சென்னையில் முற்போக்கு புத்தகக் காட்சி

திமுகவின் பவள விழா நிறைவை அறிவுத் திருவிழாவாக கொண்டாடுவதாக அறிவித்துள்ளது அதன் இளைஞர் அணி. இதனையொட்டி ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் என பன்முகப் பார்வையில் திமுகவை விவரிக்கும் 80 கட்டுரைகள் அடங்கிய ‘காலத்தின் நிறம் கருப்பு- சிவப்பு’ என்ற நூல் வெளியீட்டு விழா, ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ இருநாள் கருத்தரங்கம், முற்றிலும் புதிய முயற்சியாக பெரியாரிய- அம்பேத்கரிய- மார்க்சிய பதிப்பகங்கள் மற்றும் நூல் விற்பனையாளர்களை மட்டும் அழைத்து சென்னை முற்போக்கு புத்தகக் காட்சி ஆகிய நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளனர். நவம்பர் 8 முதல் 16 வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூலில் ‘சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘சமூகநீதியை அர்த்தமுள்ளதாக்கும் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?’ என்ற தலைப்பில் கழகத் தோழர் பிரகாசு ஆகியோர் கட்டுரை எழுதியுள்ளனர். சென்னை முற்போக்கு புத்தகக் காட்சியிலும் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் இடம்பெறுகிறது. முற்போக்கு நூல்கள் வாசிப்பை பரவலாக்கும் இம்முயற்சிக்கு வரவேற்கப்பட வேண்டியது. பகுத்தறிவு நூல்களை வாசிக்கும் பழக்கம் வளரட்டும்.

பெரியார் முழக்கம் இதழ் 06112025

You may also like...