நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா? சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாநிலம் தழுவிய அளவிலான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழகத்தின் சார்பில், சுவர் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன், சென்னிமலை செல்வராசு ஆகியோர் சுவர் விளம்பரங்கள் தீட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராவதற்கான திட்டமிடல் பணிகளில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், தனியார் வாகனங்களில் தோழர்களை திரட்டி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.
ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் ஏன் என்ற விவாதமும் எழத் தொடங்கியிருக்கிறது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. இனி இந்த ஆர்ப்பாட்டம் தேவைதானா என்ற உரையாடலும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்கக்கோரி தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்திற்காக மட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை என்பதையும், ஏன் இந்த ஆர்ப்பாட்டம் தற்போது அவசியமாகிறது என்பதை விளக்க கழகம் கடமைப்பட்டுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஜாதியப் படிநிலை இப்போது நிச்சயம் இல்லை. அக்ரகார அக்கிரமங்கள் உடைக்கப் பட்டிருக்கின்றன. கல்வி- வேலை வாய்ப்புகளை முழுவதுமாக பார்ப்பனர்கள் மட்டுமே ஆக்கிரமித்து வைத்திருந்த நிலைமை திராவிட இயக்கத்தின் சமூகப் பரப்புரைகள்- சட்ட திட்டங்களினால் தகர்க்கப்பட்டு, இன்று எல்லா சமூகத்தினரும் கல்வி கற்கும் உரிமை கிடைக்கப்பெற்றுள்ளது. திராவிட இயக்கத்தின் வழிவந்த அரசியல் கட்சிகளால் வேலைவாய்ப்பும் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. உயர் கல்வியில் தமிழ்நாடு இந்தியாவில் வேறெந்த மாநிலங்களும் தொட முடியாத உச்சம் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் ஆராய்ச்சிப் பணிகள் வரை புதிய புதிய வேலைவாய்ப்புகளும் சாத்தியமாகி வருகின்றன.
கல்வியும் அதனூடாக கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்புகளும் சமூகத்தின் அனைத்துப் பிரிவையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றன. பொதுப்புழக்கத்தை, பொது உரிமையை சாத்தியப்படுத்தியுள்ளன. மற்றொருபக்கம் கிராமங்கள் கரைந்து நகரங்கள் பெருகியுள்ளன. தமிழ்நாட்டின் சரிபாதிக்கும் அதிகமானோர் நகரங்களில் வாழும் சூழலும் உருவாகியுள்ளது. இந்த வளர்ச்சி, மாற்றங்கள் அனைத்தும் ஜாதியத்தை கரைந்துபோகச் செய்து, மானுட சமத்துவத்தை அடையும் இலக்கில் பாய்ச்சலாக மாறியிருக்க வேண்டும். ஆனால் ஜாதியத்தின் பிடி தளர்ந்து விடாமல் இருக்கச்செய்யும் முயற்சிகளும் ஜாதியை நவீனப்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஜாதிகளுக்குள் ஏற்பட்டிருக்க வேண்டிய சமத்துவத்தை அடைய விடாமல் அம்முயற்சிகள் தடுத்துக்கொண்டே இருக்கின்றன. பள்ளிப்பருவத்தில் இருந்தே அத்தகைய முயற்சிகள் மூர்க்கத்தனமான நடந்து வருகின்றன. கல்வி நிலையங் களுக்குள் ஜாதியை அடையாளப்படுத்தும் கயிறுகளை மாணவர்களை அணியச் செய்கின்றனர். இடைநிலை ஜாதியைச் சேர்ந்த மாணவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தால் கூட, அவர்களை ஒன்றாக கலக்க விடாமல் செய்கின்ற நாசகர சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் ஜாதி சங்கங்களால் விதைக்கப்படுகின்றன. நாங்குநேரியில் 12-ஆம் வகுப்பு மாணவன் சின்னத்துரை சக மாணவர்களால் தாக்கப்பட்ட கோரச்சம்பவம் இதை நமக்கு வெட்ட வெளிச்சமாக்கியது.
சமூக ஊடகங்கள், வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் ஜாதிக்கு ஒரு குழுக்களை வைத்துக்கொண்டு, ஆண்ட பரம்பரை என புகழ் பேசுகிற புதிய கலாச்சாரமும் உருவெடுத்திருக்கிறது. ஜாதிப் பெயரை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே விட்டொழித்துவிட்டு தமிழ்நாட்டில், சமூக ஊடகங்களில் பெயருக்குப் பின்னால் ஜாதியை அடையாளமாக சூட்டிக்கொள்கிற அவலம் தொடங்கி யிருக்கிறது. ஒருகாலத்தில் கல்வி- இடஒதுக்கீடு உரிமைகளை தங்கள் சமூகமும் பெற வேண்டுமென்று உழைத்த ஜாதிச் சங்கங்கள் புற்றீசல் போல, ஊருக்கு ஒரு சங்கம் முளைத்து சுயஜாதி வெறியை மட்டுமே பரப்பும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. படித்துவிட்டு வேலைகளுக்காகவும், வாழ்வியல் தேவைகளுக்காகவும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு குடிபெயரும் இளைய தலைமுறை, தங்கள் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக் கொண்டால் அதற்கு பெற்றோர் சம்மதித்தாலும், ஜாதிச் சங்கங்கள் தலையிட்டு அவற்றைத் தடுக்கும் போக்குகளும் பெருகி வருகின்றன. அவை ஆணவக்கொலையில் முடிகின்ற அச்சப்போக்கையும் ஏற்படுத்தி வருகின்றன.
நெல்லையில் படித்த, நல்ல ஊதியம் பெற்றுவந்தவராக இருந்தாலும் கூட இளைஞர் கவின் ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒற்றை காரணத்திற்காக, அவர் காதலித்த இளம்பெண்ணின் குடும்பத்தினரால் (தந்தையும் தாயும் காவல்துறையில் பணியில் இருப்பவர்கள்) கொல்லப்பட்டார் என்பதைப் பார்த்தோம். இன்னொருபக்கம், ‘வள்ளி கும்மி’ என்ற பெயரில் இளம்பெண்களைக் கூட்டி வைத்து, ‘காதலிக்க மாட்டோம், அப்படியே காதலித்தாலும் சொந்த ஜாதியில்தான் காதலிப்போம்’ என பொதுவெளியில் சத்தியம் வாங்கி அவர்களைக் கூனிக்குறுகச் செய்யும் காணொலிகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன ஜாதிச்சங்கங்கள். குருபூஜை என்ற பெயரில் மறைந்த ஜாதிச்சங்க தலைவர்களின் பிறந்தநாள், இறந்தநாள்களில் இளைஞர்களை ஆயுதங்களோடு, சட்டம்- ஒழுங்கைக் கேலிக்கூத்தாக்கி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஊர்வலம் செல்வதும், ஆபத்தான வகையில் வாகனங்களை இயக்குவதும் ஆண்டுக்கு ஆண்டு பெருகிக் கொண்டிருக்கிறது. சிவில் சமூக சிந்தனையில் இருந்து தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கின்றன இச்செயல்கள்.
வன்னியர் மேட்ரிமோனி, கவுண்டர் மேட்ரிமோனி, நாடார் மேட்ரிமோனி, செட்டியார் மேட்ரிமோனி என சுய ஜாதி வரன்கள் பார்த்துக் கொடுக்கும் திருமண நிலையங்கள் உருவாகி, தொலைக்காட்சிகளில், யூடியூப் சேனல்களில், வானொலிகளில் விளம்பரங்களை அள்ளிக்கொட்டுகின்றன. எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், சமத்துவ சிந்தனை இல்லாமல் ஊடகங்களும் இவற்றை வெளியிடுகின்றன. ஒன்றிய- மாநில அரசுகளும் இவற்றை கட்டுப்படுத்த சிறு முயற்சியையும் எடுப்பதில்லை.
பேருந்தில் அமர்ந்து பயணிக்க அனுமதி மறுத்த காலமெல்லாம் மாறிவிட்டது என்று கருதினால், தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்குள் பேருந்தையே இயக்காத நவீன ஜாதிவெறி கோவை மாவட்டம் கெம்பனூரில் முளைத்திருக்கிறது. கெம்பனுார்–காந்திபுரம் செல்லும் 21-ஆம் எண் நகரப்பேருந்து, அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் உள்ள தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் அண்ணா நகருக்குச் செல்லாமல் கெம்பனூர் வரை மட்டுமே செல்கிறது. மற்ற சில பேருந்துகள் சென்றாலும் இந்த பேருந்து மட்டும், ஊர்த்தெருவில் வசிப்போரின் ஜாதிய மனநிலை காரணமாக கெம்பனூர் வரை மட்டுமே செல்கிறது. தமிழ்நாட்டில் தீண்டாமை நிலவும் கிராமங்கள் குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த ஆண்டு நடத்திய கள ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்ததை அடுத்து, கழகத் தோழர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியருக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையமும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு இரு மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்றுள்ளது. மாவட்டம் நிர்வாகமோ அங்கு ஜாதியச் சிக்கல் இல்லை என்று இவ்விவகாரத்தை மூடி மறைக்கவே முயல்கிறது. தீர்வுக்கு இதுவரை முன்வரவில்லை.
சைவ- வைணவக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் இன்னும் முழுமையாக அர்ச்சகர்கள் ஆகவில்லை என்றாலும்கூட, வழிபடும் உரிமையாவது உள்ளது. ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும்கூட, கிராமப்புற கோயில்களில் தாழ்த்தப்பட்டோரை தடுத்தே வைத்திருக்கிற தீண்டாமைக் கொடுமைகள் இன்னும் அகலவில்லை. கிராமப்புற கோயில்களுக்குள்ளும் தங்களை அனுமதிக்கக் கோரி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தங்கள் சுயமரியாதைக்கான போராட்டங்களை நடத்தும் செய்திகளும் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. அரசாங்கம் அனுமதித்தாலும் ஜாதிச்சங்கங்களும், இந்துத்துவா கும்பல்களும் மக்களைத் தூண்டிவிட்டு பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்திவிட முயல்கின்றன. தங்கள் ஜாதியை தக்கவைத்துக்கொள்ள, இத்தகைய சமத்துவப் போக்குகள் ஏற்படாமல் தடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுகின்றன.
ஒட்டுமொத்தத்தில் நவீன உலகிலும் ஜாதியச் சிந்தனையை விட்டு மக்கள் வெளியேறிவிடாமல், ஜாதியப் படுநிலைக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்க வேண்டிய முயற்சிகளை ஜாதிச் சங்கங்களும் இந்துத்துவ கும்பல்களும் துணிச்சலோடு செய்து கொண்டிருக்கின்றன. இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, ஜாதி வெறி- ஆணவம் தலைதூக்க விடாமல் அதன் வாலை ஒட்ட நறுக்க வேண்டிய பொறுப்பு பெரியாரிய இயக்கங்களுக்கு உள்ளது. தேவைப்படும் இடங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமை அரசுக்கும் உள்ளது. மக்களும் மனதளவில் ஜாதிய சிந்தனையில் இருந்து விடுபட்டு வெளியே வர வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றை விளக்குவதற்காகவே ‘மனிதம் நமது அடையாளம்- ஜாதி நமக்கு அவமானம்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தமிழ்நாடெங்கும் நூற்றுக்கணக்கான தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதன் அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய அளவில் இந்த புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக, கோவையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது திராவிடர் விடுதலைக் கழகம். நவீன உலகிலும் தலைதூக்கும் ஜாதி ஆணவத்தை ஒட்ட நறுக்கி, சமத்துவத்தை விதைக்க அணி திரள்வோம் கோவையில்… வாருங்கள் தோழர்களே…
பெரியார் முழக்கம் இதழ் 27112025
