அறிவுத் திருவிழாக்கள் பெருகட்டும்!

கோயில் திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் என நம் நாட்டில் எத்தனையோ திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கோயில்களில் கூட சைவ, வைணவக் கோயில்களில் ஒரு மாதிரியாகவும், கிராமப்புறங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் வேறு விதமாகவும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சைவ, வைணவக் கோயில்களின் திருவிழாக்கள் மாரியம்மனை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. மாரியம்மன் கோயில் திருவிழாக்களோ ஜாதியை மட்டுமே பொருட்டாக வைத்துக்கொண்டு, யார் பங்கேற்கலாம், யார் பங்கேற்கக் கூடாது என எல்லைக்கோடுகள் வரைந்திருக்கும். அதேபோல குடும்ப விழாக்களிலும் திருமணங்கள் முதல் பூப்புனித நீராட்டு என்பன வரை அனைத்திலும் பிற்போக்குத்தனமே நிறைந்திருக்கும். பொதுவாக கோயில் திருவிழாக்களோ, குடும்ப விழாக்களோ எல்லாவற்றிலும் குடியும், தகராறுமே நிரம்பியிருக்கும்.

இளைய தலைமுறை கற்றுக்கொள்ளவோ, அறிவைப் பெருக்கிக்கொள்ளவோ இத்தகைய திருவிழாக்களில் எதுவும் இருப்பதில்லை, சீரழிவதற்கான சாத்தியங்களை மட்டுமே நிரப்பி வைத்துள்ளன. ஆனால் இத்தகைய பிற்போக்குத்தனங்கள், சமூக சீரழிவுகளுக்கு மாற்றான ஒரு புதிய கொண்டாட்டத்தை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி. அக்கட்சியின் பவள விழா நிறைவையொட்டி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவத்தைப் போதித்த வள்ளுவரின் கோட்டத்தில் ‘அறிவுத் திருவிழா’வை நடத்தியிருக்கிறது இளைஞர் அணி.

‘காலத்தின் நிறம் கருப்பு- சிவப்பு’ நூல் வெளியீடு, திராவிட இயக்க அறிஞர்கள், ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களை கருத்துரை வழங்கச் செய்து ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற தலைப்பில் 10 அமர்வுகளைக் கொண்ட இருநாள் கருத்தரங்கம், 9 நாட்கள் முற்போக்கு புத்தகக் காட்சி என இந்த அறிவுத் திருவிழாவை தமிழ்நாட்டிற்கான மாற்றுக் கொண்டாட்டமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் முற்போக்கு புத்தகக் காட்சியில் திராவிட இயக்க நூல்கள் என்ற அளவில் மட்டும் சுருக்கிவிடாமல் அம்பேத்கரிய – மார்க்சிய பதிப்பாளர்கள், விற்பனையாளர்களையும் அழைத்து, எல்லோரையும் உள்ளடக்கிய முற்போக்கு விழாவாக நடத்தப்பட்டிருக்கிறது. உலக அரசியல் எல்லாவற்றையும் தங்கள் தொண்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று சர்வதேச ஏடுகளையும் நூல்களையும் புரட்டிப் பார்த்து, அவற்றை குடிஅரசிலும், விடுதலையிலும், திராவிட நாடு ஏட்டிலும் வழங்கியவர்கள் பெரியாரும், அண்ணாவும். அத்தகைய அறிவுப் பாரம்பரியத்தை இந்த முற்போக்கு புத்தகக் காட்சியின் மூலம் தி.மு.க.வுக்கு மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் உதயநிதி.

இந்த அறிவுத் திருவிழா பொதுவெளியில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் ஒருபக்கம் இருந்தாலும், தி.மு.க.வுக்குள் ஏற்படுத்தப்போகிற பண்பு மாற்றத்தையும் நாம் கவனித்தாக வேண்டும். தேர்தல் அரசியலில் ஈடுபடுகிற எந்தவொரு கட்சிக்கும் அதிகாரத்தை பிடிப்பதே அவர்களின் இலக்கு. எனினும் தி.மு.க. இந்த அறிவுத் திருவிழாவை நடத்தியதன் மூலம், தாங்கள் ஒரு சரசாரி அரசியல் கட்சியல்ல, அதைத்தாண்டிய சமூக சீர்திருத்த இலக்கு தங்களுக்கு இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியிருக்கிறது. அதேபோல, தி.மு.க.வில் இருப்போர் எல்லோரும் திராவிட இயக்கத்தின் இத்தகைய அறிவுப் பின்னணியை உள்வாங்கி, ஆகச்சிறந்த கொள்கைவாதிகளாகத் திகழ்வோர்தானா என்றால் அதுவும் நிச்சயம் இல்லை. பலமான கொள்கைப் பின்னணி கொண்டவர்கள், அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும் என்ற சராசரி அரசியல் எண்ணம் கொண்டவர்கள் என கலவையாகவே உள்ளனர். அ.தி.மு.க.-வில் இருந்து தி.மு.க.வை நோக்கி வந்தவர்களுக்கும் அத்தகைய பலமான கொள்கைப் பிடிப்பு இல்லை. கடந்த 30 ஆண்டுகால தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் தி.மு.க. இப்படித்தான் மருவியிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களில் எம்.ஜி.ஆர். காலமும், ஜெயலலிதா காலமும் எண்ணிலடங்கா ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டன. இந்த நிலை இப்படியே நீடிக்காமல், அவற்றைச் சரிசெய்து மீண்டும் இளைய தலைமுறை கொள்கைப் பாய்ச்சலோடு, திராவிட அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்ற ஆழமான இலட்சியப் பார்வை உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அவருடைய இத்தகைய கொள்கை சார்ந்த தொடர் முன்னெடுப்புகளைப் பார்க்கிறோம். தி.மு.க.வை நோக்கி வருகிற இளைஞர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைஞர்களையும் இந்த முற்போக்கு கருத்தியலை நோக்கி ஈர்க்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. இந்தித் திணிப்பு, கல்வி உரிமை மறுப்பு என ஆரிய அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரு நூற்றாண்டுக்கு முன்பே மாணவர் படையைத் திரட்டி அரசியல்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். ஆனால் இன்றைக்கு அரசியலுக்கு அர்த்தம் புரியாத ஒரு தலைமுறை நம் கண் முன்னே உருவாகியிருக்கிறது. அவர்களுக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள், கோட்பாடுகளை புரிய வைப்பது நமது கடமை. அந்தப் பணிக்கு முகவரி தரும் முயற்சியாக இந்த அறிவுத் திருவிழா நிச்சயம் அமையும். இதை இனி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்போவதாகவும் உதயநிதி அறிவித்திருக்கிறார். இத்தகைய புதுமையான மாற்றுக்கொண்டாட்டங்கள், பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும் முயற்சிகள் ஏராளம் நடைபெற வேண்டும்.

உதயநிதிக்கும் தி.மு.க. இளைஞர் அணிக்கும் நமது பாராட்டுகள்…
பெரியார் முழக்கம் இதழ் 13112025

You may also like...