமைக் காகவும் பேசப்பட்ட வார்த்தைகள் அல்லது பலவீனத்தின் தோற்றம் என்று ஏற்படுமே ஒழிய வேறொன்றுமே இருக்காது. சிலர் இம் மாதிரியான நமது அபிப்பிராயத்திற்கு விரோத மாய் சில பெரியோர்களான விவேகானந்தர், காந்தி முதலியோர்களுடைய வார்த்தைகளை எடுத்துக் காட்டுவார்கள். இம்மாதிரியான அப்பெரியோர்களுடைய வார்த்தைக்கு நான் முற்றும் முரண்பட்டவன் என்பதை நான் கண்ணியமாய் ஒப்புக் கொள்ளுகிறேன். காரணம், அவ்வார்த்தைகள் சொன்ன பெரியோர்களை சுவாமியாகவும், மகாத்மாவாகவும் மக்கள் கொண்டாடினார்கள்; கொண் டாடுகிறார்கள்; படம் வைத்து பூசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்வார்த்தைகளால் சீர்திருத்தம் வேண்டிய...