திருப்பூர், திருவண்ணாமலை, நாமக்கல்லில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

திருப்பூர்: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு 11 இடங்களில் “ஜாதி நமக்கு அவமானம் மனிதம் நமது அடையாளம்” தெருமுனைக் கூட்டங்கள் அக்-05 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.ஒரே நாளில் 11 இடங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையை திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் நடத்தினர்.பறை இசை முழக்கங்களோடு தொடங்கி, குழந்தைகள், மற்றும் பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். முகில் இராசு மாவட்டத் தலைவர் முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாக பாரதி நகர் பகுதியில் பெரியார் படிப்பகத்தில் ஜாதி எதிர்ப்பு பரப்புரைக் கூட்டம் தொடங்கியது. வீரபாண்டி பிரிவு, கொளத்துப்பாளையம், கரை தோட்டம் (தென்னம்பாளையம்), மாஸ்கோ நகர், பெரியார் காலனி, அனுப்பர்பாளையம், அம்மா பாளையம், ஆத்துப்பாளையம் 15 வேலம்பாளையம் ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
(கழகப் பொருளாளர்) சு துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர் தமிழ்நாடு அறிவியல் மன்றம்), பரிமளராசன் (சமூகஊடகப் பொறுப்பாளர்), முகில் ராசு (மாவட்டத் தலைவர்), நீதிராசன்( மாவட்டச் செயலாளர்), ராமசாமி (தெற்கு பகுதிச் செயலாளர்), மாதவன் (மாநகரச் செயலாளர்), மாரிமுத்து (மாநகர துணைத் தலைவர்), முத்து (மாநகர அமைப்பாளர்), அய்யப்பன் (வடக்கு ஒன்றிய அமைப்பாளர்) மதன் ஆத்துப்பாளையம், கார்த்திக் 15 வேலம்பாளையம், மதிமுக சரவணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
அம்மாபாளையம் பகுதியில் கழகக் கொடியினை மோகன் ஏற்றினார். ஆத்துப்பாளையம் பகுதியில் பெரியார் பிஞ்சு ஜெஸ்னா பெரியார் குறித்த கருத்துகளை தனது மழலை மொழியில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் எடுத்துரைத்தார். மதிய உணவு தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் வீ. சிவகாமி இல்லத்தில் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. கரை தோட்டம் பகுதியில் தனகோபால் தமிழ்நாடு அறிவியல் மன்றம், மாஸ்கோ நகர் பகுதியில் மாதவன், ஆத்துப்பாளையம் பகுதியில் மதன் குளிர்பானம் மற்றும் தேநீர் வழங்கி சென்ற இடமெல்லாம் வரவேற்பு கொடுத்தனர். நிறைவாக இனியன் நன்றி கூறினார்.
திருவண்ணாமலை: “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்ற பிரச்சாரப் பயணம். அக்-15,16 ஆகிய இரண்டு நாட்கள் 8 இடங்களில் நடைபெற்றது. விழுப்புரம், திருவண்ணாமலை கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.
முதல் நாள்: அக்-15 அன்று புதன் கிழமை கரு. தமிழ்தாசன் தலைமையில் தானிப்பாடி பேருந்தம் நிறுத்தம் அருகிலும், தண்டராம்பட்டு செட்டிபட்டு கூட்டுச்சாலையிலும், குங்கிலியநத்தம் ஆகிய பகுதிகளில் ஜாதி எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தின் நோக்கத்தினை விளக்கி விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன், க.ராமர் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இரண்டாம் நாள்: 16.10.2025 வியாழன் கிழமை போளூர் பேருந்து நிறுத்தம் அருகிலும், கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் மல்லவாடி கூட்டுச்சாலையிலும், திருவண்ணாமலை அறிவொலி பூங்கா அருகிலும் பிரச்சாரம் நடைபெற்றது.தமிழன் பாபு மதிய உணவு வள்ளலார் மடத்திலிருந்து வழங்கினார். இரண்டாம் நாள் பிரச்சார பயணத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் அதிகாரம் ராமலிங்கம் கலந்துகொண்டனர். கழகத் தோழர்கள் மு.நாகராஜ் கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பாளர், சி.சாமிதுரை ரிஷிவந்திய ஒன்றிய அமைப்பாளர், இரா.கார்மேகம் ரிஷிவந்திய ஒன்றியத் தலைவர், மா.குமார் தமிழ்நாடு மாணவர் கழக கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பாளர், கு.பாபா, கி.ஆனந்தன் ச.கு.பெரியார் வெங்கட், சிவப்பிரகாசம், வே.சிவராஜ், பா.விஜயாகுமார், நா.கலைமணி, வை.அகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்: குமாரபாளையத்தில் 28.9.2025 மாலை கழகத்தின் சார்பில் “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை ஏற்க சி.மாதராசி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஜாதி ஒழிப்புக்கான போராட்டங்களையும் சட்டங்களையும் பற்றி பெரியார் நடத்திய பல போராட்டங்களையும் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கும் எடுத்து வைக்கிற அளவிலே கேப்டன் அண்ணாதுரை, (தலைமைக் குழு உறுப்பினர்) உரை நிகழ்த்தினார். கோபி வேலுச்சாமி நகைச்சுவையாக பல்வேறு செய்திகளை பகுத்தறிவு சிந்தனைக்கு எடுத்து வைத்து சிறப்புரையாற்றினார்.
சிற்பி ராஜன் மந்திரம் அல்ல தந்திரமே அறிவியல் நிகழ்ச்சி நடந்தது. வசூல் பணியில் ஈடுபட்ட கழகத் தோழர்கள் நகரச்செயலாளர் ஸ்ரீ.வடிவேலு, மோகன், மாதேஸ்வரன், வளையல் செல்வம் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தேவி மாதேஷ் அவர்களின் மகள் ரம்யா-பாரதி ராஜா இணையரின் குழந்தைக்கு புகழினி என்று சிற்பி ராசன் பெயர் சூட்டினார். செல்வராஜ் நன்றி கூறினார். அனைவருக்கும் நகரத் தலைவர் மீ.த தண்டபாணி இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்பாக கரூரில் 39 பேர் நடிகர் விஜய் கூட்டத்துக்கு சென்று நெரிசல் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கழகத் தோழர்களும் அவரவர் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொண்டார்கள். மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்டச் செயலாளர் சரவணன், பள்ளிபாளையம், திருச்செங்கோடு தோழர்கள், காடச்சநல்லூர் செல்வகுமார் உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 23102025

You may also like...