பிரகடனம்

இன்று தமிழ்நாட்டில் நிலவும் சமுதாயச் சிக்கல்களுக்குச் சரியான தீர்வானதும், கடந்த காலங்களில் புறக்கணித் தவர்களாலும், விமர்சித்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதும், எதிரிகள் எந்த முகமூடியோடு வந்தாலும் துல்லியமாக இனங்கண்டு துணிச்சலோடு அவர்களைச் சந்திக்கவல்லதும் ஆன பெரியாரியலை மக்களிடையே கொண்டு செல்வதும் அதன்வழியே புதிய சமுதாயத்தைப் படைப்பதும் ஒவ்வொரு பெரியார் தொண்டனுக்கும் முன்னுள்ள சமுதாயக் கடமையாகும்.

பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, சாதிச் சழக்குகளும் – இந்துத்துவ பேராபத்தும் எப்போதுமில்லாத அளவு வளர்ந்து நிற்கும் சூழலில், பெரியார் இயக்கத்தைத் தடம் புரளாமலும், வீரியத்தோடும் கொண்டு செலுத்தவேண்டியது அவசியமாகிறது. மாறிவரும் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப பார்ப்பன ஆதிக்கமும் வடிவம் மாறி வருகிறது. முற்போக்கு முகமூடி தரித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பெரியாரியம் தன்னைத் தகவமைத்து எதிரிகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டதும், அவராலேயே பொரு ளாதார வளத்துடனும் கட்டமைப்பு வசதிகளுடனும் விட்டுச்செல்லப்பட்டதுமான திராவிடர் கழகம் சமுதாயப் புரட்சியைச் சரியான திசையில் முன்னெடுத்துச் செல்லாமலும் – பெரியார் கொள்கைகளை நீர்த்துப் போகச்செய்தும் பல்வேறு தருணங்களில் பெரியார் தத்துவங்களுக்கு முரணான நிலையை எடுத்ததோடு மட்டுமல்லாமல் சமுதாயப் பணிகளை முற்றுமுழுதாகப் புறக்கணித்து விட்டு, அதீத அரசியலில் அமிழ்ந்து போய் விட்டது.

ஆகையால், பெரியாரியலில் உண்மையான பற்றுதலும் – அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின் தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான் இப்போது உருவாகி இருக்கும் திராவிடர் விடுதலைக் கழகம்.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று, இனஉணர்வுச் சிந்த னையோடு – பெரியார் காலத்தில் அளித்ததைப் போன்று ஆதரவைக் கேட்டு நிற்கிறது எங்கள் கழகம். ஒடுக்கப்பட்ட மக்களே! மனிதஉரிமை ஆர்வலர்களே! சம உரிமைச் சிந்தனையாளர்களே! கொள்கை உறுதி ஒன்றை மட்டுமே தன் சொத்தாகக் கொண்டு களம் இறங்கி இருக்கிற இந்த எளிய தொண்டர்களின் இயக்கத்துக்கு தோள்கொடுங்கள். துணை நில்லுங்கள்! இணைந்து நிற்போம்! பெரியார் பணி முடிப்போம்!