தமிழ்நாடு அரசின் `10-க்கும் மேற்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல், சட்டத்துக்கு எதிரானது. மசோதா மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், மசோதாவை நிறுத்திவைப்பதாக இருந்தால், 3 மாதங்களுக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் 3 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும், மறுபரிசீலனை செய்வதற்காக மசோதா திருப்பி அனுப்பப்பட்டால் ஒரு மாதத்துக்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். எதுவுமே செய்யாமல் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்க ஆளுநருக்கு எவ்வித தனி அதிகாரமும் (வீட்டோ) கிடையாது” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பு தொடர்பாக, உரிய காலக்கெடு தாண்டிய பிறகு, திடீரென 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
திராவிட இயக்கக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 22.11.2025 அன்று தனது 92ஆம் வயதில் காலமானார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் நெருங்கி பழகியவர் ஈரோடு தமிழன்பன். சீரிய பகுத்தறிவாளர். பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். `வணக்கம் வள்ளுவ’ என்னும் புகழ்பெற்ற கவிதை நூலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாடெமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ‘உலகத் தமிழ்ப் பீட விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஈரோடு தமிழன்பனின் இழப்பு தனிப்பட்ட அவருடைய குடும்பத்திற்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்குமான பேரிழப்பு. கவிதைகள், இலக்கியத்தின் ஊடாக அவர் விட்டுச்சென்ற பெரியாரியல் பணியை, விதைத்துச் சென்ற சுயமரியாதைச் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும்...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாநிலம் தழுவிய அளவிலான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழகத்தின் சார்பில், சுவர் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன், சென்னிமலை செல்வராசு ஆகியோர் சுவர் விளம்பரங்கள் தீட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராவதற்கான திட்டமிடல் பணிகளில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், தனியார் வாகனங்களில் தோழர்களை திரட்டி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் ஏன் என்ற விவாதமும் எழத் தொடங்கியிருக்கிறது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. இனி இந்த ஆர்ப்பாட்டம் தேவைதானா என்ற உரையாடலும் ஒருபக்கம் நடந்து...
2026-ஆம் ஆண்டுக்கான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழ் சந்தா சேகரிப்புப் பணிகளை கழகத் தோழர்கள் விரைவாக தொடங்கி, டிசம்பர் மாத இறுதிக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆண்டு சந்தா ரூ.300 அய்ந்தாண்டு சந்தா ரூ.1,500 – விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். பெரியாரிய, திராவிட இயக்க, சமகால அரசியல் கருத்துகளைத் தாங்கி வரும் வார இதழை வாங்கிப் படியுங்கள்.. பரப்புங்கள்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தந்தை பெரியார் பிரியாணி கடை உரிமையாளர் கழகத் தோழர். கி.சுப்பிரமணியன்- சாவித்திரி ஆகியோரின் மகன் மனோஜ்குமார் அவர்களுக்கும், திருச்சி மாவட்டம், மணப்பாறை பண்ணாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த வை.சுப்பிரமணி – பார்வதி ஆகியோரின் மகள் அஞ்சலி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 16.11.2025- அன்று, ஞாயிற்றுக்கிழமை 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் சீதா திருமண மண்டபம் முதன்மை அரங்கத்தில் நடைபெற்றது. தி.மு.க. நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் சிந்து இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் க.நாத்திக ஜோதி வரவேற்புரையாற்றினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையுரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர். துரைசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன், திராவிடர் விடுதலைக் கட்சி தலைவர் அன்பு மகேசு, அதிமுக...
சேலம் கிழக்கு: இளம்பிள்ளையில் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கடையில் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு: மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் 08.11.2025 சனி மாலை 6.00 மணியளவில் மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தீர்மானம் – 1: சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 2026ஆம் ஆண்டிற்கான புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு 500 சந்தாக்களை வருகிற டிசம்பர் 24 அன்று மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 2: நவம்பர் 26 சட்ட எரிப்பு நாளை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 10 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 3: டிசம்பர் 24 கோவையில் நடக்கும் தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக பெருவாரியாக தோழர்கள் கலந்து கொள்வதென...
ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...
ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் கலாச்சார இயக்கம் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் போராசியர் சரசுவதி ஆகியோர்க்கு பாராட்டு விழா 14.11.2025 அன்று வடக்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மாகாணத்தில் நடைபெற்றது. லாரன்ஸ் அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் போராசியர் சரசுவதி ஆகியோரின் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. விடுதலை இராசேந்திரன் பேசுகையில் ஜாதி, மதம் அரசியல் அமைப்புகளில் சிக்காமல் ஒற்றுமை உணர்வுடன் தமிழர்கள் செயல்பட வேண்டும் என்று உரையாற்றினார். தோழர்களின் ஆஸ்திரேலிய வருகையை கொண்டாடும் விதமாக இந்த பாராட்டு விழா அமைந்தது. ஆஸ்திரேலிய வாழ் தமிழ் குடும்பங்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு உணவு வழங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்பரிப்புடனும் இந்த விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் இதழ் 20112025
தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கைகள், “ஷ்ரம் ஷக்தி நிதி 2025” எனும் பெயரில் மோடி அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்கைகளின் அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவெனில், உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சட்டக் கோட்பாடுகளாக நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்பட்ட மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற பழமையான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே ஒன்றிய அரசின் இக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன எனப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதுதான். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வரைவுக் கொள்கை கூறுவதாவது: “பழமை ஆவணங்களான மனுஸ்மிருதி, யக்ஞ வல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சுக்ரநீதி, அர்த்தசாஸ்திரம் ஆகியவை அரச நீதி குறித்து வலுவாகக் கூறியுள்ளன. நீதி, நியாயமான ஊதியம், சுரண்டலிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதில் ஆள்வோரின் கடமை என்ன என்பது கூறப்பட்டுள்ளது. நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உழைப்பை நிர்வ கிக்கும் இத்தகைய கோட்பாடுகள் இந்திய நாகரிக உருவாக்கத்தில் வலுவான அடிப்படை அம்சங்களாக உள்ளன.” இந்தியாவின் பாரம்பரியப் புரிதல் என்னவெனில், உழைப்பு என்பது...
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கொளத்தூரில் கழகப் பெண்களே தலைமையேற்று நடத்திய நாத்திகர் விழாவை ஒட்டி கடந்த 5 மாதங்களுக்கு, மேல் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் எழுதிய ‘கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை’ தொடர் கட்டுரைகள் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் முயற்சியில், ‘நாத்திகம் – சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்’ நூலாக தொகுக்கப்பட்டு, 12.11.2025 அன்று சென்னை முற்போக்கு புத்தகக் காட்சியில், கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் அரங்கு எண் 22-இல் வெளியிடப்பட்டது. ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் நூலை வெளியிட, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன் பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்டுப் பேசிய எழிலன் நாகநாதன், “திமுக இளைஞர் அணி சார்பாக அறிவுத் திருவிழா சிறப்புற நடைபெற்று வருகிறது. கருத்தரங்கம், கண்காட்சி என பல்வேறு முற்போக்கு கருத்தியல் கொண்ட தோழர்கள் தங்களின் படைப்புகளை வைத்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் எழுதியுள்ள ‘நாத்திகம்...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 8,9 ஆகிய தேதிகளில் திமுக இளைஞர் அணி நடத்திய இருவண்ணக் கொடிக்கு வயது 75 நிகழ்ச்சியில் ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு சிவப்புக் கழகமும்’ என தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி. இந்திய விடுதலையைப் பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இரண்டு விதமான கருத்து வேறுபாடு இருந்தது. தலைவர் பெரியார் துக்கநாள் என்றார். பொதுச்செயலாளர் அண்ணா மகிழ்ச்சியான நாள் என்றார். இரண்டு எதிரிகளில் ஒருவன் போய்விட்டான், மகிழ்ச்சி என்றார் அண்ணா. வெள்ளைக்காரனை விட இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவன் மோசமானவன் என்பது பெரியாரின் நிலை. அப்படித்தான் இருந்தது நிலைமை. ஆகஸ்ட் 15 விடுதலை என்றார்கள், பார்ப்பனர்களுக்கு விடுதலையாக இருந்தது. அப்படித்தான் தூத்துக்குடி மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பெரியார் 1948-இல் இயற்றினார். மற்ற மாகாணங்களில் என்னமோ செய்துவிட்டுப்போ. “ சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் இந்திய யூனியன் அரசாங்கம் சென்னை மாகாண ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை சட்டத்தை தபால், தந்தி, ரயில்வே,...
ஜீவா இந்தியை ஆதரித்தார் என்று குறிப்பிட்டதற்கு பல பேர் கொதித்தெழுந்து ஆதாரத்தைக் கேட்கத் தொடங்கினார்கள். அது குறித்தும் சில செய்திகளைப் பார்ப்போம். பெரியார் காங்கிரசில் இயங்கியபோது 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியார் பெரியாரின் இல்லத்துக்கு வந்து தங்கி இருந்திருக்கிறார். அப்போது அன்னியத் துணிகள் பகிஷ்கரிப்பு என்ற பெயரால் வெளிநாட்டுத் துணிகள் எரிக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்ததாக 1922-ஆம் ஆண்டில் ஈரோடு பெரியார் இல்லத்திற்கு மோதிலால் நேருவும், டாக்டர் அன்சாரியும் வந்ததன் நினைவாக ஈரோடு வெங்கட்ட நாயக்கர் சத்திரத்தில், ஒரு இந்தி மொழி கற்பிக்கும் பள்ளியை, ஒரு பாதி காங்கிரஸ் செலவிலும், மறுபாதி தமது செலவிலும் நடக்கும் வகையில் தொடங்கியுள்ளார். ஆனால் அதே ஆண்டு இறுதியில் திருப்பூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் “இந்தியைப் பரப்புவது என்று கூறிக்கொண்டு இந்தியில் உள்ள துளசிதாஸ் இராமாயணத்தை பரப்புவதைக் கண்டித்தும், வருணத்தையும் தீண்டாமையும் காப்பாற்றும் இராமாயணத்தையும் மனுசாஸ்திரத்தையும் எரிக்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்....
திருப்பூர் மாநகர கழகத் தலைவர் தனபால் அவர்களின் தந்தையாரும், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா அவர்களின் மாமனாருமான அய்யா ஏ.எஸ்.வீரபாகு (எ) மோதிரக்காரர் 24.10.2025 அன்று இரவு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரது சொந்த ஊரான மணப்பாறை வட்டம், கீழையூர் கிராமம் அனந்தானூர் பகுதியில், 25-10-2025 மாலை 3 மணி அளவில் இறுதி நிகழ்வுகள் இரங்கல் கூட்டத்துடன் நடைபெற்றது. தனபால் கடும் முயற்சியால் சாஸ்திர சடங்கு சம்பிரதாயங்களை புறக்கணித்து தன்னுடைய அப்பாவின் இறுதி நிகழ்வை நடத்தினார். இரங்கல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் திருப்பூர் மகிழவன் உள்ளிட்ட தோழர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர்.. திருப்பூர் தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மாநகர அமைப்பாளர் முத்து, வடக்கு ஒன்றிய அமைப்பாளர்...
மதுரை கழகத் தோழர் திலீபன் – சுமித்ரா மகள் ‘இயலினி’ பெயர் சூட்டு விழாவில், ரூ.5000-ஐ பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக கழகத் தலைவரிடம் அளித்தனர். கழகத் தோழர்கள் ஏ. இளங்கோவன் – ஆறு. விஜயா – காரைக்குடி மகள் இ.வி.இளந்தமிழ் ஒன்பதாவது வயது பிறந்தநாளை (04-11-2025) முன்னிட்டு ரூ.2000 பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக அளித்துள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் இதழ் 13112025
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த மனோகரன்- ராதை ஆகியோரின் மகன் ஸ்ரீகாந்த்ராஜ் அவர்களுக்கும், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி- கோதை ஆகியோரின் மகள் இளந்தென்றல் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 31.10.2025 வெள்ளிக்கிழமை அரியானூர் ஸ்ரீ ஆதித்யா மகாலில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மகுடஞ்சாவடி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் க.அன்பழகன் வரவேற்புரையாற்றினார். தி.க.துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஸ்ரீகாந்தராஜ்- இளந்தென்றல் ஆகியோருக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரையாற்றினார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திமுகவை சேர்ந்த கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ். ஆர்.சிவலிங்கம், திக (பெரியார் அறக்கட்டளைத் தலைவர்) பொத்தனூர் க.சண்முகம், கழகத் தோழர்கள், திக தோழர்கள், திமுகவினர் மற்றும் பலர்...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் ஓமலூர் க.சக்திவேல் அவர்களின் சகோதரர், முன்னாள் சேலம் மாவட்டத் தி.க தலைவர் தோழர் க.கிருட்டிணமூர்த்திஅவர்கள் 31.10.2025 அன்று இயற்கை எய்தினார். மறைந்த கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் தோழரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இரங்கல் உரையாற்றினார். சேலம் மாவட்ட கழகத் தோழர்கள் பலரும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 13112025
திருப்பூர் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 03-11-2025 மாலை 5 மணி அளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : தீர்மானம் -1 டிசம்பர் 24 தலைவர் பெரியார் நினைவு நாளையொட்டி கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் மாபெரும் போராட்டத்தை நடத்துவது. அதற்கான சுவர் எழுத்து, சுவரொட்டி, சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதின் மூலமாக ஜாதியத் தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது அதன் வாயிலாக தோழர்கள் மற்றும் மக்களை அணி திரட்டுவது தீர்மானம்- 2 கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” ஆண்டு சந்தா மூன்று மாவட்டங்கள் இணைந்து மொத்தம் 500 சந்தாக்களை நவம்பர் 03 தேதி முதல் டிசம்பர்...
தேர்தல் ஆணையம் என்பது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு நிறுவனம். இந்நிறுவனம் பக்கசார்பின்றி பொதுவானதாக நடந்து கொள்வதற்காகவே அதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீதித்துறை, புலனாய்வுத் துறை, தணிக்கைத் துறை என ஒவ்வொரு அரசியலமைப்பு நிறுவனங்களும் தவறாக கையாளப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு நிலவுகிறது. இதில் தேர்தல் ஆணையமும் விதிவிலக்கல்ல. தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜகாவின் ஏஜென்டாகவே மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக தாக்கி வருகிறார். பாஜகவை வெற்றி பெறச் செய்வதற்காக அக்கட்சியுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குத் திருட்டு நடத்தி வருவதாக குற்றம் சாட்டுகிறார். இதற்கெல்லாம் ஆதாரம் என்ன என தேர்தல் ஆணையம் கேட்டதற்கு, கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை ராகுல் காந்தி...
‘அதர்ஸ்’ திரைப்படம் குறித்து, நவம்பர் 6-ஆம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அப்போது இயக்குநரிடம் யூடியூபர் ஒருவர் கதாநாயகியின் எடை எவ்வளவு என்று வக்கிர எண்ணத்தோடு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதற்கு முன்பும் இத்திரைப்படம் குறித்து, நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் நாயகனிடமும் கதாநாயகியின் எடை எவ்வளவு என்ற அதே கேள்வியை எழுப்பியிருந்தார். மேலும் தன்னுடைய கேள்வியில் என்ன தவறு என்ற தொனியிலும் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டு இருந்தார். அந்த யூடியூபருக்கு பதிலளித்த கதாநாயகி கௌரி கிஷன், “இந்தக் கேள்விக்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எனது கதாபாத்திரத்தைப் பற்றியோ, அதற்காக நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றியோ ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. எனது எடை என்னவென்று தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இதே கேள்வியை ஒரு கதாநாயகனிடம் கேட்பீர்களா?” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். இந்தக் கேள்வி சாதாரணமாகக் கேட்கப்பட்டது என்ற தொனியில் மற்றொருவர் இதை நியாயப்படுத்த,...
கோயில் திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் என நம் நாட்டில் எத்தனையோ திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கோயில்களில் கூட சைவ, வைணவக் கோயில்களில் ஒரு மாதிரியாகவும், கிராமப்புறங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் வேறு விதமாகவும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சைவ, வைணவக் கோயில்களின் திருவிழாக்கள் மாரியம்மனை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. மாரியம்மன் கோயில் திருவிழாக்களோ ஜாதியை மட்டுமே பொருட்டாக வைத்துக்கொண்டு, யார் பங்கேற்கலாம், யார் பங்கேற்கக் கூடாது என எல்லைக்கோடுகள் வரைந்திருக்கும். அதேபோல குடும்ப விழாக்களிலும் திருமணங்கள் முதல் பூப்புனித நீராட்டு என்பன வரை அனைத்திலும் பிற்போக்குத்தனமே நிறைந்திருக்கும். பொதுவாக கோயில் திருவிழாக்களோ, குடும்ப விழாக்களோ எல்லாவற்றிலும் குடியும், தகராறுமே நிரம்பியிருக்கும். இளைய தலைமுறை கற்றுக்கொள்ளவோ, அறிவைப் பெருக்கிக்கொள்ளவோ இத்தகைய திருவிழாக்களில் எதுவும் இருப்பதில்லை, சீரழிவதற்கான சாத்தியங்களை மட்டுமே நிரப்பி வைத்துள்ளன. ஆனால் இத்தகைய பிற்போக்குத்தனங்கள், சமூக சீரழிவுகளுக்கு மாற்றான ஒரு புதிய கொண்டாட்டத்தை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி. அக்கட்சியின் பவள...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி, அதன் இளைஞர் அணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நவம்பர் 8ஆம் தேதி ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். இந்நூலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர் பிரகாசு ஆகியோர் கட்டுரை எழுதியுள்ளனர். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நவம்பர் 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை முற்போக்கு புத்தகக் காட்சியும் நடைபெறுகிறது. இதில் அரங்கு எண் 22-இல் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கு பெற்றுள்ளது. கருத்தரங்கில் மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. அதில் கடைசி அமர்வு பெரியாரிய இயக்கத் தலைவர்களைக் கொண்டு நிறைவுற்றது முத்தாய்ப்பாக அமைந்தது. புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் நடைபெற்ற அந்த அமர்வில், ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு...
திருப்பூர்: மடத்துக்குளம் – கணியூர் காரத்தொழுவு, துங்காவி பகுதிகளில் 12-10-2025 அன்று மடத்துக்குளம் மாவட்டக் கழகம் சார்பாக தந்தை பெரியார் 147வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, ‘ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்’ என்கிற கருத்தை முன்வைத்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேலு, கழக மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் விசிக ராஜசேகர், கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கடத்தூர் சரவணன் நன்றி உரையாற்றினார். மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,...
காரைக்குடி அருகே உள்ள சிராவயலில் காந்தி ஆசிரமத்தை ஜீவா தோற்றுவித்தார் என்ற செய்தி மிக அழுத்தமாக தமிழ்நாட்டில் பதிய வைக்கப்பட்டுள்ளது. 02.02.2019 விகடன் இணையதளத்தில் “ஜீவாவின் 22 நூல்களுக்கு மேல் தொகுத்த கே. ஜீவபாரதி சிராவயலில் காந்தி – ஜீவானந்தம் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடம் கோரிக்கை வைத்ததாக” செய்தி காணப்படுகிறது. (முழு உள்ளடக்கங்களைப் பற்றி பின்னர் பார்ப்போம்) அந்த கோரிக்கை இன்றைய அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜீவா நினைவுக் கட்டடம் ஏறத்தாழ கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அங்கு ஜீவாவின் சிலை ஒன்றும் வைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் உள்ளன. ஜீவா – சிராவயல் – காந்தி ஆசிரமம் என்ற செய்தியின் உண்மைத் தன்மையைக் குறித்து அறிவது தற்போது தேவையாக்கப்பட்டு விட்டது. இந்தக் கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிடப்பட்ட இஸ்மத் பாஷாவின் ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ (1946) கே.பாலதண்டாயுதம் எழுதிய ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ (1966) ஆகிய...
திமுகவின் பவள விழா நிறைவை அறிவுத் திருவிழாவாக கொண்டாடுவதாக அறிவித்துள்ளது அதன் இளைஞர் அணி. இதனையொட்டி ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் என பன்முகப் பார்வையில் திமுகவை விவரிக்கும் 80 கட்டுரைகள் அடங்கிய ‘காலத்தின் நிறம் கருப்பு- சிவப்பு’ என்ற நூல் வெளியீட்டு விழா, ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ இருநாள் கருத்தரங்கம், முற்றிலும் புதிய முயற்சியாக பெரியாரிய- அம்பேத்கரிய- மார்க்சிய பதிப்பகங்கள் மற்றும் நூல் விற்பனையாளர்களை மட்டும் அழைத்து சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி ஆகிய நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளனர். நவம்பர் 8 முதல் 16 வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூலில் ‘சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘சமூகநீதியை அர்த்தமுள்ளதாக்கும் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?’ என்ற...
திமுக ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு எதிராக திமுகவினரால் துன்புறுத்தல் நடக்கிறது என்ற மோடியின் பேச்சு., அவரது பதவிக்கு உரிய பண்பாடுஅல்ல என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார். பாஜக ஆட்சியோடு முதல்வருக்கு முரண்பாடுகள் இருந்தாலும் கூட சர்வதேச விளையாட்டு போட்டியானாலும், கலைஞர் நாணய வெளியீட்டு விழாவானாலும் பிரதமரையும் மத்திய அமைச்சரையும் அழைக்க வேண்டிய கடமையை உணர்ந்து தனது முதல்வர் பதவிக்குரிய பண்பை வெளிப்படுத்தியவர் தமிழ்நாடு முதல்வர். தமிழ்நாட்டில் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக பீகாரிகள் ஏதாவது பிரதமரிடம் முறையிட்டார்களா? பீகார் அரசு குற்றம் சாட்டியதா? பீகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சருக்கு மோடி ஏதாவது கடிதம் எழுதினாரா? எதுவுமே இல்லை! பீகாரின் தலை விரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் திராவிட மாடல் ஆட்சியை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறது. எந்த திமுகவை மோடி குற்றம் சாட்டுகிறாரோ அந்த திமுக ஆட்சியில் தான் பீகாரிகளுக்கு வேலைவாய்ப்பும் பாதுகாப்பும் கிடைக்கிறது. பீகாருக்குக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரதமராக இருக்கும் ஒருவர்...
“உலக நாடுகளில் இந்தியாவையே தலை குனிய வைக்கும் அவமானம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்திருக்கிறது”. சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு வந்த இரண்டு ஆஸ்திரேலியப் பெண்கள் பட்டப் பகலில் அவர்கள் தங்கி இருந்த ஓட்டலின் அருகிலேயே வன்முறைக் கும்பல்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பாதுகாப்பை நம்பி விளையாட வந்த பெண்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது, உலக நாடுகளில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இந்தியாவிற்குப் பயணம் செய்வது பெண்களுக்கு ஆபத்து நிறைந்தது என்று எச்சரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நிலைமையை மிகவும் மோசமாக்கி விட்டது. சர்வதேச விளையாட்டுப் போட்டியை நடத்தும் ஒரு மாநிலம் அதில் பங்கேற்கும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி இருப்பது வெட்கக்கேடானதாகும் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தலையங்கம் கூறுகிறது. எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்...
சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 2024-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்-ஸை சேர்ந்த இருவர் உள்ளே நுழைந்து, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு மாணவர்களிடையே ஜாதிய மதவாத நச்சுக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக, ஏ.பி.வி.பி-யின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கையில் வைத்துக்கொண்டு, நாங்குநேரியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சின்னதுரை ஆதிக்க ஜாதிவெறி கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டவுடன் தமிழ்நாடு அரசால் நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டியின் பரிந்துரையை விமர்சித்தும், அந்த அறிக்கை இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள், குறிப்பாக சமூக அக்கறைகொண்ட, அரசியல் உணர்வு கொண்ட மாணவர்கள் (தமிழ்நாடு மாணவர் கழகம், இந்தியா மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி) கல்லூர்ri மாணவர்கள் நேரில் சென்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இருவரையும் விசாரித்தனர். விசாரிக்கும் போது...
பீகாரில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என ஆளும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க எண்ணமில்லாதவர்கள் 65 லட்சம் பேரை நீக்கிய கையோடு தமிழ்நாடு விரைந்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்குப் பெயர் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.). வாக்காளர் பட்டியலில் ஆட்களை குறைப்பதோ, சேர்ப்பதோ அரசியல் கட்சிகளின் பிரச்னை, தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத அமைப்புகளுக்கு அதைப்பற்றி என்ன கவலை என்று ஒதுங்கிவிட முடியாது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. நீதித்துறையைக் கைப்பற்றுதல், அமலாக்கத்துறையைத் தன்வயப்படுத்துதல், எதிர்க்கட்சிகளை அழித்து அரசியல்வாதிகளை – சட்டமன்ற உறுப்பினர்களை – மக்களவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் என்பன போன்ற பாஜக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்குகள் இப்போது, ‘மக்களைத் தகுதிநீக்கம் செய்தல்’ என்ற இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இந்தத் திருநாட்டில் வாக்காளர் பட்டியல் ஒன்றைத் தவிர வேறெங்கும் அனைவரும் சமமானவர்கள் இல்லை. சேரியை விட ஊர் மேலானது, ஊரை விட அக்ரஹாரம் மேலானது என்ற மோசமான வருணாசிரம...
தூத்துக்குடி மாவட்ட க் கழகம் சார்பில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவை குளம் முதன்மை சாலையில் 23.09.2025 அன்று மாலை 05.30 மணியளவில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம் ” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகப் பொருளாளர் கே. சந்திரசேகர் தலைமை வகித்தார். வடக்கு சோட்டையன் தோப்பு ச.கா.பால சுப்பிரமணியன், ஆழ்வை ஒன்றிய கழகச் செயலாளர் ஆழ்வை இரா.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச.ரவிசங்கர் வரவேற்புரையாற்றினார். நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன், தென்காசி மாவட்ட தலைவர் குறும்பை அரு.மாசிலாமணி, தென்காசி செந்தமிழ், பாலசுப்பிரமணியன், மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் செய்யது சம்சுதீன், சமம் குடிமக்கள் இயக்க மாவட்டப் பொறுப்பாளர் ஜாண்.பி.ராயர், வி.சி.க. மகேஷ், தி.மு.க. ஒட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர், இளம்பேச்சாளர் இள.கார்த்திக், மனித நேய மக்கள்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவையின் கிளை திறப்பு விழா ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சார்பாக தந்தை பெரியார் தொழிற்சங்கம் திறப்பு விழா 23.10.2025 அன்று நடைபெற்றது. சி.குப்புசாமி (பொதுச் செயலாளர் தந்தை பெரியார் தொழிற்சங்க, பேரவை) தலைமையில் கோ. செல்லதுரை (அந்தியூர் கிளை தலைவர்) வரவேற்புரையாற்றினார். காவை ஈஸ்வரன் (தலைமைக் குழு உறுப்பினர்), நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர்), ஈஸ்வரன் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் விசிக, வேங்கை பொன்னுச்சாமி தமிழ்ப் புலிகள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் ஆகியோர் தொழிற்சங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். கௌசல்யா அந்தியூர், பெருமாள் அந்தியூர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கழகத்தின் சார்பாக வேணுகோபால் பவானி, சேகர் வெள்ளி திருப்பூர், குமரேசன் கொளத்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியாரிய உணர்வாளர்கள், தோழமை இயக்கத் தோழர்கள்...
ஜாதிய – வளர்க்க ஆணவப் படுகொலைகள் எதிர்ப்பு,பெண்களின் காதல் திருமணத் தேர்வு உரிமை, காதலர் உயிர் காக்க சட்டம், சமூகப் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சமத்துவக் கருத்தரங்கம் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் கிராமசுப்பு அரங்கம்(கவின் – சதீஷ்குமார் நினைவு அரங்கத்தில்) மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. ஜாதி ஒழிப்பு முன்னணி மதுரை மாவட்டச் செயலாளர் சீ.கா. தெய்வம்மாள் தலைமையில் நடைபெற்றது. தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் மதுரை மாவட்டச் அமைப்பாளர் கொ. மனோகரன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவர் தொ. ஆரோக்கிய மேரி நோக்க உரையாற்றினார். ஐந்திணை மக்கள் கட்சித் தலைவர் தேவதாசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாலின், தமிழ் புலிகள் கட்சியை முத்துக்குமார், மக்கள் தேசம் கட்சியைச் குரு விஜயன், திராவிடத் தமிழர் கட்சி விடுதலை வீரன், ஆதித்தமிழர் பேரவைச் கார்த்திக்,நீதிவேந்தன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவை காமேஸ்வரி, மக்கள் பாதை...
ஈரோடு தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரி பேரூராட்சி, அண்ணா கலையரங்கத்தில் 11.10..2025 சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணி அளவில் கழக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், முன்னாள் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர்செ. சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகச் செயல்பாட்டாளர் ஈரோடு நல்லதம்பி வரவேற்புரையாற்றினார். சிவகிரி பேரூராட்சித் தலைவர் பிரதீபா கோபிநாத், சிவகிரி தி. மு. க 10 வார்டு செயலாளர் தண்டாம்பாளையம் தா. கு. அன்பரசு, சமூக நீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல்ராமன், ஆதித்தமிழர் பேரவை மாநில நிதிச் செயலாளர் பெருமாவளவன், மதிமுக ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் மு. கோபால், திகஒன்றிய பொறுப்பாளர் சிவகிரி சண்முகம், திராவிடர் எழுச்சிப் பேரவைத் தலைவர் சக்திவேந்தன், தமிழ்ப்...
2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது! கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு அறிவிப்பு! ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப்பாடுபட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேன்மொழி சவுந்தரராஜனுடைய பெற்றோர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்காவில் வசித்து வரும் தேன்மொழி சவுந்தரராஜன், இந்திய அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கட்டமைப்பு ஜாதியத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அமெரிக்காவிலும், உலக அளவிலும் ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சிவில் உரிமைகள் அமைப்பான ‘ ஈக்வாலிட்டி லேப்ஸின்’ (Equality Lab) நிறுவனர் / நிர்வாக இயக்குநர் ஆவார். தலித் பெண் பார்வையில் ஜாதிய ஒடுக்குமுறை குறித்து ஆய்வு நூலை எழுதியவர். வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேன்மொழி...
பெரியார் வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் 37 பேர் இணைந்து வாட்ஸ்அப் குழு வழியாக புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு மாதம் தலா ரூ. 500 என நன்கொடை திரட்டி வருகின்றனர். ஓராண்டு செயல்திட்டமாக இதை செயல்படுத்தி வருகின்றனர். அக்டோபர் மாத நன்கொடையாக ரூ.18,300 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). பெரியார் முழக்கம் இதழ் 30102025
பழையனவற்றிலிருந்து புதிய சடங்குகள் மட்டும் உருவமைக்கப்படுவதில்லை; ஆண்-பெண் கடவுளர்களும் புதிய வடிவத்தை அடைகின்றனர். அண்மைக்காலம் வரை சாதாரண மக்களோடு தொடர்புடைய கடவுளர்களும் தேவியர்களும் இப்போது பெருவணிக வளாகங்களும், பல்திரையரங்குகளும் (மால்களிலும் மட்டிபிளக்ஸுகளும்) கொண்ட ஆரவாரப் பகட்டுள்ள புதிய நகர்ப்புறங்களில் இருப்பிடம் பெறுகிறார்கள். நாட்டின் தென் பகுதியில், ஒருகாலத்தில் மக்களின் ஆரோக்கியத்தையும் மண்ணின் வளத்தையும் பாதுகாத்துவந்த கிராம தெய்வங்கள் அல்லது அம்மன்கள், இப்போது நடுத்தர வகுப்பினரால் ஏற்கப்படுகின்றனர். இப்போக்கு, ‘கடவுளரின் தரம் உயர்த்துதல்’ எனப்படுகிறது. நாட்டின் வடக்குப் பகுதியில், ‘மாதா’க்களின் கோயில்கள் அல்லது சக்திபீடங்களுக்குச் செல்லும் (சதி என்ற தேவியின் உடலுறுப்புகள் பலவும் விழுந்ததாகக் கருதப்படுகின்ற இடங்கள்) புனித யாத்திரைகள் மிகவும் பெருகியுள்ளன. சென்னை மாநகரத்தின் சாலையோரக் கோயில்கள் பற்றி அண்மையில் யு. கல்பகம் என்பவர் செய்த ஆய்வு, மாரியம்மனின் தரம் உயர்த்துதல் பற்றிய இயங்கு முறையைத் தெரிவிக்கிறது. தென் சென்னையின் மயிலாப்பூர் – மந்தை வெளிப் பகுதியில் உள்ள சாலையோரக் கோயிலான...
ஜீவாவின் ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்பதை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் சில செய்திகளை முன்னோட்டமாக முன்வைக்கிறோம். தோழர் ஜீவா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பலர் எழுதியிருந்தாலும், தோழர் எம். இஸ்மத் பாஷா எழுதிய ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ மட்டுமே ஜீவா வாழ்ந்த காலத்தில் (1946 மார்ச்) வெளிவந்த நூலாகும். அந்நூலுக்கு முகவுரை எழுதியுள்ள தோழர் ஏ.எஸ்.கே (அய்யங்கார்) அம்முகவுரையில் “நான் கண்டிப்பாக முகவுரை எழுத வேண்டும் என்று ஜீவாவே கூறினார். என் நண்பரின் கட்டளைக்குப் பணிகிறேன்” என்று குறிப்பிட்டே முகவுரை எழுதியுள்ளார். எனவே அந்த நூல் ஜீவாவின் பார்வைக்கும் ஏற்புக்கும் பின்னர் தான் வெளிவந்திருக்க வேண்டும். அந்நூலின் 12ஆம் பக்கத்தில் “கொள்கைக்காக வீட்டை விட்டு ஜீவா நேராக சுசீந்திரம் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு தெருப்பிரவேச சத்தியாகிரகம் ஆரம்பிக்கும் தருவாயில் இருந்தது. தெருக்களில் அரிஜனங்கள் செல்லக்கூடாது என்ற சமூக அநீதி அங்கு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது; உலகப் பிரசித்திப் பெற்ற வைக்கம்...
“மாரி செல்வராஜின் படைப்பாக்கத்தில் ஐந்தாவது திரைப்படமாக ‘பைசன்’ வந்திருக்கிறது .திரை அரங்கில் இந்தப் படத்தைப் பார்த்த போது படம் முழுதும் பார்வையாளர்களிடம் அப்படி ஒரு அமைதி.படம் முடிந்து வெளியேறும் போதும் கனத்த இதயத்துடன் எந்தப் பேச்சும் இல்லாமல் வெளியேறியதை பார்க்க முடிந்தது. பார்வையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை படம் உருவாக்கி இருக்கிறது என்பதை உணர்த்தியது. 1990-களின் முற்பகுதியில் நெல்லை மாவட்டம் ஜாதிக் கலவரங்களில் மூழ்கிக் கிடந்த நேரத்தில், ஜாதி வலிகளை சுமந்து ஒரு இளைஞன் தான் நேசித்த கபடியில் சர்வதேச அளவில் தடம் பதித்த வெற்றிக்கதையை ஜாதி எதிர்ப்போடு படம் பேசுகிறது. கதையின் நாயகர் நாயகிகளை, உணர்வுகளின் வடிவமாக்கி, தனது நுட்பமான திரை மொழியில் எமோஷன்களாக மக்களிடம் கடத்தும் இயக்குனர், இந்த உணர்வுகளோடு ஜாதி எதிர்ப்பையும் குழைத்துத் தந்திருக்கிறார். படத்தின் மய்யம் கபடியாக இருப்பதால் அது இளைஞர்களை ஈர்க்கிறது. கபடியோடு ஜாதித் தடைகளும், கொடுமைகளும் இணையும் போது புரிதலற்ற, இளைஞர்களை சிந்திக்கத் தூண்டுகிறது.ஜாதி...
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சனையில் கேரள உயர்நீதிமன்றம் புரட்சிகர தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. “பழக்க வழக்கங்கள்” என்ற சட்டத்தின் பிரிவை கண்மூடித்தனமாக ஏற்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. `பழக்க வழக்கம்’ அரசியல் சட்டத்தின் நோக்கத்திற்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. “அர்ச்சகர்கள் குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாய மத நடைமுறை எதுவும் இல்லை” என்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் செய்வது அரசியலமைப்பு கூறும் சமத்துவத்தை உறுதி செய்யும். ஜாதிக்கும் பாரம்பரியத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் கூறியிருக்கும் நீதிபதிகள், இதுதொடர்பான விவகாரத்தில், அகில கேரள தந்திரி சமாஜம் (AKTS) என்ற பார்ப்பனர்கள் அமைப்பு தாக்கல் செய்த ரிட் மனுவையும் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது 2023-24ஆம் ஆண்டில் (அர்ச்சகர்கள்) நியமன நடவடிக்கைகளை கேரள தேவசம் பணிநியமன வாரியம் (KDRB) மேற்கொண்டது. அப்போது உரிய பயிற்சிப் பெற்றவர்கள்...
ம.பி மாநிலத்தில் தீபாவளிக்காக கார்பைடு துப்பாக்கி பட்டாசு கடைகளில் விற்பனையானது. கடும் ஆபத்துகளை உருவாக்கும் ரசாயனம் கலந்த இந்த துப்பாக்கி தடை ஏதும் இல்லாமல் கடைகளில் விற்கப்பட்டன. இந்த துப்பாக்கியை வெடித்த 23 பேர் மோசமாக கண்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தைகள். தோட்டங்களில் குரங்குகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் ரசாயனம் இந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் இந்த துப்பாக்கியின் சிறப்பை விளம்பரம் செய்து விற்பனைகளை தூண்டிவிட்டன. சிகிச்சை பெறும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும், பார்வை இழக்கும் நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. பெரியார் முழக்கம் இதழ் 30102025
பொது இடங்களிலும், சாலைகளிலும் (சட்ட) அனுமதி பெறாமல், கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் அதேபோன்று மத நிறுவனங்களால் கட்டப்பட்ட அமைப்புகள் எவையும் இல்லை என்பதை உறுதி செய்து தகவல் தெரிவிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அரசிடம் விளக்கம் கேட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் சிறீவத்சவா, ஜஸ்டிஸ் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு இப்படி ஒரு முக்கிய வழக்கைத் தாங்களே பதிவு செய்துள்ளது. 31.1.2018 அன்று தந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பில், ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றிடவேண்டும் என்று தீர்ப்பு தந்தும், ஆக்கிரமிப்புக் கோவில்கள் அமைப்புகள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் பாயாமல், மறைமுகமாக அதனை ஊக்குவிக்கும் வகையில், காவல்துறையும், அரசும் கண்டும் காணாததுபோல அலட்சியப்படுத்தி வருவதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 30102025
மனித குல வரலாற்றில் பொதி சுமந்து தொண்டாற்றிய கழுதை இனம் மறைந்து வருகிறது. நாடு முழுதும் 70 விழுக்காட்டிற்கு மேற்பட்ட கழுதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன என்றும், மத்திய பிரதேச மாநிலத்தில் 94 விழுக்காடு கழுதைகள் காணவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ம.பியில் 7 மாவட்டங்களில் ஒரு கழுதை கூட இல்லை. சீனாவில் முகப்பொலிவுக்கும், உடல் தோலுக்கும் கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கழுதைகள் கொல்லப்பட்டு ஏற்றுமதியாவதும் காரணம் என்று கூறப்படுகிறது. பசுமாட்டுக்குத் தான் இந்த நாட்டில் மதம் கண்ணீர் வடிக்கும். கழுதை பற்றி கவலைப்படாதது காரணம் பசு ’பிராமணர்’ பிரிவிலும் கழுதை ’சூத்திர’ பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 30102025
மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எந்த மதத்தில் இருப்பது என்பது தனி மனித உரிமை. அதில் அரசு தலையிட உரிமை இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உ.பி உள்ளிட்ட பல மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நீதிபதி ஜே.பட்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு தனி மனித சுதந்திரத்தை அடிப்படை உரிமையாகவே வெளிப்படுத்துகிறது என்று கூறிய நீதிபதிகள், மனசாட்சி உரிமை என்பது தனி மனிதரின் சிந்தனை உரிமை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்கள். அதேபோல் திருமணத்தில் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமையும் தனி மனித உரிமை என்றும், யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பதில் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை என்றும், அது தனி நபர் உரிமையைச் சார்ந்தது என்றும் தீர்ப்பளித்துள்ளது. திருமணம் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும் யாரைத் திருமணம் செய்து...
திருப்பூர்: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு 11 இடங்களில் “ஜாதி நமக்கு அவமானம் மனிதம் நமது அடையாளம்” தெருமுனைக் கூட்டங்கள் அக்-05 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.ஒரே நாளில் 11 இடங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையை திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நடத்தினர்.பறை இசை முழக்கங்களோடு தொடங்கி, குழந்தைகள், மற்றும் பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். முகில் இராசு மாவட்டத் தலைவர் முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாக பாரதி நகர் பகுதியில் பெரியார் படிப்பகத்தில் ஜாதி எதிர்ப்பு பரப்புரைக் கூட்டம் தொடங்கியது. வீரபாண்டி பிரிவு, கொளத்துப்பாளையம், கரை தோட்டம் (தென்னம்பாளையம்), மாஸ்கோ நகர், பெரியார் காலனி, அனுப்பர்பாளையம், அம்மா பாளையம், ஆத்துப்பாளையம் 15 வேலம்பாளையம் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. (கழகப் பொருளாளர்) சு துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர் தமிழ்நாடு அறிவியல் மன்றம்), பரிமளராசன் (சமூகஊடகப்...
கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-20 அறிஞர் அண்ணா கடவுள் மத மறுப்பாளர். கடவுள்,மதம், புராண எதிர்ப்பு கட்டுரைகளை ஏராளமாக எழுதியுள்ளார். திமுக என்ற அரசியல் கட்சியான பிறகு ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தை சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தின் வழியாக முன்வைத்தார். இது திமுகவின் அதிகாரபூர்வமான கொள்கை அல்ல! 1945 -ல் அண்ணா எழுதிய கடவுள், மத எதிர்ப்பு கட்டுரை.. கரிமுகத்தோடு ஒரு கடவுள், நாக்கிலே நாயகியுடன் ஒரு கடவுள், நடனமாடும் மயில் மீது மற்றோர் கடவுள், அலைகடல் மீது ஆலிலைமேல் துயிலும் வேறோர் கடவுள், தலைமீது தையலுடன் பிறிதோர் தேவன், என்ற இன்னோரன்ன கடவுள்கள் இருந்து கொண்டு இன்னின்னவருக்கு இன்னின்ன விதமான நிலைமை இருக்க வேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாழ்கிறார்கள் என்பதை இன்றும் நம்பி, அந்த நம்பிக்கைக்கேற்ற நாள் நட்சத்திரம் நடவடிக்கைகளிலே பாசம் வைத்துக் கொண்டுள்ள மக்களிடத்திலே, கான்ஸ்ட்டிடியூவண்ட் அசெம்பிளி பற்றியும், காரல் மார்க்சின் கருத்துப்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி கே.என் பாஷா தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளார். ஆணவப் படுகொலைகள் குறித்து பல வரலாற்றுத் தகவல்களை தருகிறது இக்கட்டுரை… தீண்டாமைக் குற்றச் சட்டம் (Untouchability offences act, 1955) என்னும் சட்டம்தான் தற்போதைய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கான முன்னோடி. முந்தைய சட்டத்தின் போதாமைகளால் உருவானதுதான் பட்டியல் ஜாதியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம். இளையபெருமாள் ஆணையத்தை அடிப்படையாகக் கொண்டு, இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு படுகொலை ஆணவப் படுகொலையா இல்லையா என்பதை வேறுபடுத்தி, அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளத் தனிச்சட்டம் தேவையாக இருக்கிறது. இத்தகைய தனிச்சட்டங்கள் குறித்து நீதிமன்றங்களின் பார்வையை கணக்கில் கொண்டால் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டேதான் இருந்திருக்கிறது. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அளித்த மூன்று வழக்குகளின் தீர்ப்புகளில் இவை வலியுறுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டாக...
திருப்பதி ஏழுமலையான், சபரிமலை அய்யப்பன், குருவாயூர் கிருஷ்ணன் என்ற பிரபலமான கோயில்களின் ஊழல் மோசடிகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையான உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இணைந்து திருடியப் பணத்தில் பங்கு போட்டு இருக்கிறார்கள். திருடியவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பங்குச் சந்தையிலும், வீடு, மனைகள் வாங்கிக் குவிப்பதிலும் ஏழுமலையான் காணிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர நெய், லட்டு பிரசாதம், தரிசன டிக்கெட் ஊழல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதே போல் சபரிமலை கோயிலின் கருவறை வாயிலில் உள்ள துவாரக பாலர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் பூசப்பட்டிருந்த தங்கம் திருடப்பட்டுள்ளது. இந்த தங்கக் கவசத்தை பழுது நீக்கி செப்பனிட்டு தரும் வேலை ஒரு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு முறை சீரமைத்து ஒப்படைத்துள்ளார். இந்த சீரமைப்பின் போது 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டது கண்டறியப்பட்டு,...
பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஜீவானந்தம் (ஜீவா) ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பெரியார் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு… கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த புதிய தோழர்களுக்கான பயிலரங்கின் நிறைவில் 28.9.2025 அன்று மாலை நடந்த ‘அய்யம் களைதல்’ நிகழ்வில் தோழர் பிரவீன் சுப்ரமணியன் எனும் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் “தோழர் ஜீவா எழுதிய ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் வைத்துள்ள விமர்சனங்களைப் பற்றித் தெளிவுபடுத்துமாறு கோரினார். நான் அந்த நூலினைப் பற்றி நூலின் செய்திகளைப் பற்றி நூல் ஆசிரியரைப் பற்றி முன்வைத்த பல செய்திகள் ஜீவா பற்றாளர்களைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கி விட்டது. ஆவேசமான எதிர்வினைகள் சமூக ஊடகங்களில் கொட்டப்பட்டன. பொழியப்பட்ட வசை மொழிகள் எளிய தோழர்களிடமிருந்து மட்டுமல்ல; முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தும் வந்தன. சீமானோடு ஒப்பிட்டு விட்டீர்களே என்ற சொற்கள் எல்லா பதிவுகளிலும்...
தமிழ்மதி-பிரகாஷ் இணையேற்பு விழா நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மின்னக்கல் பகுதியைச் சார்ந்த திக வெண்ணந்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் செல்வகுமார் – மணிமேகலை ஆகியோரின் மகள் தமிழ்மதி அவர்களுக்கும், ராணிப்பேட்டை, நெமிலி வட்டத்தைச் சார்ந்த சௌந்தர் காந்திமதி ஆகியோரின் மகன் பிரகாஷ் அவர்களுக்கும் 06.10.2025 திங்கட்கிழமை அன்று காலை 11 மணியளவில் ஓலைப்பட்டியில் மணமகள் இல்லத்தில் சுயமரியாதை வாழ்க்கை இணை ஏற்பு விழா திராவிடர் கழகம் (பெரியார் அறக்கட்டளை தலைவர்) பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வி.சி.க நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் அன்பரசன் வரவேற்புரையாற்றினார். திக (மாநில ஒருங்கிணைப்பாளர்) ஊமை ஜெயராமன், திக (நாமக்கல் மாவட்டத் தலைவர்) குமார், திவிக (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சாமிநாதன், வி. சி. க (நாமக்கல் சேலம் மண்டல துணைச் செயலாளர்) அரசன், திவிக ( தலைமைக் குழு உறுப்பினர்) காவை. ஈஸ்வரன், திக(சேலம் மாவட்டத் தலைவர்) வீரமணிராஜ், திக (சேலம்...
பார்ப்பனராக பிறந்தாலும் பார்ப்பனியத்தை மறுத்த இரண்டு நாத்திகர்கள் பற்றிய தகவல்களை இக்கட்டுரை விளக்குகிறது. ஒருவர் அஸ்ஸாமியப் பாடகர் ஜுபின் கார்க். அண்மையில் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற அவர் ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. இப்போது மரணத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. மற்றொருவர் ஆந்திராவில் பார்ப்பனராக பிறந்து நாத்திகத்தை வாழ்வியலாக ஏற்று இயக்கம் நடத்திய கோரா (கோபராஜூ ராமசந்திர ராவ்). பெரியாருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் இணைந்து மாட்டுக்கறி-பன்றிகறி விழா நடத்தினார்கள். செப்டம்பர் 19, 2025 அன்று, கார்க் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றார். தனது 52 வயதில் இறந்தார். ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. அசாம் அரசு செப்டம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாள் மாநில துக்கத்தை...
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பொன்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் அஜி. இவரது மகன் ஆனந்த் அஜி (24) ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வந்த இவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன் மரணமடைந்தார். ஆனந்த் அஜி பொன்குன்னத்தில் தன்னுடைய தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வீட்டினர் கோட்டயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் அனந்து அஜி திருவனந்தபுரத்திலுள்ள ஒரு லாட்ஜில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார். இந்நிலையில் ஆனந்த் அஜியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியானது. இந்த பதிவை அவர் தன்னுடைய மரணத்திற்குப் பின் வெளியாகும் வகையில் டைம் செட்யூல் செய்திருந்தார். அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு: என்னுடைய...