அறிவுத் திருவிழாவில் கழகத் தலைவர் பேச்சு- பெரியார் சொன்னார்; தி.மு.க. செய்தது!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி, அதன் இளைஞர் அணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நவம்பர் 8ஆம் தேதி ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். இந்நூலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர் பிரகாசு ஆகியோர் கட்டுரை எழுதியுள்ளனர். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நவம்பர் 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை முற்போக்கு புத்தகக் காட்சியும் நடைபெறுகிறது. இதில் அரங்கு எண் 22-இல் கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகமும் பங்கு பெற்றுள்ளது.

கருத்தரங்கில் மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. அதில் கடைசி அமர்வு பெரியாரிய இயக்கத் தலைவர்களைக் கொண்டு நிறைவுற்றது முத்தாய்ப்பாக அமைந்தது. புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் நடைபெற்ற அந்த அமர்வில், ‘கருஞ்சட்டை கழகமும் கருப்பு சிவப்பு கழகமும்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தி.மு.க.வின் போராட்டக் களங்கள்’ என்ற தலைப்பில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன், ‘திராவிட அடையாளத்தில் தமிழர் அரசியல்’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் சீனி விடுதலை அரசு ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அரசியல் புத்தகங்களின் அணிவகுப்பான முற்போக்கு புத்தகக் காட்சிக்கு சென்று புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார். நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், அமைப்பாளர் தட்சணாமூர்த்தி, திருவல்லிக்கேணி பகுதி தலைவர் கோபிநாத், அமைப்பாளர் சூர்யா, தோழர்கள் சிகாமணி, ஏசுகுமார், இரண்யா, இளைஞரணி தோழர்கள் அஜித், இம்மானுவேல், அம்பத்தூர் சதீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

கழகத் தலைவரின் உரை:

இயக்கங்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். அது இலட்சியங்களை எடுத்து முன்வைக்கும். இலக்குகளை எடுத்துச் சொல்லும். அதை நோக்கி மக்களை இயங்க வைக்க முயற்சித்து பரப்புரை செய்யும், போராடும். ஆனால் கட்சிகள்தான் ஆட்சி அமைத்து அவற்றை நடைமுறைப்படுத்தும். அரசியல் கட்சி என்று வருகிறபோது அதற்கான எல்லைகள் உண்டு. அரசியலைப் பற்றி சொல்லுகிறபோது பிஸ்மார்க் சொன்னதாக சொல்லுவார்கள். அரசியல் இயக்கம் சாத்தியமானவற்றை செய்யலாம்; பெறக்கூடியவற்றை பெறலாம்; தி ஆர்ட் ஆஃப் நெக்ஸ்ட் பெஸ்ட் என்பார்கள். அதுவே வேண்டும், மிகச் சிறந்ததுதான் வேண்டும் என்றில்லை. சிறந்ததற்கு அருகில் இருப்பதைக்கூட நடைமுறைப்படுத்தி அடுத்த வாய்ப்புக்கு நகர்த்தலாம்.. இப்போது இரண்டையும் சேர்த்துதான் பார்க்க வேண்டி இருக்கிறது.

இயக்கங்களுக்கு இருக்கிற கொள்கையை அரசியல் கட்சிகளால் நடைமுறைப்படுத்த முடியுமா? அத்தனையும் அரசியல் நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். ஆனாலும் ஏறத்தாழ அருகில்போய் ஆட்சி நடத்திய கட்சியும், அதற்கான கொள்கைகளை முன்னெடுத்து வைத்த இயக்கமும் இணைந்து இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியவர்களாய் உள்ளோம். அதுவும் அவர்களை அடிப்படைக் கொள்கையான சனாதன ஒழிப்பு, வருணாசிரம ஒழிப்பு என்பதை இலட்சியமாகக் கொண்டு அதற்கான எதிரிகள் அமர்ந்திருக்கிறபோது நாம் பரந்து விரிந்த கூட்டணியாய் நின்று என்று எதிர்க்கிறோம். எதிர்ப்பதற்கு தமிழ்நாடு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு நான் சிலவற்றை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

1962-லேயே பெரியார் கூறினார்!

1949-இல் பெரியாரும் அண்ணாவும் பிரிந்திருந்தார்கள். 1967க்கு பிறகுதான் இணைந்தார்கள். ஆட்சிக்கு வந்த பின்னால்தான் ஆதரித்தாரா? இல்லை. அவர் அதற்கு முன்பே கூறியிருக்கிறார். 1962 ஜனவரி முதல் நாள் பெரியார் ஒரு அறிக்கை எழுதினார். ‘பார்ப்பனத் தோழர்களுக்கு’ என்ற அந்த அறிக்கையின் இறுதியில், ‘தேர்தலுக்கு பிறகு அரசியல் திட்டம் எதுவாக இருந்தாலும் சமூக நலத்திட்டங்கள் பார்ப்பன எதிர்ப்பாகத்தான் இருக்க முடியும்’ என்று எழுதிவிட்டு,. “இனி கண்ணீர்த் துளி கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால் பார்ப்பன எதிர்ப்பை கைத்தடியாக பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்த காரியத்துக்கு என்னை அணுகலாம்; நானும் ஆதரவு அளிக்கலாம். எனக்கு சமுதாயத்துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் எதிரிகள் அல்ல!” என்றார். அப்போது தி.மு.க.வை கண்ணீர் துளிகள் என்றே அழைப்பார் பெரியார்.

திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாவது தேர்தலைக் கூட அப்போது சந்தித்திருக்கவில்லை. சில மாதங்கள் கழித்துதான் தேர்தல் நடந்தது. ஆனால் பெரியார் சொல்லுகிறார், ஒருவேளை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பார்ப்பன எதிர்ப்பு சிந்தனைகளைத்தான் அடித்தளமாக வைத்து இயங்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கும். அதில் நான் இப்போது எதிர்த்துக் கொண்டிருக்கிற அல்லது என்னுடன் இருந்து பிரிந்து சென்றிருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம் என்னை அணுகினால் நான் ஆதரவு கொடுப்பேன். எனக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எதிரி அல்ல! பார்ப்பனர்கள்தான் சமுதாயத்துறையில் என்னுடைய எதிரிகள். எனவே அதற்கு ஆதரவு கொடுப்பேன் என்று 1962 தேர்தலுக்கு முன்னால் பெரியார் சொன்னார், 1967-க்கு பின்னால் இணைந்தார். இயக்கமும் கட்சியும் ஒருமித்த சிந்தனையை அடைந்து 1967-இல் இணைந்தார்கள்.

தீர்மானங்கள் சட்டமாகின!

அடுத்து, பெரியாருடைய லட்சியங்கள் எப்படியெல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதற்கு சிலவற்றைச் சொல்ல வேண்டும். பெரியார் இயற்றிய மாநாட்டுத் தீர்மானங்கள் பின்னாளில் தி.மு.க. ஆட்சியில் சட்டமானதைப் பற்றி அடிக்கடி நாம் சொல்லிக் கொண்டிருப்போம். ஆம் 1929லே முதல் சுயமரியாதை இயக்க மாநாடு நடைபெற்றது. அதை ஒட்டித்தான், சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் செங்கல்பட்டில் ஒரு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தியது.. அதில் பெரியார் உலகம் அமைப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பளமாக கொடுத்த ஒன்றரை கோடி ரூபாய் அன்பளிப்பாக அளித்திருக்கிறார் முதலமைச்சர்.

அந்த செங்கல்பட்டில் 1929-இல் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் தீர்மானத்தைதான் 1989-இல் சட்டமாக்கி பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினார் கலைஞர். செங்கல்பட்டில் மட்டுமல்ல, பெண்களுக்கு சொத்துரிமை வழங்க்கோரி ஒவ்வொரு மாநாட்டிலும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஈரோடு மாநாட்டில் தீர்மானம்; விருதுநகர் மாநாட்டில் தீர்மானம் என தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேறின.

ஆனால் முதல் மாநாட்டு தீர்மானத்துக்கு 60 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டிலும், அதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்துதான் இந்திய அளவிலான அந்த சட்டங்கள் இயற்றப்பட்டன. தமிழ்நாட்டுக்கு 16 ஆண்டுகளுக்கு பின்னால்தான் இந்திய அளவிலான சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தினார்கள். நாம்வழிகாட்டி இருக்கிறோம். இப்போது எல்லா மாநிலங்களிலும் இருமொழி கொள்கைக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது சித்தராமையா கர்நாடக சட்டமன்றத்தில் பேசினார். இந்தியை எதிர்த்துப் பேசினார். “நாம் 50 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம் நமக்கு முன்னாலே 1967லேயே திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை கொண்டு வந்துவிட்டது” என்று அப்போது சொன்னார். இப்போது திரும்பவும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார். மராட்டியமும் சொல்லுகிறது.

பெண்களை வெறும் வைத்தியத் தொழிலுக்கும், உபாத்திமைத் தொழிலுக்கும், (ஆசிரிய தொழிலுக்கும்) மட்டுமே எடுக்கிற நிலையை மாற்றி காவல் துறையிலும் இராணுவத்திலும் பெண்களைச் சேர்க்க வேண்டுமென்று விருதுநகர் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் இயற்றினார் பெரியார். 1973-இல் அதை சட்டமாக்கினார் கலைஞர். தமிழ்நாட்டில் பெண்கள் கொண்ட காவல்துறை படை அமைக்கப்பட்டது.

சட்டப் போரில் வெற்றிகண்ட தி.மு.க.!

அடுத்து, இந்தியா முழுதும் பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீடு என்பது இல்லாமல் இருந்த காலம் இருந்தது. அதற்கான கோரிக்கைகள் பல காலம் வைக்கப்பட்டது புரட்சியாளர் அம்பேத்கர் தன் பதவியை துறந்தபோது கூட பணித்துறவு கடிதத்தில் அவர் சொன்ன செய்திகளில் ஒன்று பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எந்த முயற்சியும் இந்த அரசு செய்யவில்லை என்பதும் ஒரு காரணம். தமிழ்நாட்டிலும், மராட்டியத்திலும் மட்டும் அப்போது பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இருந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியல் தயாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையம் கணக்கெடுத்து ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும், அதன் அடிப்படையில் அந்த மக்களின் மேம்பாட்டுக்கு, முன்னேற்றத்திற்கு திட்டங்கள் தீட்ட வேண்டும் என்று ஒரு பிரிவு அரசியல் சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் அதுதொடர்பாக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்பதையும் தன்னுடைய பணித்துறவு கடிதத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதினார். அவரைத்தான் தாழ்த்தப்பட்டவர் தலைவர் என்பார்கள். அவர் அந்த கடிதம் எழுதவில்லை என்றால், இந்த இந்திய அரசே அதைப் பற்றி யோசித்திருக்காது.

அவசர அவசரமாக கலோல்கர் கமிஷன் அமைத்தனர். வக்பு வாரியத்தில் இந்துக்கள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதைப்போல, பிற்படுத்தப்பட்டோரை பற்றிய ஆணையத்திற்கு தலைவராக ஒரு பார்ப்பனரை நியமித்தார்கள். காகா கலோல்கரை நியமித்தனர். அவர் என்ன அறிக்கை கொடுப்பார்? நமக்கு தெரியும். அது குப்பைத்தொட்டிக்கு போனது. பின்னாலே மண்டல் ஆணையம் வந்தது. 1980-இல் சமர்பிக்கப்பட்ட அதன் அறிக்கையை, 1990 நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்து, சட்டப் போராட்டங்களுக்கு பின்னால் 1993-இல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால், 1947-க்கு முன்னால் சென்னை மாகாணத்தில் மட்டும் தனிச்சட்டம் இருந்தது.

அதற்கு பெயரே, ‘செப்பரேட் ரிசர்வேஷன் ஆர்டர் ஃபார் மெட்ராஸ் நான் பிராமின்ஸ்’. சென்னை மாகாணத்தில் இருப்பதைப் போன்ற இட ஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை இங்கு இயங்குகிற இந்திய அரசின் துறைகளுக்கும் இருந்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.

1935லிருந்து சென்னை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு சட்டங்களை இந்தியா விடுதலை பெற்று ஒன்றரை மாதம் காத்திருந்து, செப்டம்பர் 30-ஆம் நாள் ரத்து செய்தார்கள். உள்துறை ஒரு ஆணையையும், தொடர்வண்டித்துறை ஒரு ஆணையையும் பிறப்பித்தது. நமக்கு கொடுத்திருந்த அத்தனை இடஒதுக்கீடு உரிமைகளும் பறிக்கப்பட்டன. திரும்பவும் பழையபடி நமக்கு எந்த இட ஒதுக்கீடும் இல்லை. தமிழ்நாட்டில் வேறு இட ஒதுக்கீடுகள் இல்லை என்றாகிவிட்டது. ஒன்றிய அரசுப் பணிகளில் அதற்காக மீண்டும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தன.
(தொடரும்)
பெரியார் முழக்கம் இதழ் 13112025

You may also like...