ஈரோடு தமிழன்பனுக்கு புகழ்வணக்கம்!
திராவிட இயக்கக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 22.11.2025 அன்று தனது 92ஆம் வயதில் காலமானார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் நெருங்கி பழகியவர் ஈரோடு தமிழன்பன். சீரிய பகுத்தறிவாளர். பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
`வணக்கம் வள்ளுவ’ என்னும் புகழ்பெற்ற கவிதை நூலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாடெமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ‘உலகத் தமிழ்ப் பீட விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஈரோடு தமிழன்பனின் இழப்பு தனிப்பட்ட அவருடைய குடும்பத்திற்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்திற்குமான பேரிழப்பு. கவிதைகள், இலக்கியத்தின் ஊடாக அவர் விட்டுச்சென்ற பெரியாரியல் பணியை, விதைத்துச் சென்ற சுயமரியாதைச் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதே அவருக்கான நினைவஞ்சலி.
ஈரோடு தமிழன்பன் கவிதையில் இருந்து…
எல்லையற்ற இரக்கத்தின் திருஉருவம் பெரியார்!
அவருடைய ஆத்திரம், போராட்டம், புரட்சி அனைத்துமே.
புதைகுழி விளிம்பிற்குத் தள்ளப்பட்ட
தமிழ்மானுடனைக் காக்கத் துடித்த கருணையின் வெளிப்பாடே அன்றி, வேறு என்ன?
பாலஸ்தீனத்தில் பிறந்திருந்தால்
அவர் யாசர் அராஃபத்துக்குத் தோளில்
துப்பாக்கி ஆகியிருப்பார்!
அல்லது தந்தை பெரியார் தோளில் அராஃபத் துப்பாக்கியாகி இருப்பார்.
ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தால்
நெல்சன் மண்டேலாவின் சிறைக்குப்
பக்கத்துச் சிறையில்
விடுதலை வேள்வி செய்திருப்பார்
அல்லது அவருடைய சிறையிலிருந்தே போராடி ஆப்பிரிக்காவையும் அவரையும் விடுவித்திருப்பார்.
கருணை மறவர் பெரியார்
புலி தனது குட்டியைக் கவ்வுவதுபோலத்
தமிழர்களைக் கவ்வினார்.
பதிந்திருக்கலாம் பல்;
படிந்திருக்கலாம் சுவடு
தாய்ப்புலியின் பாதுகாப்பு நடவடிக்கை
அது! தப்புத் தமிழன்தான் தவறென்று பேசுவான்.
வீடு, சொத்து, பதவி, சுகம்
எல்லாம் துறந்து வெட்டவெளி வீதியில் நின்று தனது வயது, தளர்ச்சி, நோய், வலி எதையும் பொருட்படுத்தாது
தமிழனை மீட்கப் போராடிய பெரியாரை
முரட்டுச் சித்தர்கள் வழியில் வந்த
ஒரு பகுத்தறிவு மகரிசி என்றால்
இல்லை என்று எந்த விரல்
எதிர்ப்புக் காட்டி நீளும்?
ஆயிரம் பல்லாயிரம் கண்ணாடிகளாகித்
தந்தை பெரியார் முகத்தைப்
பிரதிபலித்துத் தமிழர்கள் அவருக்கு
நன்றி சொல்லலாம்.
முகத்தைப் பிரதிபலிப்பதை நிறுத்திவிட்டு
அவருடைய அகத்தைப் பிரதிபலித்தால்
தமிழர்களுக்குத் தந்தை பெரியார் நன்றி சொல்வார்.
-ஈரோடு தமிழன்பன்
பெரியார் முழக்கம் இதழ் 27112025
