மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி!
2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 100 நாட்கள் ஊரக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இது வேலைவாய்ப்பு திட்டமாக இல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டமாக மன்மோகன் சிங் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களுக்கு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் வேலைவாய்ப்பு கிடைக்காத காலங்களில், அவர்களிடத்தில் பணப்புழக்கம் இருப்பதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இத்திட்டம்.
இந்தியா முழுவதும் பல கோடி மக்களை வறுமையில் இருந்த மீட்டது இந்தத் திட்டம். ஆனால் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 11 ஆண்டுகளாகவே வேலை நாட்களைக் குறைத்து, நிதியை விடுவிக்காமல், வேலை பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைத்து இத்திட்டத்தை பாழ்படுத்தி வருகிறது. 2013-14 நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சி அமைந்த பின்பு 2014-15 நிதியாண்டில் ரூ.24 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 92 லட்சம் பேர் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதில் இந்த ஆண்டு 33,000 நபர்களை ஒன்றிய பாஜக அரசு நீக்கியுள்ளது. இதுவரை இந்தத் திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை ஒதுக்கீட்டை உள்ளூர் மட்டத்திலான அலுவலர்கள் செய்து வந்த நிலையில், இனி அதை டெல்லியிலிருந்து நிர்வகிக்கப் போகிறார்களாம்.
திட்டத்தை சிதைத்து பலவீனமாக்கிய பா.ஜ.க. அரசு இப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்ற பெயரை மாற்ற முடிவெடுத்துவிட்டது. அதற்கான மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தின் பெயரை விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்)- VB-G-RAM-G என்று மாற்றுவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இத்திட்டத்திற்கான நிதியை 100% ஒன்றிய அரசே வழங்கி வந்தது. ஆனால் இப்போதோ 60% நிதியை ஒன்றிய அரசும் மீதம் 40 % நிதியை மாநில அரசும் வழங்கும் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
காந்தியடிகளை கொலை செய்த இயக்கத்தின் வழிவந்தவர்களின் ஆட்சிக்கு இன்றும் அவரது பெயர் உறுத்துலைத் தருகிறது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. படுகொலை செய்யப்பட்ட காந்தியை மீண்டும் மீண்டும் கொலை செய்துகொண்டே இருக்கிறது இந்துத்துவ பரிவாரங்கள். பா.ஜ.க. ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக காந்தியடிகள் நினைவுநாளில், அவரது படத்தை சுட்டுப்பொசுக்கி, கோட்சேவைக் கொண்டாடும் காணொலிகளை வெளியிட்டு இந்துத்துவ அமைப்புகள் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடியே காந்தியின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவது, அவரை கொன்றொழித்த கோட்சேவின் படத்திற்கும் மாலை சூட்டி சிறப்பு செய்வது என ஒரே நாளில் இரட்டை வேடம் தரித்த கூத்துக்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. இத்தகைய இந்துத்துவா சிந்தனைகளின் தொடர்ச்சியாகத்தான் இப்போது, காந்தியின் பெயரை இல்லாமல் செய்வது என்ற இடத்திற்கு நகர்ந்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ரூபாய் தாள்களில் இருந்து காந்தி படத்தை நீக்க வேண்டுமென்ற குரல்களும் இந்துத்துவக் கூடாரத்தில் இருந்து அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. காந்தி படத்தை மட்டும்தான் ரூபாய் தாள்களில் அச்சிட வேண்டுமா? வேறு தலைவர்களின் படங்களையும் அச்சிடலாமே என்று மெல்லிய குரல்களிலும் அவ்வப்போது அவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி விடுகிறார்கள். காந்தி இந்து- முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்தினார். காந்தியின் இந்த செயலால் இந்துக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதனால் இந்த இந்திய தேசத்திற்காக காந்தியைக் கொன்றேன்’ என்பதுதான் நாதுரேம் கோட்சேவின் வாதமாக இருந்தது. “காந்தி ஒரு கபடதாரி, முஸ்லிம்கள் இந்துக்களை கொலை செய்யும் போதும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு இந்துக்கள் கொல்லப்பட்டனரோ, அவ்வளவு உயரம் அவரது மதச்சார்பின்மை கொடி பறந்தது” என 2000-ஆம் ஆண்டு டைம் இதழுக்கு பேட்டி தந்தார் நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே.
தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் காந்தி இஸ்லாமியர்களை ஆதரித்தார் என்ற ஒற்றைக் காரணம்தான், அவரைக் கொல்லக் காரணமாக இருந்தது. இன்றுவரை மீண்டும் மீண்டும் அவரின் அடையாளத்தையும் அழித்தொழிக்க காரணமாக இருக்கிறது. காந்தியை இன்னும் எத்தனை முறை கொலை செய்தால் இந்த இந்துத்துவ வெறியர்களின் ஆத்திரம் நீங்கும் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
“தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன்?, குறிப்பிட்ட நபர்தான் தேர்தல் ஆணையராக வரவேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சரும் மிகுந்த ஆர்வம் காட்டுவது ஏன்? தேர்தல் ஆணையராகப் பதவியில் இருக்கும் போது மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணையர்கள் தண்டிக்கப்பட முடியாத வகையில் சட்டத்தில் மாற்றம் செய்து இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாத வரலாற்றை கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு செய்தது, தேர்தல் ஆணையர்களுக்கு இந்த அளவுக்கு சட்டப் பாதுகாப்பை பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் அளித்தது ஏன்?” என்ற தேர்தல் ஆணையத்தின் மீதான 3 மிக முக்கியக் கேள்விகளை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பி, அது மிகப்பெரிய விவாதமாகிய நிலையில், அதனை மடைமாற்றத்தான் காந்தி பெயர் நீக்க நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
பெரியார் முழக்கம் இதழ் 18122025
