குழப்பங்கள், குளறுபடிகளுடன் நடத்தப்பட்ட எஸ்.அய்.ஆர்.!

தமிழ்நாட்டில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புப் திருத்தத்தில் நடந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தி இந்து பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. 75018 வாக்குச் சாவடிகளில் குறித்த தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 14 வாக்குச் சாவடிகளில் இளவயதில் இறந்தவர்கள் என்கிற பெயரில் நீக்கப்பட்டுள்ள வாக்குகளின் விகிதம் அசாதாரண அளவு அதிகமாக இருக்கிறது. 35 வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

8,361 சாவடிகளில் நீக்கப்பட்ட பெயர்களின் விகிதம் அசாதாரண அளவு அதிகமாக இருக்கிறது. 3,907 இடங்களில் இறந்தவர்களாகக் கருதப்பட்டவர்களின் விகிதம் மிகையாக இருக்கிறது. 6,139 பாகங்களில் வீட்டில் இல்லை (absent) என்று நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 172 பாகங்களில் ‘ நிரந்தரமாக குடிமாறிப் போன பெண்கள் ’ என்கிற வகைமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. 50 பேருக்கும் மேல் இறந்து விட்டதாகக் கூறப்படும் 14 வாக்குச்சாவடிகளில், 50% பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள். பொதுவாக மக்கள் தொகையியல் (Demographic) கணக்குப்படி , 50 வயதுக்கும் மேற்பட்டோர்தான் இறக்கிறார்கள். சான்றாக திருவிடைமருதூர் பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் இறந்தவர்களாகக் காட்டப்படும் 131 பேரில் 74-பேர் ஐம்பது வயதுக்கும் குறைவானவர்கள். 35 வாக்குச் சாவடிகளில் நீக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் அல்லது அதற்கும் மேல் பெண்கள். சான்றாக, திருச்செந்தூரிலிருக்கும் புனித சூசை ஆரம்பப்பள்ளியில் நீக்கப்பட்ட 110 பெயர்களில் 95 பேர் பெண்கள்.

103 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் 495 வாக்குச் சாவடிகளில் ‘இறப்பின்’ காரணமாக அனைத்து வாக்காளர்களும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். சான்றுகள், திருமங்கலம் பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளியில் 142 பேர்; சிவங்கங்கை பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளியில் 134 பேர்; திருவிடைமருதூர் நடுநிலைப்பள்ளியில் 131 பேர்; பாபனாசம் பஞ்சாயத் யூனியன் ஆரம்பப் பள்ளியில் 131 பேர். கணக்கெடுப்பு நடக்கும்போது வீட்டில் இல்லை (absent) என்கிற காரணத்தைக்காட்டி 6139 வாக்குச்சாவடிகளில் தலா 74 பேருக்கும் மேல் நீக்கப்பட்டிருக்கின்றனர். சான்றுகள்: சோழிங்கநல்லூர் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 549 பேர்; பல்லாவரம் என்.எஸ்.என். மெட்ரிகுலேஷன் பள்ளி 505 பேர். இதுதவிர, விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அவருடைய சொந்த பாகத்தில் இருவரின் பெயர்கள் இந்தியில் இருந்ததை அம்பலப்படுத்தியுள்ளார். இறந்து 4 ஆண்டுகள் ஆன கவிஞர் புலமைப்பித்தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இப்படி எக்கச்சக்க குளறுபடிகளுடன் நடத்தப்பட்டுள்ள எஸ்.அய்.ஆரின் நோக்கம் சந்தேகத்தை வரவைப்பதாக உள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 25122025

You may also like...