ஜீவாவை சுற்றி எழுப்பப்பட்ட மாய பிம்பம், ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (3) – கொளத்தூர் மணி

காரைக்குடி அருகே உள்ள சிராவயலில் காந்தி ஆசிரமத்தை ஜீவா தோற்றுவித்தார் என்ற செய்தி மிக அழுத்தமாக தமிழ்நாட்டில் பதிய வைக்கப்பட்டுள்ளது.

02.02.2019 விகடன் இணையதளத்தில் “ஜீவாவின் 22 நூல்களுக்கு மேல் தொகுத்த கே. ஜீவபாரதி சிராவயலில் காந்தி – ஜீவானந்தம் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடம் கோரிக்கை வைத்ததாக” செய்தி காணப்படுகிறது. (முழு உள்ளடக்கங்களைப் பற்றி பின்னர் பார்ப்போம்) அந்த கோரிக்கை இன்றைய அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜீவா நினைவுக் கட்டடம் ஏறத்தாழ கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அங்கு ஜீவாவின் சிலை ஒன்றும் வைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் உள்ளன.

ஜீவா – சிராவயல் – காந்தி ஆசிரமம் என்ற செய்தியின் உண்மைத் தன்மையைக் குறித்து அறிவது தற்போது தேவையாக்கப்பட்டு விட்டது.

இந்தக் கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிடப்பட்ட இஸ்மத் பாஷாவின் ‘ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு’ (1946) கே.பாலதண்டாயுதம் எழுதிய ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ (1966) ஆகிய நூல்களில் சிராவயல் ஆசிரமத்தை ஜீவா தோற்றுவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த நூல் தோழர் பொன்னீலன் எழுதிய ‘ஜீவா என்றொரு மானுடன்’ என்ற நூல் 1982ஆம் ஆண்டு, ஆகஸ்ட் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டு, அதன் நான்காம் பதிப்பு 2013 டிசம்பரில் அதே நிறுவனத்தால் மீள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

“நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவியில் வ.வே.சு. அய்யர் ‘பரத்வாஜர் ஆசிரமம்’ என்ற ஆசிரமத்தை (தமிழ்க் குருகுல வித்யாலயம்) நடத்தி வந்தார். காந்திய நெறிப்படி நடந்த இந்த ஆசிரமத்தில் பிராமண மாணவர்கள் தனிப்பகுதியில் தனியாக உண்ணுவதைக் கண்ட ஜீவா மனம் வெகுண்டார். ஆசிரமத்தின் ஜாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக ஈ.வெ.ரா, வரதராஜுலு நாயுடு போன்ற காங்கிரஸ்காரர்கள் ஏற்கெனவே போராட்டத்தைத் தொடங்கி இருந்தார்கள். அவருடன் சேர்ந்து ஜீவா கிளர்ச்சி செய்தார்.

பிரச்சனை பெரியதாகி இறுதியில் ஆசிரமமே செயலிழந்தது; ஜீவா காரைக்குடிக்குச் சென்றார்; அங்கு சிராவயலைச் சார்ந்த காசி விஸ்வநாதன் செட்டியாரின் தொடர்பு ஜீவாவுக்கு எட்டியது. அவரது துணையுடனும் பொருள் உதவியுடனும் ஜீவா சிராவயலில் காந்தி ஆசிரமத்தைத் தோற்றுவித்தார். அந்த ஆசிரமத்தின் தலைவராக கும்பலிங்கம் பிள்ளையும் பொதுச் செயலாளராக ஜீவாவும் பொறுப்பேற்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட தாழ்த்தப்பட்டவரான மண்ணடி மாணிக்கம் ஜீவாவினால் வாலறுக்கப்பட்ட டி.என்.கோபால் போன்றோர் அங்கு ஆசிரியராக இருந்தனர். ஆரம்பத்தில் காங்கிரஸ்காரராக இருந்து பின்னாளில் பிரபல கம்யூனிஸ்ட் தலைவராக ஆன சிபி இளங்கோவும் அங்கே இருந்தார். அங்குதான் ஜீவா தனது ‘சொரிமுத்து’ என்ற பெயரைத் துறந்து ஜீவானந்தம் ஆனார்.’ போன்ற செய்திகள் நூலின் 20, 21ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன.

வரலாறுகளில் குழப்பம்
இதே தோழர் பொன்னீலன் 2008ஆம் ஆண்டு எழுதிய “பொதுவுடைமையின் முகவரி” ஜீவா என்ற நூலின் செய்திகளைப் பின்னர் பார்ப்போம். அடுத்த நூல் சாகித்திய அகாடமியால் 2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதும் தோழர் டி.செல்வராஜ் அவர்களால் எழுதப்பட்டதுமான “ஜீவானந்தம்” எனும் வாழ்க்கை வரலாற்று நூல்.

அதில் “பார்ப்பன அல்லாத மாணவர்களுக்கு சேரன்மாதேவி குருகுலத்தில் தனித்தனியே உணவளிக்கும் முறைக்கு எதிராக நடந்து கொண்டிருந்த சிக்கலைத் தீர்க்க காந்தி சென்னை வந்தார்; எஸ் சீனிவாசய்யங்கார் வீட்டில் சமரச பேச்சுவார்த்தை மூன்று நாட்கள் நடைபெற்றது. காந்திஜி ஒரு சமரச யோசனையை முன் வைத்தார். அதாவது அப்போது உள்ள தேசியப் பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்குத் தனித்தனியே உணவளிக்கும் முறை நீடிக்க வேண்டும்; புதிதாக சேர்க்கும் மாணவர்களுக்கு ஒரே பந்தியில் உணவளிக்கலாம் என்பதாகும். அந்த ஆலோசனை பெரியாரை ஆத்திரமடையச் செய்தது. ஜீவா அந்த அக்கிரமத்தை எதிர்த்து பரத்வாஜர் ஆசிரமத்திலிருந்து வெளியேறினார்” என்று பக்கம் 26இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நூலின் 27ஆம் பக்கத்தில் “பரத்வாஜர் ஆசிரமத்திலிருந்து வெளியேறி அங்கிருந்து காரைக்குடி சென்று சிராவயல் கிராமத்தைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் செட்டியார் உதவியுடன் சிராவயல் ஆசிரமத்தை தொடங்கினார். அந்த இந்த ஆசிரமத்தின் தலைவர் கும்புலிங்கம் பிள்ளை; பொதுச் செயலாளர் ஜீவா” என்று கூறுகிறது. 28ஆம் பக்கத்தில் “ஆசிரமத்தின் ஆசிரியர்கள் இளமைக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீவாவின் நண்பர்களாக இருந்தவர்களே. பூதப்பாண்டி மண்ணடி மாணிக்கம், டி.என். கோபாலன், சி.பி. இளங்கோ ஆகியோர் ஆவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நூல் தோழர் பசுமை குமார் என்பவரால் எழுதப்பட்டு 2019ஆம் ஆண்டில் ராயப்பேட்டை நக்கீரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “ஜீவா 100” என்ற நூலாகும்.

அந்நூலின் 19 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள்:

“பரத்வாஜா ஆசிரமத்தில் அப்போது இளம் ஜீவா ஆசிரியர் வேலை பார்த்து வந்தார். அதிலிருந்து விலகி வேறு ஆசிரமம் அமைக்க யோசித்தார். ஜீவா காரைக்குடிக்கு அருகில் சிராவயல் என்ற ஊரில் காசி விஸ்வநாதன் செட்டியார் என்பவர் பொதுநல காரியங்களில் ஈடுபடுபவர். அவரைத் தொடர்பு கொள்ளும்படி சேரன்மாதேவியில் இருந்தவர்கள் ஜீவாவிடம் கூறினர். ஜீவாவும் தொடர்பு கொண்டார். இருவருக்கும் நட்பு வளர்ந்தது சொரிமுத்தாகவும், மூக்காண்டி ஆகவும் இருந்த வந்த ஜீவாவுக்கு காசி விஸ்வநாதன் செட்டியார் உதவி செய்யும் முன் வந்தார்

ஜீவா புதியதொரு சமத்துவ ஆசிரமம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். நண்பர்களுடன் காரைக்குடி அடுத்த சிராவயல் வந்து சேர்ந்தார். அங்கே அவர் உருவாக்கியதுதான் காந்தி ஆசிரமம். அதன் நிர்வாகக் குழுத் தலைவர் கும்பலிங்கம்; பொதுச்செயலாளர் ஜீவா.

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த ‘ஜீவா என்றொரு மானுடன்’ என்ற நூலினை 1982ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட அதே தோழர் பொன்னீலன் குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் ‘ஒளி வெள்ளம்’ பதிப்பகத்தின் வழியாக 2008 மே மாதத்தில் “பொதுவுடைமையின் முகவரி ஜீவா” என்ற நூலினை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் “ஊரில் அவர் இருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது; நாஞ்சில் நாட்டிடம் விடை பெற்று, அன்றைய தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக இடம் பெயர்கிறார். 1926இல் அவர் முதலில் சேர்ந்தது சேரன்மாதேவி பரத்வாஜர் ஆசிரமத்தில். அதன் தலைவர் வ.வே.சு. அய்யர் உணவு உண்ணும் இடத்தில் பிராமணர்களுக்கும் மற்றவர்களுக்கும் செய்திருந்ததைக் கண்டித்து அன்றைய காங்கிரஸ் தலைவர் பெரியார் சமத்துவப் போராட்டத்தைத் தொடங்குகிறார். ஜீவாவும் பெரியாரோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறார். காசி விஸ்வநாதன் செட்டியார் என்னும் சுதந்திரப் போராட்ட வீரரின் அழைப்பின் பேரில், அவர் காரைக்குடி அருகே சிராவயல் காந்தி ஆசிரமத்தில் அதே ஆண்டு ஆசிரியராகச் சேருகிறார். அப்போது அவருக்கு வயது 20 தான். (உண்மையில் 1926 இல் 1907 ஆகஸ்ட்டில் பிறந்த ஜீவாவுக்கு வயது 19 தான்)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல்களின் ஆசிரியர்கள் அனைவரும் “ஜீவா சிராவயலில் ஆசிரமத்தைத் தோற்றுவித்தார்” என்று கூறியிருப்பது போலவே தோழர் பொன்னீலனும் 1982இல் எழுதிய ‘ஜீவா என்றொரு மானுடன்’ நூலிலும் எழுதி இருக்கிறார். ஆனால் அதே தோழர் பொன்னீலன் 2008 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டு இருக்கிற ‘பொதுவுடைமையின் முகவரி ஜீவா’ என்ற நூலில், “காசி விஸ்வநாதன் செட்டியார் என்னும் சுதந்திரப் போராட்ட வீரரின் அழைப்பின் பேரில், அவர் காரைக்குடி அருகே சிராவயல் காந்தி ஆசிரமத்தில் அதே ஆண்டு ஆசிரியராக சேருகிறார்” என்று திருத்திக் கொண்டிருக்கிறார் (ஒருவேளை அவருக்கு கிடைத்த புதிய தகவல்கள் அவ்வாறான திருத்தத்தை மேற்கொண்டு இருக்கக் காரணமாக இருக்கலாம்) என்ற செய்தியை இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகிறது.

இந்த இடத்தில் 02.02.2019 விகடன் இணையதளத்தில் வெளிவந்த முழு செய்தியையும் பார்த்து விடுவோம்.

“சுதந்திரப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தி, வ.வே.சு. ஐயர், வ.உ.சி., மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த கக்கன் மற்றும் தமிழறிஞர் வ.ரா. போன்ற தமிழக அரசியல் வரலாற்றின் பல்வேறு ஆளுமைகளும் பொதுவுடைமைப் போராளியான ஜீவாவை வந்து சந்தித்த இடம், காரைக்குடி அருகேயுள்ள சிராவயல். இங்கு நிலைகொண்டிருந்த காந்தி ஆசிரமம், இன்றைக்கு முற்றிலும் சிதைந்துபோன நிலையில் முட்செடிகளும், கருவேல மரங்களும், குப்பைகளும் மண்டிக் கிடக்கிறது.

தோழர் ப.ஜீவானந்தம் – காந்தியத் தொண்டர், சுயமரியாதை இயக்கப் பற்றாளர், தனித்தமிழ்க் காதலர், பொதுவுடைமைப் போராளி… எனப் பன்முக அடையாளங்களோடு அறியப்பட்ட தூய அரசியல்வாதி. ஜீவா தன்னுடைய 20-ஆம் வயதில் வந்துசேர்ந்த இடம் காரைக்குடி அருகே உள்ள சிராவயல். இன்னும் நேர்த்தியாகச் சொன்னால், சிராவயல் அருகே இருக்கும் மருதங்குடி.

அங்கிருக்கும் மூத்த காங்கிரஸ்வாதியான க.திருநாவுக்கரசு, ஜீவா குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“மருதங்குடியையும் சிராவயலையும் ஒரு நீண்ட மண்சாலைதான் பிரிக்கிறது. காந்தியவாதியான காசி விசுவநாதன் நடத்திய ஆசிரமப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிய வந்தவர்தான் ஜீவா. அங்கு ஆசிரியப் பணிக்கு வந்தபோது சொரிமுத்து என்ற இயற்பெயரில்தான் செயல்பட்டார். சமுதாய மாற்றச் சிந்தனைகளை மக்களிடையே விதைத்தார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் காந்தியத்தையும் திருக்குறளையும் இலக்கியங்களையும் பயிற்றுவித்தார். குப்பன், சுப்பன் என்கிற பெயர்களையெல்லாம் கெளதமன், மணிவாசகன், மணித்தொண்டன் எனப் பெயர் மாற்றம் செய்தார். இதற்காகக் காசி விசுவநாதன், ஜீவா இருவருமே நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிதாயிற்று. காசி விசுவநாதனைச் சுயசாதியிலிருந்தே விலக்கி, பின்னர் ஊரைவிட்டும் வெளியேறச் செய்தனர்.

தோழர் ஜீவா அரிவாளால் தாக்கப்பட்டார். இதை, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பின்னாளில், `சிராவயல் அளித்த பரிசு’ என்று ஜீவா குறிப்பிட்டதாக எழுதுகிறார். அண்ணல் காந்தி அமரர் ஜீவா நினைவுக் குழு சார்பாக வருடந்தோறும் ஜீவாவின் நினைவாக விழா நடத்துகிறோம். சமூகச் சீர்திருத்தவாதியாக வாழ்ந்த ஜீவாவுக்கு, அவர் வாழ்ந்த பகுதியான சிராவயலில் நினைவு இல்லம் அமைக்கப்பட வேண்டும் என்பது ஊர்மக்கள் எல்லோரின் விருப்பம்” என்றார்.

தேச விடுதலை, ஜாதிய வேறுபாடுகள், பெண்ணுரிமை, தனித் தமிழ் என முற்போக்கு கருத்துகளை ஏந்தி நடந்த, முன்னத்தி ஏரான ஜீவானந்தத்தை, காந்தி சந்தித்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது. தமிழகம் வந்திருந்த காந்தி, அவரைக் காரைக்குடியில்தான் தங்கியிருந்த இடத்துக்கு வரச் சொல்லாது ஜீவா செயலாற்றிய காந்திய ஆசிரமத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டார். அவரை, தேசத்தின் சொத்து என்று காந்தி குறிப்பிட்டதும் இவ்விடத்தில்தான்.”

குன்றக்குடி ஆதீனப் புலவர் பரமகுரு அவர்கள் குறிப்பிடும்போது, “ஜீவானந்தம் முழுமையான தலைவராக வாழ்ந்தவர். வாக்கும் வாழ்க்கையும் ஒன்றென வாய்க்கப் பெற்றவர். நேர்மைக்குச் சிகரமான அவரின் மேடைப் பேச்சுகளை முழக்கம் என்றே சொல்ல வேண்டும். குன்றக்குடி அடிகளாரோடு அவரின் பட்டி மண்டபம், இருவரிடையே நிலவிய கருத்தியல் நெருக்கங்களை உணரவைத்தன. ஜீவாவை அடுத்த தலைமுறையினர் கற்க வேண்டும்” என்றார்.

அவரின் 22 நூல்களுக்கு மேல் தொகுத்த கே.ஜீவபாரதி, “சிராவயலில் – காந்தி – ஜீவானந்தம் நினைவு இல்லம் அமைக்க வேண்டும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அவரிடம் பேசிய போது, “அவர்கள் சந்தித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம், இன்றைக்குப் பொதுக் கழிப்பிட அளவுக்குப் பாழ்பட்டுக் கிடக்கிறது. அந்த இடத்தின் பொறுப்பு தனி நபர்களிடம் இருக்கிறது. அவர்களிடமிருந்து மீட்டு அவ்விடத்தைத் துப்புரவு செய்து ஜீவானந்தத்தின் தியாகத்தைப் போற்றும்வகையில் அரசு நினைவு இல்லம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவரின் நூல்களை அங்குக் காட்சிப்படுத்த வேண்டும். இது, தேசப்பற்று கொண்டிருக்கிற அனைவரின் கோரிக்கை” என்றார்.

சிராவயல் ஆசிரமத்தை ஜீவா தான் உருவாக்கினாரா?

தன்னலமற்ற தலைவர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாப்பது நம் கடமை மட்டுமல்ல, பெருமையும்கூட” என்பதே விகடன் இணைய இதழ் கூறும் முழுசெய்தி.

ஆசிரமத்தை ஜீவாதான் தொடங்கினாரா?

மேலும் இந்த இடத்தில் அனைத்து வரலாற்று நூல் ஆசிரியர்களும் சிராவயல் காந்தி ஆசிரமத் தலைவராகக் குறிப்பிட்டுள்ள கு.கும்பலிங்கம் ஓர் அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார் என்ற செய்தியை குறிப்பிட்டாக வேண்டும். அது ‘குடிஅரசு’ 25.4.1926 ஆம் நாள் இட்ட இதழின் 11ஆம் பக்கத்தில் “வந்தே மாதரம். ஸ்ரீ காந்தி ஆசிரமம், சிராவயல்”என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. அவ்வறிக்கை கூறும் செய்திகள் கீழே:

“மகாத்மா காந்தியடிகளின் திருப்பெயர் கொண்டிருக்கும் இவ்வாசிரமம் குரோதன வருஷம் தை மாதம் 29 ஆம் நாள் (‘குரோதன ஆண்டு, தை மாதம், 29ஆம் தேதி’ என்பது பொது ஆண்டுக் கணக்கில் 11.2.1926ஆம் நாளாகும்). சிரா வயலில் ஆரம்பிக்கப்பட்டது. பிறப்பினால் உயர்வு தாழ்வில்லை என்பதே இவ் ஆசிரமத்தில் முக்கிய கொள்கையாகும். தேசியக் கல்வி, குருகுலக் கல்வி, ஒடுக்கப்பட்ட வகுப்பினர்களின் முன்னேற்றம், கதர் அபிவிருத்தி முதலிய விஷயங்களில் இவ்வாசிரமம் உழைக்கும். குருகுல கல்விக்காக மூன்று மாணவர்கள் வந்திருக்கின்றார்கள். ஒருவன் ஆதிதிராவிடர். ஆசிரமத்தின் கொள்கைக்கேற்ப அவனுக்கு சம உரிமை கொடுக்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், தேச சரித்திரம், நூற்றல் முதலியன போதிக்கப்படும். உணவு சைவ உணவேயாம். புத்தகம், உணவு முதலிய செலவுக்காக மாதம் ஒன்றுக்கு ரூ.10 மாத்திரம்தான் பெற்றுக்கொள்கிறோம். கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் அவர்கள் ஆதிதிராவிட மாணவருக்காக மாதம் பத்து ரூபாய் வீதம் அன்புடன் அளித்து வருகிறார். சுவாமி ஆத்மராம் முதலிய பல பெரியோர்கள் இம்மாதிரி பணம் கொடுத்து பையன்களை அனுப்புவதாக இசைந்திருக்கிறார்கள். ஜாதி பேதம் அற்ற உண்மையான குருகுலக்கல்வி விரும்புபவர்கள் தங்கள் சிறுவர்களை ஆசிரமத்திற்கு அனுப்பி நலம் பெறலாம்.

இராப் பள்ளிக்கூடம்
நெற்றி வியர்வை நிலத்தில் விழ பகல் காலத்தில் வேலை செய்பவர்களுக்காக இரவு ஆசிரமத்தாரால் தமிழ், ஆங்கிலம், நீதிக்கதைகள் முதலியன போதிக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் பஜனை நடைபெறுகிறது.

ஸ்ரீ காந்தி வித்யாலயம்
இஃது தன வைசிய நாட்டுக் கல்வி கழகத்தாரால் நடத்தப்படுகிறது. இதில் 35 ஆதிதிராவிட மாணவ மாணவிகள் போதிக்கப்படுகின்றனர். இவர்களின் படிப்பைப் பார்த்து மகிழ்ச்சியுற்ற நண்பர்கள் பலர், ஆடை, கற்பலகை முதலியன பரிசளித்து வருகிறார்கள். ஸ்ரீ காந்தி ஆசிரமம், ஸ்ரீ காந்தி வித்யாலயம், இராப்பள்ளி க்கூடம் இவைகளை ஸ்ரீமான் கும்புலிங்கம் தலைமை வகித்து நடாத்தி வருகிறார். இவைகளின் பயனாக மருதங்குடி ஆதி திராவிடர்களின் பெரும்பான்மையோரும் கள் குடி விடுத்தனர். மாட்டு மாமிசம் அருந்துவதில்லை. உயர்ந்த ஒழுக்கத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் தோன்றியிருக்கிறது.

இவ்வாசிரமத்தைப் போற்ற தமிழர்களையும், சிறப்பாக தன வைசிய இளைஞர்களையும் மிகவும் வேண்டுகிறோம். உதவி புரிவோரும், மாணவர்களை அனுப்புவோர்களும் அடியில் காணும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டுகிறோம்.
கு.கும்பலிங்கம், ஸ்ரீ காந்தி ஆசிரமம்,
சிராவயல், ராமநாதபுரம் ஜில்லா.

மாயபிம்பம்
சென்னையிலிருந்து காந்தி நூல் வெளியீட்டு கழகம் காந்தியாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 1969இல் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற 1031பக்கங்கள் கொண்ட ஒரு நூலினை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் காந்தியார் தன் வாழ்நாளில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்த அனைத்து செய்திகளையும் தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் ஆசிரியர் திரு. அ.இராமசாமி பி.ஏ., என்பவர் ஆவார். அந்நூலின் 541ஆவது பக்கத்தில் கீழ்க்கண்ட செய்திகள் பாகனேரி வழி என்ற தலைப்பில் 27.9.1927 அன்று நிகழ்ந்ததாகக் காணப்படுகின்றன. தன வணிகர் கல்விக் கழகம் (இக்கல்விக் கழகத்தின் ஆதரவில் பல ஊர்களில் 15, 16 ஆரம்பப் பள்ளிகள் நிறுவப்பெற்று நடைபெற்று வந்தன. இது ஒரு அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனம்) நடத்தி வந்த பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் சிலர் ப.ஜீவானந்தம் (பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்) கும்பலிங்கம் ஆகியோர் தலைமையில் காந்திஜியைக் காண வந்தார்கள். [இரண்டு அடைப்புக்குறி செய்திகளும் அந்நூலில் உள்ளவையே] காந்திஜி அவர்களுக்கு சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பேட்டி கொடுத்தார். வந்த மாணாக்கர்கள் சிலருடைய குடுமி வளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. காந்தியடிகள் ஆசிரியர்களைப் பார்த்து, “மாணாக்கர்கள் ஏன் இவ்வளவு நீளம் மயிர் வளர்க்க வேண்டும்” என்று கேட்டார். அதற்கு ஜீவானந்தம் “இவர்களெல்லாம் மிகவும் ஏழைகள்; அன்றாடம் உணவு கிடைப்பதே கடினம்; ஆகையால் மயிர் வெட்டிக் கொள்வதற்கு பணம் செலவழிக்க முடிவதில்லை” என்று பதில் அளித்தார். உடனே காந்திஜி ஆசிரியர்களை நோக்கி, “ஆசிரியர் என்றால் பொருள் என்ன?” என்று கேட்டார். “கல்வி கற்றுக் கொடுப்பவன்” என்றார் ஒரு ஆசிரியர். ‘கல்வி மட்டும் தானா ஆசிரியர் கற்றுக் கொடுப்பது? எல்லா வகையிலும் அவர்கள் வாழ்வு செம்மையாக நடைபெற வழிகாட்டுவதல்லவா ஆசிரியனின் பணி” என்று திருப்பினார் மகாத்மா. ஆசிரியர்கள் “ஆம், ஆம்” என்றனர். “அப்படியானால் இந்த மாணாக்கர்களின் தலைமயிர் களைவதையும் ஆசிரியரை மேற்கொள்ளக் கூடாதா?” என்று காந்திஜி கேட்டதும் ஆசிரியர்கள் வியப்பு மேலிட்டவர்களாய் “ஆம் செய்யலாம்” என்று அரை மனதுடன் பதில் அளித்தார்கள். “ஓஹோ, உங்களுக்கெல்லாம் மயிர் களைவது என்பது கௌரவக் குறைவான செயல் என்ற உணர்வு இருக்கிறது போலும். பரவாயில்லை, நானே அந்த வேலையைச் செய்கிறேன்” என்று அவரிடம் கூறிவிட்டு தேவதாஸ் பக்கம் திரும்பி, “தேவதாஸ், கத்தரி முதலியவற்றை எடுத்து வா” என்று உத்தரவிட்டார். உடனே ஆசிரியர்கள் “வேண்டாம் பாபு, நாங்களே அந்தப் பணியை மாணாக்கர்களுக்கு மனப்பூர்வமாகச் செய்கிறோம்” என்றார்கள். காந்திஜியும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டார். “சொல்லிக் கொடுப்பவன் மட்டுமல்லன்; செயலிலும் தாம் சொல்வதை செய்து காட்டுபவனே நல்லாசிரியன்” என்று கூறி ஆசிரியர்களை வாழ்த்தி விடை அனுப்பினார். (இந்த நிகழ்வுகள் காரைக்குடியில் நடந்தவையாகும்.)

காந்தியார் ஆசிரியர்களிடம் நடத்திய உரையாடால் இவ்வளவு விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்திகளின் தொடர்ச்சியாக நூலின் 542ஆவது பக்கத்தில் உள்ள செய்திகளையும் பார்ப்போம்.

“நாச்சியார்புரம், சிறாவயல், திருப்பத்தூர் ஆகிய ஊர்களின் வழியாக காந்திஜி மதுரை வந்து சேர்ந்தார் சிறா வயலில் ஆசிரமத்தின் சார்பாக காந்திஜிக்கு வரவேற்புப் படிக்கப்பட்டது. இந்த ஆசிரமம், குருகுலம் நடத்தியதையும், அரிஜன பையன்களுக்காகப் பள்ளி நடத்தியதையும், சுகாதாரத் தொண்டாற்றியதையும் காந்திஜி பாராட்டினார்” என்ற செய்திகள் பதியப்பட்டுள்ளன.

ஆனால், சில ஜீவா வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல “1927ஆம் ஆண்டு காந்தியடிகள் தனது பெயரால் நடத்திக்கொண்டிருந்த ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார். அப்போது காந்தியார் ஜீவாவிடம் “உங்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது?” என்று கேட்டதோ, அதற்கு ஜீவா “இந்தியாதான் என் சொத்து “ என்று சொன்னது பற்றியோ, அதற்கு மறுமொழியாகக் காந்தியார், “இல்லை, இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” என்று சொன்னதாகவோ எந்தப் பதிவையும் காணமுடியவில்லை. அவை ஜீவா, தோழர் பாலதண்டாயுதத்திடம் சொல்லியதாக மட்டுமே இருக்கமுடியும். அவரது நூலில் குறிப்பிட்டதைத்தான் மற்றவர்களும் தங்கள் நூலில் எடுத்துக் கையாண்டிருக்கலாம்.

மேலும் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலில் “தன வணிகர் கல்விக் கழகம் (இக்கல்விக் கழகத்தின் ஆதரவில் பல ஊர்களில் 15, 16 ஆரம்பப் பள்ளிகள் நிறுவப்பெற்று நடைபெற்று வந்தன. இது ஒரு அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனம்) நடத்தி வந்த பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் சிலர் ப.ஜீவானந்தம் (பிற்காலத்தில் பொதுவுடமைக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்) கும்பலிங்கம் ஆகியோர் தலைமையில் காந்திஜியைக் காண வந்தார்கள் என்றுள்ளதையும், 25.4.1926 குடி அரசு இதழில் சிராவயல், காந்தி ஆசிரமத் தலைவர் கு. கும்பலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஸ்ரீ காந்தி வித்யாலயம் எனும் உட்தலைப்பில் “இஃது தன வைசிய நாட்டுக் கல்வி கழகத்தாரால் நடத்தப்படுகிறது. இதில் 35 ஆதிதிராவிட மாணவ மாணவிகள் போதிக்கப்படுகின்றனர்” என்ற செய்தியையும் இணைத்துப் பார்த்து சிந்திக்கும் எவராலும் சிராவயல் காந்தி ஆசிரமம், ஜீவாவால் நிறுவப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது; ஜீவாவை சுற்றி எழுப்பட்டிருப்பது மாய பிம்பமோ என்று அய்யம் கொள்ளாமலும் இருக்க முடியாது.

1927ஆம் ஆண்டு காந்தியடிகள் தனது பெயரால் நடத்திக்கொண்டிருந்த ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார். அப்போது காந்தியார் ஜீவாவிடம் “உங்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது?” என்று கேட்டதோ, அதற்கு ஜீவா “இந்தியாதான் என் சொத்து “என்று சொன்னது பற்றியோ, அதற்கு மறுமொழியாகக் காந்தியார், “ இல்லை, இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” என்று சொன்னதாகவோ எந்தப் பதிவையும் காணமுடியவில்லை. அவை ஜீவா, தோழர் பாலதண்டாயுதத்திடம் சொல்லியதாக மட்டுமே இருக்கமுடியும்.
பெரியார் முழக்கம் இதழ் 06112025

You may also like...