வாக்குத் திருட்டு அல்ல ஆட்சித் திருட்டு ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் என்பது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு நிறுவனம். இந்நிறுவனம் பக்கசார்பின்றி பொதுவானதாக நடந்து கொள்வதற்காகவே அதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீதித்துறை, புலனாய்வுத் துறை, தணிக்கைத் துறை என ஒவ்வொரு அரசியலமைப்பு நிறுவனங்களும் தவறாக கையாளப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு நிலவுகிறது. இதில் தேர்தல் ஆணையமும் விதிவிலக்கல்ல.

தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜகாவின் ஏஜென்டாகவே மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக தாக்கி வருகிறார். பாஜகவை வெற்றி பெறச் செய்வதற்காக அக்கட்சியுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குத் திருட்டு நடத்தி வருவதாக குற்றம் சாட்டுகிறார். இதற்கெல்லாம் ஆதாரம் என்ன என தேர்தல் ஆணையம் கேட்டதற்கு, கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார்.

5 வழிகளில் வாக்குத் திருட்டு நடப்பதாக ராகுல் காந்தி விளக்கினார்.

 போலி வாக்காளர்கள்

 போலி மற்றும் இல்லாத முகவரிகள்

 ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள்

 செல்லாத புகைப்படங்கள்

 படிவத்தின் 6-இன் தவறான பயன்பாடு

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வாக்காளர்களுக்கு எந்த விளக்கத்தையும் தராத தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு புகாரளிக்க தயாரா? என விவாதம் செய்தது.

இந்நிலையில், பாஜகவும் தேர்தல் ஆணையமும் வாக்கு திருட்டில் மட்டுமல்ல ஆட்சித் திருட்டிலேயே ஈடுபட்டிருக்கிறது என ராகுல் காந்தி அடுத்ததாக ஹைட்ரஜன் குண்டை வீசி உள்ளார். அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகளை ‘எச் பைல்ஸ்’ என்ற தலைப்பில் விரிவான ஆதாரங்களுடன் விளக்கினார்.

கடந்த ஆண்டு நடந்த அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும் என தேர்தலுக்கு முன்பாக வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாஜக ஆட்சியை பிடித்தது. அங்கு நடந்தது நியாயமான தேர்தல் அல்ல, ஆபரேஷன் ஆட்சி திருட்டு என கூறியிருக்கிறார் ராகுல் காந்தி. காங்கிரசின் மகத்தான வெற்றியை தோல்வியாக மாற்ற மிகப்பெரிய சதித்திட்டம் நடந்திருப்பதாக மீண்டும் ஒருமுறை பல ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த ஆதாரங்கள் அனைத்துமே தேர்தல் ஆணையம் தயாரித்து வெளியிட்ட வாக்காளர் பட்டியல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியானா தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதில், வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ள 8 தொகுதிகளில் மொத்த வாக்கு எண்ணிக்கை 22,779. அதாவது, 22,779 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது என்பது தான் ராகுல் காந்தியின் மைய குற்றச்சாட்டு. இதில், பிரேசில் மாடல் அழகி ஒருவரின் புகைப்படத்துடன் ராய் சட்டப்பேரவை தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் 22 வாக்குகள் இருப்பதாகவும், ஒரே பெண்ணின் புகைப்படம், ஒரே தொகுதியில் 100 ஓட்டுகள் இருப்பதையும் ராகுல் காந்தி சுட்டிக் காட்டி உள்ளார்.

சம்மந்தப்பட்ட பிரேசில் பெண் இந்தியாவுக்கு வரவில்லை என்றும், கள்ள ஓட்டு போடவில்லை என்றும் விளக்கம் அளித்தாலும் வாக்காளர் பட்டியலில் ஒரே புகைப்படத்தில் பலரது வாக்குகள் பதிவாகி இருப்பது பொய் இல்லையே? ஒரே பெண்ணின் பெயரில் 100, 200 ஓட்டுகள் இருப்பதும் பொய் இல்லையே? இந்த நிர்வாக தவறுகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை. வாக்காளர் படிவத்தில் முகம் சரியாக தெரியாத அளவுக்கு மறைக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படம், பல வாக்குச் சாவடிகளில் துர்கா, சங்கீதா போன்ற பெயர்களில் இடம்பெற்றுள்ளார். இதே போல ஒரே ஆணின் பிளர் செய்யப்பட்ட புகைப்படத்துடன் பல வாக்குகள் உள்ளன. அப்படி இருக்கையில், யார் வேண்டுமானாலும் நான் தான் துர்கா எனக் கூறி வாக்களித்து விட்டு செல்ல முடியும். இதுபோன்று, 1,24,177 வாக்காளர்கள் பல வாக்குச் சாவடிகளில் அரியானாவில் உள்ளதை ராகுல் ஆதாரத்துடன் காட்டியும் தேர்தல் ஆணையம் எந்த பதிலும் சொல்லவில்லை

வீடற்ற மக்களுக்கு அவர்களின் வாக்காளர் பட்டியலில் வீட்டு எண் பூஜ்ஜியம் என குறிப்பிடுவதாக சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்திருந்தார்.

அதை குறிப்பிட்ட ராகுல் இந்த தகவலும் பொய்யானது எனக் கூறினார். அரியானாவில் பல வாக்காளர்கள் வீட்டு எண் பூஜ்ஜியம் என குறிப்பிட்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் வீடற்றவர்கள் இல்லை எனக்கூறிய ராகுல் காந்தி, சம்மந்தப்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் வீட்டின் புகைப்படத்தையும் வெளியிட்டார். இது, போலி வாக்காளர்களின் முகவரியை கண்டறிவதை சிக்கலாக்கும் சதி என அவர் குற்றம்சாட்டினார். இதுபோல 93 ஆயிரம் போலி முகவரியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் குறிப்பிட்டார். உத்திரப் பிரதேச பாஜக அமைச்சர் லட்சுமி நாராயணுடன் இருக்கும் பாஜக நிர்வாகி தால்சந்த் மற்றும் அவரது மகனின் பெயரும் புகைப்படமும் உத்திரப் பிரதேச வாக்காளர் பட்டியலிலும் இருக்கிறது. அரியானா வாக்காளர் பட்டியலிலும் உள்ளது. இதுபோன்று உ.பி மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அரியானா பட்டியலிலும் இருப்பதாக ராகுல் கூறி உள்ளார். பல்வால் ஜில்லா பரிஷத் துணைத் தலைவராக உள்ள பாஜக் தலைவர் எண் 150 வீட்டில் வசிக்கிறார். அந்த முகவரியில் மட்டும் 66 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்குகள் உள்ளன என்றும் ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.

இதற்காகத்தான் நாங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்கிறோம் என்கிறது தேர்தல் ஆணையம். சரி, வாக்கை பதிவு செய்து ஓட்டு போட்டதாக பாஜக எம்.பி விளக்கம் அளித்துள்ளார். மற்றவர்கள் தரப்பில் எந்த விளக்கமும் இல்லை.

இவர்களைப் போல் எத்தனை ஆயிரம் பேர் இரு மாநில தேர்தல்களில் ஓட்டளித்திருப்பார்கள். ஓட்டளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டளிக்கப் போகிறார்கள்? பீகாரில் எஸ்.ஐ.ஆர் முடிக்கப்பட்டு விட்டது. அதன் உண்மையான முகத்தை பாஜக தலைவர்கள் 3 பேர் இரண்டு இடங்களில் வாக்களித்து வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்.

ஒரே நபருக்கு 2 இடங்களில் வாக்குகள் இருப்பதை அழிக்கும் தொழில்நுட்பம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஆனால் அதை பயன்படுத்தி ஏன் டூப்ளிகேட் வாக்குகளை அளிக்கவில்லை? ஏனென்றால் அவ்வாறு செய்தால் தேர்தல் நியாயமாக நடக்கும்.

அந்த நியாயமான தேர்தலை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. அதனால் ஆளும் கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் 2 தேர்தல் ஆணையர்களும் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர். பிரதமர் மோடியின் கூட்டாளிகள் அவர்கள் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார்.

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இரட்டை வாக்குப்பதிவுகளை நீக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பீகார் எஸ்ஐஆரிலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது நடந்து வரும் 12 மாநிலங்களில் எஸ்ஐஆரின் போதும் இரு வேறு மாநிலங்களில் ஒரே நபருக்கான ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை நீக்குவார்களா என்பதும் சந்தேகமே. எனவே, தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நற்சான்றிதழ்கள் தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.

இது தேவையற்றது. ஆபத்தானதும் கூட. இந்தியாவில் தேர்தல்களின் நேர்மை கறைபடாமல் இருப்பதை நிரூபிப்பது, குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். அந்த பொறுப்பை தேர்தல் ஆணையம் தட்டிக் கழிப்பது தேர்தல் முறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சரிவடையச் செய்யும். இது பேரழிவிற்கு வழிவகுக்கும்.
(நன்றி: தினகரன்)
பெரியார் முழக்கம் இதழ் 13112025

You may also like...