சேரன்மாதேவி குருகுலத்தில் பணிபுரிந்தாரா ஜீவா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (10)- கொளத்தூர் மணி
தோழர் ஜீவா அவர்களின் காலத்தில் அவரது கருத்துக்களை நேரடியாக அறிந்து எழுதப்பட்டுள்ள தோழர் இஸ்மத் பாஷா, தோழர் கே.பாலதண்டாயுதம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் முதன்மையானது சிராவயல் காந்தி ஆசிரமம் (பள்ளி வாசகசாலை) பற்றியது; அதாவது இந்த ஆசிரமத்தை தோழர் ஜீவானந்தம்தான் உருவாக்கினார் என்ற ஒரு அதீதமாக எழுப்பபட்டுள்ள மாய பிம்பம்.
தோழர் அ.ப.பாலையன் தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்த “ஜீவா தேடிய மானுடம்” என்ற நூலின் நான்காம் கட்டுரையான ‘பெரியார் ஜீவா – உறவும் பிரிவும்’ என்ற கட்டுரையில் “ நீண்ட நாட்கள் நடைபெற்ற கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்திலும் ஜீவா பங்கேற்கிறார் (1924) ”, (நூலில் 1924 என கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தாலும் 1924 ஏப்ரல் முதல் 1925 டிசம்பர் வரை போராட்டம் நடந்தது) என்றும்
“சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜீவா, அங்கு நடைபெற்ற அநீதிக்கு எதிராக போராட்டத்தில் ஈவெரா, வரதராஜர் நாயுடு போன்றோருடன் பங்கேற்றார் (1925)” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேரன்மாதேவி போராட்ட வடிவம்!
சேரன்மாதேவி போராட்டம் என்பது ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை என்ற வடிவங்களில் நடந்தது அல்ல; காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள், காந்தியாரின் பேச்சுவார்த்தை, தமிழர் கூட்டம், தமிழர் இயக்கம் என்ற பெயர்களோடு கானாடுகாத்தானில் நடைபெற்ற புரவலர் கூட்டம், விவாதம், செய்தி ஏடுகளிலும் இதழ்களிலும் விவாதம் என்ற முறையில்தான் நடந்தது. அவை அரசியல் உலகில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் உருவாக்கி இருந்தன. எனவே ஜீவா சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் பங்கேற்றார் என்பதை ‘பொய்யைக்கூட பொருத்தமாக சொல்ல முடியாத’ ஒரு பொய்யாகத்தான் இருக்க முடியும் என்று கடந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை.
அந்தப் பத்தியில் மேற்கண்ட வரிகளுக்கு முன்னர் உள்ள சொற்கள் “சேரன்மாதேவியில் குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜீவா” என்ற வரிகள் குறித்தும் விவாதிக்க வேண்டி உள்ளது. சேரன்மாதேவி குருகுலம் பற்றியும், அதில் பயின்ற மாணவர்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள், பிற பொறுப்பாளர்கள் என்பவற்றை அறிந்து கொள்வது தேவையாகிறது.
தமிழ் குருகுல வித்யாலயம் என்ற பெயரோடு முதலில் குருகுலம் தொடங்கப்பட்டது கல்லிடைக்குறிச்சியில் ஆகும். வ.வே.சு. அய்யரை ஆச்சாரியாராகக் கொண்டு 08.12.1922 அன்று அது தொடங்கப்பட்டது. ‘தொடக்க நாளில் ஆச்சாரியார், தி.ரா.மகாதேவா அய்யர், தேசிய கலாசாலை உபாத்தியாயர் கிருஷ்ண அய்யர், கோமதி சங்கர தீட்சதர், ரா அனந்தகிருஷ்ணன் ஆகியோரோடு, மாணவர்கள் சத்யானந்தன், ராமானந்தன் (இவர்கள் உப ஆச்சாரியார் தி ரா மகாதேவ அய்யரின் மகன்கள் தான்) ஆகியோர் படை சூழ, சுப முகூர்த்தத்தில் வித்தியாரம்பம் (கற்றலைத் தொடங்குதல்) செய்து, தியாகத்தின் பெருமை, ஸநாதன தர்மத்தின் மஹிமை, தத்துவங்கள் பற்றி போதனை (கற்பித்தல்) செய்தார். ஸ்நான சந்தியா வந்தனாதிகளுக்குப் பிறகு சன்னதி தெருவிலும் மாட வீதிகளிலும் பஜனை செய்து அரிசி வசூல் செய்தனர்.’
இந்த செய்திகள் குருகுலத்தில் தொடர்ந்து பேணப்பட்டு வந்த ‘குருகுல தினசரி குறிப்பேடு’ கூறும் செய்திகள் ஆகும். அதாவது கல்லிடைக்குறிச்சியில் குருகுலம் சுபமுகூர்த்தத்தில் தொடங்கப்பட்டு, மாணவர்களுக்கு சனாதன தர்மம் போன்ற தத்துவங்கள் தொடக்கப் பாடமாக கற்பிக்கப்பட்டு, சன்னதி வீதி மாட வீதிகளில் (அக்ரஹாரத்துக்குள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.) பஜனை பாடி அரிசி வசூலித்து பிராமண தர்மமான பிச்சாந்தேகி (பிச்சை எடுப்பதுதான்) யோடு தொடக்க விழா நிறைவுபெறுகிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது அல்லவா?
குருகுலம் நடத்த மேலும் அதிக பரப்புள்ள நிலம் தேவை என்ற போது பெரியாரின் நண்பரும், பெரியாரோடு காஞ்சிபுரம் மாநாட்டில் காங்கிரசில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தில் இயங்கியவருமான கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் சேரன்மாதேவியில் வாங்கிக்கொடுத்த 30 ஏக்கர் நிலத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு குருகுலம் இடம்பெயர்ந்தது. அந்த சேரன்மாதேவி குருகுலத்தில்தான் ஜீவா ஆசிரியராகப் பணியாற்றியதாக, தோழர் டி.செல்வராஜ் எழுதிய ‘ஜீவானந்தம்’ என்ற நூலில் 26-ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்கள் பற்றி குறிப்புகள்!
அதுதொடர்பான சில செய்திகளை அறிந்துகொள்வது நல்லது. ஆய்வாளர் பழ. அதியமான் அவர்களின் “சேரன்மாதேவி – குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்” என்ற ஆய்வு நூலில் இருந்து சில செய்திகளைப் பதிவிட விரும்புகிறோம். அந்நூலின் 33-ஆம் பக்கத்தில், V.V.S. Iyer: A Critical Studies என்ற நூலின் 48, 49-ஆம் பக்கங்களில் உள்ள செய்தியாக, பெரும்பாலும் பெயருடன் உள்ள குறிப்புகளின்படி மாணவர்களின் எண்ணிக்கை 25 – 27 பேர்; அதே நூலின் பக்கம் 109-இல் வெளியாகி உள்ள 05.07.1925 நாள் இட்ட குடி அரசு ஏட்டில் வெளிவந்துள்ள பெரியாரின் அறிக்கையின் படி – 18 பேர்; 211-ஆம் பக்கத்தில் எடுத்துக்காட்டி இருக்கிற சுத்தானந்த பாரதியின் ‘ஆத்ம சோதனை’ என்ற நூலில் குருகுல வாழ்க்கை என்ற தலைப்பில் எழுதியுள்ள செய்திகளின்படி மாணவர் எண்ணிக்கை 20 பேராகும்.
அந்நூலின் 34-ஆம் பக்கத்தில் ஆய்வாளர் பழ.அதியமான் மாணவர்கள் குறித்த பெயர்களைப் பட்டியலெடுத்து ஒவ்வொரு நூலாசிரியர்கள் சொல்லியுள்ள பெயர்களை நீக்கியும், சேர்த்தும் குறிப்பிட்டுள்ளது ‘ஏறத்தாழ 25 மாணவர்கள்’ என்பதாகும். சராசரியாக 25 மாணவர்கள் என்றே கணக்கு வைத்துக் கொள்வோம். அவர்களிலும் சத்யானந்தம், ராமானந்தம் ஆகியோர் தி.ரா. மகாதேவய்யரின் பிள்ளைகள்; கிருஷ்ணமூர்த்தி, சுபத்ரா ஆகியோர் வ.வே.சு அய்யரின் பிள்ளைகள். மாணவர்கள் எண்ணிக்கையைப் பார்த்தோம்; இப்போது ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் எண்ணிக்கையைப் பார்ப்போம். குருகுலத்தில் பணியாற்றிய சுத்தானந்த பாரதியின் ‘ஆத்ம சோதனை’ நூலில் குறிப்பிட்டுள்ளவற்றைப் பார்ப்போம்.
தலைவர், ஆச்சாரியார்: வ.வே.சு அய்யர்
உப தலைவர், உப ஆச்சாரியார்: தி.ரா.மகாதேவ அய்யர்
காரியதரிசிகள்: சுப்பையர், அனந்த கிருஷ்ணன்.
இலக்கியம், கல்வி, விளம்பரம், பத்திரிகை, காரிய நிர்வாகி: சுத்தானந்த பாரதி ஆசிரியர்கள்: நாராயண அய்யர், கும்பலிங்கம் பிள்ளை
தமிழ் – இசை ஆசிரியர்: முத்தய்யர்
சமஸ்கிருத ஆசிரியர்: வெங்கடாசல சாஸ்திரி
பணம் வசூலிப்பவர்: வெங்கு, ராமச்சந்திரன், திருத்தொண்டர்.
கணக்கர், ஹிந்தி ஆசிரியர்: கண்ணபிரான்
சரித்திர ஆசிரியர்: கா.சிவராம அய்யர்
தமிழறிஞர் தா.மு.சொர்ணம் பிள்ளை
கி.லக்ஷ்மண சர்மா…..ஆகியோர் ஆவர்.
பணம் வசூலிப்பவர்கள் மூன்று பேரைக் கழித்தாலும் 13 ஆசிரியர்கள்; குருகுலத்தில் பயின்ற சுமார் 25 மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான சூழலில் மற்றொரு ஆசிரியர் தேவைப்பட்டிருப்பாரா? தேவைப்பட்டிருந்தாலும் ஆசிரியர் பணிக்கு ஜீவாவை அமர்த்தி இருப்பார்களா? முன்னறிமுகம் இல்லாத, எங்கோ இருந்து வந்த, 18 வயது இளைஞனை, ஜாதி ஆணவம் கொண்ட ஆசிரமத்தார் ஆசிரியர் பணி அளித்து ஆதரிப்பார்களா? என்ற கேள்விகள் எவர் ஒருவர் மனதிலும் எழுவது இயல்பே ஆகும். விடையும் எதிர்மறையாகத்தானே இருக்க முடியும். ஆனால் எழுதியுள்ளார்கள், ஜீவா சேரன்மாதேவி குருகுலத்தில் பணியாற்றினார் என்று?!
சிராவயலில் ஜீவா பேசியது உண்மையா?
அடுத்த செய்தி சிராவயல் காந்தி ஆசிரமத்துக்கு வருகை புரிந்த தலைவர்கள் குறித்ததாகும். மேற்குறிப்பிட்ட ஜீவாவிடம் இருந்து செய்திகளை நேரடியாக பெரும் வாய்ப்பைப் பெற்றிருந்த இரண்டு வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களும், வ.ராமசாமி அய்யங்கார், வ.உ.சி, காந்தியார் என்ற மூன்று ஆளுமைகளின் வருகை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்டுள்ள ஆளுமைகளில் காந்தியாரை ஜீவா பாகனேரியில் சந்தித்து உரையாடி உள்ளார். ஆனால் காந்தியார் ஒரு பயணத்தின் வழியில் சிராவயல் வந்து வாசித்தளித்த வரவேற்புகளைப் பெற்றுக்கொண்டு சென்றிருக்கிறார்; ஆனால் ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல வர்ணாசிரமம் குறித்து உரையாடவோ, ஜீவாவிடம் “நீங்கள்தான் நாட்டின் சொத்து” என்று கூறியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை முன்னரே நிறுவியிருக்கிறோம்.
ஆனால் வ.ரா சிராவயல் ஆசிரமத்திற்கு வந்திருந்ததாகவும் அப்போது ஜீவா ‘நாடும் இளைஞர்களும்’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பேசியதாக தோழர் இஸ்மத் பாஷா தனது ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ (1946) பக்கம் 16-இல் குறிப்பிட்டுள்ளார். தோழர் பாலதண்டாயுதமும் தனது ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ நூலில் பக்கம் 31, 32-இல், பிரபல எழுத்தாளர் வ.ரா. அவர்கள் சிராவயல் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அன்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் வ.ரா.வும் ஜீவாவும் சொற்பொழிவாற்றினார்கள். ‘நாடும் இளைஞர்களும்’ என்ற பொருள் பற்றி பேசிய ஜீவா தனித் தமிழிலேயே தனது சொற்பொழிவை பேசி முடித்தார். ஒரு பிற மொழி சொல் கூட கலவாமல் அவர் நிகழ்த்திய பிரசங்கம் வ.ரா. அவர்களைப் பிரமிக்க வைத்தது. இந்த மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை என்று தனது பாராட்டினைத் தெரிவித்தார். ஆனால் இத்தகைய தமிழ் அறிஞரை தமிழகத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ண மேலீட்டால் வ.ரா. அவர்கள் ஜீவாவுக்கு அறிவுரை கூறியதாவது:
“நான் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன், தமிழ்நாட்டின் நன்மையை உத்தேசித்து தயவு செய்து தனித்தமிழை விட்டு விடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசினாலும் உங்களுடைய தனித்தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இது ஜனங்களுடைய மொழி அல்ல,” என்றார் அறிஞர் வ.ரா. (ஜீவா என்கிறொரு மானுடன்: பொன்னீலன். பக்கம்- 23. 1982)
ஆக எழுத்தாளர் வ.ரா அவர்களின் வருகை பற்றியும் இந்நூலில் வ.உ.சி அவர்களின் வருகை பற்றியும் காந்தியார் வருகை பற்றி உண்மை அல்லாத பதிவு மட்டுமே உள்ளனவே தவிர மற்ற எவரின் வருகை குறித்தும் எந்த ஒரு ‘ஜீவாவின் வரலாற்றாசிரியரும்’ கூறவில்லை.
மற்றொரு தலைவர் இதே காலகட்டமான 1926, 1927 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் வருகை தந்துள்ளார். ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர் வ.ரா அவர்களே அந்தத் தலைவரோடுதான் வந்துள்ளார்; ஆனால் ஏன் அவர் பெயர் மட்டும் பதிவிடப்படவில்லை விவரங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.
box
சேரன்மாதேவி குருகுலத்தில் 25 மாணவர்களுக்கு 13 ஆசிரியர்கள் இருந்தனர். இவ்வாறான சூழலில் மற்றொரு ஆசிரியர் தேவைப்பட்டிருப்பாரா? தேவைப்பட்டிருந்தாலும் முன்னறிமுகம் இல்லாத, 18 வயதே ஆன ஜீவாவை அமர்த்தி இருப்பார்களா? அதுவும் ஜாதி ஆணவம் கொண்ட அந்த ஆசிரமத்தார்?
பெரியார் முழக்கம் இதழ் 15012026
