ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரை கிழிகிறது!
2006-இல் காசி விஸ்வநாதர் கோயில் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் மசூதி கட்டுவதாக வெடித்த சர்ச்சையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். உண்மையிலேயே அந்த இடம் கோயில் நிலம்தானா இல்லையா என்ற வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி கலவரங்களை உருவாக்கி, அதில் இந்துத்துவ குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். இப்போது திருப்பரங்குன்றம் வரை இது தொடர்கிறது. ஆனால் இதில் இழப்புகளைச் சந்திப்பது ஹெச்.ராஜாவை போன்ற பார்ப்பனர்கள் இல்லை, அப்பாவி சாமானிய இந்துக்களே. குமார பாண்டியன் குடும்பத்தினரும் அப்படிப்பட்ட சாமானிய இந்துக்களே. கொலை செய்யப்பட்டவர்களில் குமார பாண்டியன் சகோதரரின் மகளான ருத்ரா இந்த பார்ப்பன சூழ்ச்சியை புரிந்துகொண்டு, பெரியாரியத்தை நோக்கி தனது திசையை திருப்பிக்கொண்டு, இப்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையுடன் பயணித்து வருகிறார்.
அவர், “ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தில் 11.12.2025 அன்று நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, “காசி விஸ்வநாதர் கோயில் சம்பவத்துல இறந்து போன குமாரபாண்டியன் குடும்பத்தாருடைய வழக்குன்னு தேடுனீங்கன்னா எங்க அப்பா பேரும் அதுல இருக்கும். என்னுடைய மூன்று வயதில இருந்து என்னை ஆர்எஸ்எஸ் தத்தெடுத்து கொண்டது. அங்கேயேதான் வளர்ந்தேன். எல்லா வருஷமும் கரெக்டா எங்க அப்பா இறந்த நாள் அதாவது ஆகஸ்ட் 14-ஆம் தேதி வீட்டுக்கு இந்த எச்.ராஜாவோ அண்ணாமலையோ வந்து உட்கார்ந்திருப்பாங்க.
நான் எட்டாவது படிக்கும்போது எனக்கு ஒரு கேள்வி வருது… அது என்ன எப்பவுமே இந்த மதத்தை காப்பாத்துறோம், இந்த மதத்துடைய காவலர்கள் நாங்கன்னு சொல்லிக்கிற நான் படிச்ச இன்ஸ்டிடியூஷனுடைய ஹெட்டுக்கோ இல்ல இந்த எச்.ராஜாக்கோ, இவங்க மேல எல்லாம் ஒரு கீரல் இல்லையே? ஒரு அடி இல்ல? அவன் பிள்ளைங்க எல்லாம் ரொம்ப நல்லா படிச்சு நல்ல நல்ல இடத்துல இருக்கறாங்க. ஆனா இந்த மதம்தான் நமக்கு எல்லாமே, இந்த ஜாதிதான் நமக்கு எல்லாமே அப்படின்னு தூக்கிப் பிடிக்கிறவன் குடும்பத்தில இருக்கறவன்ல்லாம் என்னைய மாதிரி அப்பா இல்லாமலோ அம்மா இல்லாமலோ குடும்பத்து நபர்கள் இல்லாமலோ வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டுட்டுதான் இருக்கிறோம்.
என்ன இன்னொரு ஒரு இந்து கிட்ட இருந்து பிரிக்கிறது ஒரே ஒரு நூல். அந்த பூணூல் அறுப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு எச்.ராஜா தயாரா? நாமெல்லாம் இந்துக்கள்ன பேசுற நீ, நாமெல்லாம் ஒரே ஜாதிதான்னு போராட்டம் நடத்த முடியுமா? திருப்பரங்குன்றம் முருகன் மேல உங்களுக்கு இவ்வளவு பாசமா? பழனி முருகன் கோயில் முன்னாடி பண்டாரங்கள்கிட்ட இருந்தது. இப்போ பார்ப்பனர்கள் புடுங்கிட்டாங்க. அதை மீட்டு எங்க கிட்ட கொடுத்துடுன கேட்டா உங்களால முடியுமா? அங்க நாங்க தமிழில் அரச்சனை பண்ணனும், அதை எங்கள்கிட்ட மீட்டுக் கொடுங்க. அப்புறம் நீங்க திருப்பரங்குன்றம் சர்வே கல்ல தூக்கிட்டு வாங்க.
1939-ல மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ல தாழ்த்தப்பட்டோர் நுழைவுப் போராட்டம் நடந்த உடனே பார்ப்பனர்கள் என்ன சொன்னாங்க? “நீங்க எல்லாம் கோயிலுக்கு உள்ள வந்தனால மீனாட்சியே வெளிய போயிட்டா, இங்க கடவுளே இல்ல” அப்படின்னு சொல்லிட்டு கோயில்ல சாத்துறாங்க. எச்.ராஜாக்கள் பிழைப்பதற்கு இங்க இருக்கக்கூடிய மத்தவங்கல்லாம் சாகணுமா? அதனால இனிமே யாராவது உங்ககிட்ட சாதிதான் அடையாளம்னு சொன்னான்னா, அவன் கையில தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதின புத்தகங்களை கையில கொடுத்து, ‘போய் படிச்சு உருப்படுற வழிய பாருடா’ன்னு சொல்லுங்க.
ஒரே அடியா சாதியை அழித்து ஒழிப்பதுதான் பெரியார் சொன்ன வழி. அதற்கு அவர் சொல்ற வழி “தொடர் பிரச்சாரங்கள்” தான். அந்த பிரச்சாரங்களை முன்னெடுப்போம். சாதியை அடித்தொழிக்கும் வரை நம்மளுடைய எல்லாத்தோட குரலும் எழுந்துகிட்டே இருக்கணும். ஜாதி நமக்கு அவமானம். வாழ்க தந்தை பெரியார், வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்” என உணர்வுப்பூர்வமாக அவர் ஆற்றிய உரை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 25122025
