உருவக் கேலிக்கு உடனடி பதில் தந்த நடிகை!

‘அதர்ஸ்’ திரைப்படம் குறித்து, நவம்பர் 6-ஆம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அப்போது இயக்குநரிடம் யூடியூபர் ஒருவர் கதாநாயகியின் எடை எவ்வளவு என்று வக்கிர எண்ணத்தோடு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதற்கு முன்பும் இத்திரைப்படம் குறித்து, நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் நாயகனிடமும் கதாநாயகியின் எடை எவ்வளவு என்ற அதே கேள்வியை எழுப்பியிருந்தார். மேலும் தன்னுடைய கேள்வியில் என்ன தவறு என்ற தொனியிலும் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டு இருந்தார்.

அந்த யூடியூபருக்கு பதிலளித்த கதாநாயகி கௌரி கிஷன், “இந்தக் கேள்விக்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எனது கதாபாத்திரத்தைப் பற்றியோ, அதற்காக நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றியோ ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. எனது எடை என்னவென்று தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இதே கேள்வியை ஒரு கதாநாயகனிடம் கேட்பீர்களா?” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

இந்தக் கேள்வி சாதாரணமாகக் கேட்கப்பட்டது என்ற தொனியில் மற்றொருவர் இதை நியாயப்படுத்த, “எனக்கு அதில் எந்த நகைச்சுவையும் தெரியவில்லை, உருவ கேலியை இயல்பான செயலாக மாற்றாதீர்கள்” என்றும் கண்டித்தார். வக்கிரமான கேள்வியை மிக இயல்பாக எழுப்பியதோடு, அதை நியாயப்படுத்தவும் செய்த அந்த யூடியூபருக்கு கண்டனங்களும் குவிந்துள்ளன.

“பெண் திரைக்கலைஞரின் உடல் எடையைக் கேலிக்குள்ளாக்கும் நோக்கத்துடன் கேள்வி கேட்பது அருவருக்கத்தக்கது, அநாகரீகமானது. இதுபோன்று அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழியில் செயல்படுபவர்களை சக பத்திரிகையாளர்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும்” என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டித்துள்ளது. திரைத்துறை பிரபலங்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் அந்த யூடியூபரின் ஆணாதிக்க மனநிலையை கேள்வி எழுப்பியுள்ளதுடன், கௌரி கிஷனின் துணிச்சலைப் பாராட்டியுள்ளனர். உருவக் கேலிகளைக் கண்டு அஞ்சி உடைந்து முடங்கும் காலம் அல்ல இது என்பதை, அதைச் செய்வோர் உணர வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 13112025

You may also like...