பத்ரி வீழ்த்தப்படவில்லை, விதையாக்கப்பட்டார்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். கழகத் தோழர் பத்ரி நாரயாணன் பற்றிய கடந்த இதழின் தொடர்ச்சி…
திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில், 1992-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மசூதி வழியாக நடத்தி, கலவரத்தில் முடிக்க முயன்றனர் சிலர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது வி.எம்.தெரு. அடுத்த ஆண்டில் வி.எம்.தெருவுக்குள்ளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முயன்றார் ராமகோபாலன். அந்த முயற்சியை முறியடித்து, கலவர நோக்கத்தைத் தடுத்ததுடன், ஐஸ் அவுஸ் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு எதிர்ப்பாக பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தி, சமூகப் பதற்றத்தை தணித்தார் பத்ரி.
அதேபோல, 2001-இல் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலின்போது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றன மேற்குலக நாடுகள். மேடை ஏறி பேசவே கூச்சப்படும் குணம் கொண்ட பத்ரி, இஸ்லாமிய அமைப்புகளை அழைத்துவந்து மேடை அமைத்துக்கொடுத்து, மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளை, எளிய மக்களும் உணரச் செய்தார். சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று, உயிர்நீத்த திருவையாறு மஜீத்தின் நினைவாக தனது மகனுக்கு `மஜீத்’ என்றே பெயர் சூட்டினார்.
பத்ரியின் நல்லிணக்கப்போக்கு மதத்தைக் கடந்தது மட்டுமல்ல, அரசியலையும் கடந்தது. வி.எம்.தெருவில் ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 12-ஆம் நாள் பொங்கல் விழாவை, பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சியினரையும் இணைத்து நடத்தும் வழக்கத்தை உருவாக்கினார். பத்ரியின் இத்தகைய ஓயாத களப்பணிகள் நூற்றுக்கணக்கான இளைஞர்களை பெரியாரியப் பாதை நோக்கி இழுத்தது. அவர்களையும் கருப்புச்சட்டை அணியச் செய்தது. மதத்தில் இருந்தும் ஜாதியில் இருந்தும் அவர்களை விடுவிக்கச் செய்தது. இச்செயல்களை விரும்பாதவர்களின் கொடூர சிந்தனைக்கு இரையாக்கப்பட்டார் பத்ரி. ஆனால், பத்ரியின் மறைவு வீழ்ச்சியாக அல்லாமல், விதையானது.
பத்ரி நாராயணனோடு அப்பகுதியில், திராவிட இயக்கத்தின் கதை முடிவுக்கு வந்துவிடும் என்று கருதியவர்களின் எண்ணம் பொய்த்துப்போனது. பத்ரி நிறுவிய பெரியார் சிலைக்கு அருகிலேயே, பத்ரி நாராயணன் பெயரில் 2006-இல் படிப்பகம் உருவானது. அவருடைய மறைவுக்குப் பிறகு ஒருவர்கூட தங்கள் கருப்புச்சட்டையைக் கழற்றி விடவில்லை. மாறாக, அதன்பிறகும் நூற்றுக்கணக்கானோர் கருப்புச்சட்டை அணிந்தனர்.
அவர் தொடங்கிவைத்த பொங்கல் விழா கால் நூற்றாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2023-இல் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் அளவுக்கு மாபெரும் மக்கள் திருவிழவாக பொங்கல் கொண்டாட்டம் அங்கு உருவெடுத்துள்ளது.
பத்ரி நாராயணன் வாழ்ந்த காலத்தில் செய்த பணிகள் எதுவும் நின்றுவிடவில்லை. பெரியார் பிறந்த நாள் விழாக்கள், ஜாதி ஒழிப்புப் பரப்புரை, திராவிட இயக்கக் கொள்கைப் பிரச்சாரங்கள் என பத்ரியின் காலத்தை விட வேகமாக இயங்கும் இளைஞர் படை, அதன் பின்னால் வி.எம்.தெருவில் உருவானது. பத்ரியின் வாழ்வும், பணிகளும் அவர்களுக்கு வழிகாட்டியானது.
“வி.எம்.தெருவில் சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு முடிவுகட்டி நூற்றுக்கணக்கான இளைஞர்களை, திராவிட இயக்க கருத்தியல்வாதிகளாக வளர்த்தெடுத்த ஆளுமை பத்ரி நாராயணன். அவரை அழித்துவிட்டால், சமூக விரோதிகள் தங்கள் விருப்பம் போல செயல்படலாம் என்று கருதினர். ஆனால், 20 ஆண்டுகள் கடந்த பின்னும் பத்ரி உருவாக்கிய கொள்கைப்படை இன்றும் வீரியமாக இருக்கிறது. அவரை வீழ்த்தியவர்கள்தான் எவரும் இல்லை”
-இரா. உமாபதி (திவிக
(நிறைவு)
பெரியார் முழக்கம் இதழ் 18122025

You may also like...