ஜீவா இந்தியை எதிர்த்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (4)- கொளத்தூர் மணி
ஜீவா இந்தியை ஆதரித்தார் என்று குறிப்பிட்டதற்கு பல பேர் கொதித்தெழுந்து ஆதாரத்தைக் கேட்கத் தொடங்கினார்கள். அது குறித்தும் சில செய்திகளைப் பார்ப்போம்.
பெரியார் காங்கிரசில் இயங்கியபோது 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியார் பெரியாரின் இல்லத்துக்கு வந்து தங்கி இருந்திருக்கிறார். அப்போது அன்னியத் துணிகள் பகிஷ்கரிப்பு என்ற பெயரால் வெளிநாட்டுத் துணிகள் எரிக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்ததாக 1922-ஆம் ஆண்டில் ஈரோடு பெரியார் இல்லத்திற்கு மோதிலால் நேருவும், டாக்டர் அன்சாரியும் வந்ததன் நினைவாக ஈரோடு வெங்கட்ட நாயக்கர் சத்திரத்தில், ஒரு இந்தி மொழி கற்பிக்கும் பள்ளியை, ஒரு பாதி காங்கிரஸ் செலவிலும், மறுபாதி தமது செலவிலும் நடக்கும் வகையில் தொடங்கியுள்ளார். ஆனால் அதே ஆண்டு இறுதியில் திருப்பூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் “இந்தியைப் பரப்புவது என்று கூறிக்கொண்டு இந்தியில் உள்ள துளசிதாஸ் இராமாயணத்தை பரப்புவதைக் கண்டித்தும், வருணத்தையும் தீண்டாமையும் காப்பாற்றும் இராமாயணத்தையும் மனுசாஸ்திரத்தையும் எரிக்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்.
1922 நவம்பரில் கயாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டு நிகழ்ச்சிகளில் இந்திக்கு முதலிடம் கொடுத்து வட நாட்டினர் அனைவரும் இந்தியிலே பேசியதால் மனம் நொந்த இந்திய தேசிய காங்கிரஸின் செயலாளராக இருந்த ஆந்திர ரத்னா கோபாலகிருஷ்ணய்யா “காங்கிரசில் எல்லோரும் ஹிந்தியில் தான் உரையாற்றுகிறார்கள், உரையாற்றினார்கள்; ஆனால் இந்திக்கு முதலிடம் அளிப்பது நமது அடிமைத்தனத்தை வேறொரு உருவத்தில் நிலைநாட்டுவதாக முடியும்” என்று தொடங்கிய உரையை “ஆகவே இந்தியை பொது மொழியாக்குவது பற்றி மிக மிக விளிப்பாக இருக்க வேண்டுமென்றும் நமது அரசியல்வாதிகளை எச்சரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றும் முடித்துள்ளார்.
அதுபோலவே 1925 ஆம் ஆண்டு பெல்காமில் அகில இந்திய காங்கிரஸ் நடந்து முடிந்ததும் இந்தி முயற்சியினைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரே தனது ‘வாணி ஒப்பாரி’ என்ற அரிய பாடல் தொகுப்பில் “இந்தியை புகுத்துவதன் மூலம் காந்திஜி என்னை வனவாசம் செய்ய அனுப்புகிறார்” என்று தெலுங்கு மொழி அன்னை மனம் உருகி அழுவதாக பாடலும் எழுதி இருக்கிறார்.
1925 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் இருந்து வெளியேறிய பெரியார் 14.3.1926 குடி அரசில் ‘தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும்’ என்று எழுதிய ஒரு கட்டுரையில் “இம்மாதிரி பலன் தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும், நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத்தனத்திற்கும் வெட்கப்படாமலும் இருக்க முடியவில்லை” என்றும் “பிராமணர் அல்லாதவருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இதுவும் ஒன்றாய் முடியும் போலிருக்கிறது; பொதுவாய் இந்தி என்பது வெளி மாநிலங்களில் பிராமணப் பிரச்சாரம் செய்ய கற்பித்துச் செய்யும் ஒரு வித்தை ஆகிவிட்டது” என்றும் கண்டித்து எழுதுகிறார்.
பெரியார் 1925 காஞ்சிபுரம் மாநாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மாநாட்டுத் தலைவரான தமிழ்த் தென்றல் திரு.வி.க “ தமிழக இளைஞர்கள் இந்தி சேவா தளத்தில் இணைய வேண்டும்; சேவா தளத்தின் கிளைகள் ஒவ்வொரு நகரத்திலும் தாலுகாக்களிலும் அமைக்கப்பட வேண்டும்; இந்தியைப் பரப்புவதில் ஆர்வம் குறைந்துள்ளது. அதை மாற்றி தமிழர்கள் இந்தியை விரைவாகவும் நன்றாகவும் பயில வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளார்.
அதே திரு.வி.க வங்காளத்தைச் சார்ந்த புகழ்பெற்ற தேச பக்தரும் ‘மாடன் ரிவ்யூ’ இதழின் ஆசிரியருமான ராமானந்த சட்டர்ஜி “இந்தியைப் புகுத்த செய்யப்படும் முயற்சி தீங்கானது” என்பதை மிக விளக்கமாக 1931 மே மாதம் தனது இதழ் எழுதியிருந்த நீண்ட கட்டுரையை தனது ‘நவசக்தி’ ஏட்டில் 25.5.1931 அன்று மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
பெரியாரும் 2.1.1929 குடிஅரசு ஏட்டில் ‘இந்தி புரட்சி’ என்ற தலைப்பில் தலையங்கமும், 10.5.1931இல் குடிஅரசில் ‘கதரும் இந்தியும்’ என்ற தலைப்பில் கட்டுரையும், 17.1.1932 இதழில் ‘சமஸ்கிருத சனியன்’ என்றும் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். 14.06.1931 நன்னிலம் சுயமரியாதை மாநாட்டிலும், 18/19.06.1932 மன்னார்குடி மாநாட்டிலும், 13.01.1936 சென்னை பச்சையப்பன் கல்லூரி ‘தமிழ்த் திருநாள் விழா’விலும் தொடர்ச்சியாக இந்தி எதிர்ப்பு குறித்து பேசி வந்துள்ளார்.
இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம் 1929 செங்கல்பட்டு மாகாண சுயமரியாதை மாநாட்டிலும், 1930 ஈரோடு மாகாண சுயமரியாதை மாநாட்டிலும், 1931 விருதுநகர் மாகாண சுயமரியாதை மாநாட்டிலும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ள ஜீவா நிச்சயமாக இந்தி எதிர்ப்புக் கொள்கையை அறிந்தவராகவும் ஏற்றவராகவும் தானே இருந்திருக்க முடியும்? மேலும் 1926இல் சிராவயல் ஆசிரமத்தில் இருந்தபோது காந்தியாரிடம் வர்ணாசிரமம் குறித்து வாதிட்டதாகச் சொல்லப்படும் ஜீவா வருணாசிரம, பார்ப்பன மேலாதிக்கம் ஆகியவற்றின் எதிர்ப்பாளராகத்தானே இருந்திருக்க முடியும்?
ஆனால் 1936இல் பெரியாரிடம் இருந்து விலகிப்போன ஜீவா ‘ஜனசக்தி’ ஏட்டின் ஆசிரியராக இருந்த ஜீவா 11.06.1938 இதழில் ‘ஹிந்தி அவசியமா?’ என்ற தலைப்பில் நீண்டதொரு தலையங்கத்தை எழுதியுள்ளார்.தலையங்கத்தின் ல வரிகளைப் பார்ப்போம
“ஆயிரம் மடங்கு தமிழனுக்குத் தொண்டு செய்து இருக்கிற, தொண்டு செய்து வருகிற ஒரு தமிழனை (இராஜாஜி) பிரதமராகக் கொண்டிருக்கிற மந்திரி சபையார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் போல் சுயலாப நோக்கோடு பலாத்காரத்தால் அல்ல; தமிழர்கள் இந்தியைத் தேசிய பொது பாஷையாக கற்றுத் தீர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அன்பால் வற்புறுத்துவது, தமிழைக் கொலை செய்துவிடும் என்று கூச்சலிடுவார்களேயானால் அவர்கள் தமிழர்களா? தமிழ் அபிமானம் உடையவர்களா? தமிழின் ஜீவ சக்தியில் நம்பிக்கை உடையவர்களா?” என்ற கோபம் கொந்தளிக்கும் கேள்விகளை முன்வைத்தது பெரியார் மீது மட்டுமல்ல; இந்தி எதிர்ப்பு வாரியத்தின் தலைவர்களான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், அவரது மகள் நீலாம்பிகை அம்மையார், கி.ஆ.பெ.விசுவநாதம், பண்டிதை நாராயணி அம்மையார் ஆகியோரையும் நோக்கித்தான்!ரி, தொடர்ந்து தலையங்க வரிகளை பார்ப்போம்
“முதலில் எதிர்ப்பு வீரர்களை எடுத்துக் கொள்வோம். கே.வி.ரெட்டி நாயுடுகார் சர் பட்ட அலங்காரி; மாஜி கவர்னர். பெரியார் ஈ.வெ.ரா எந்த சாக்கிலும் காங்கிரசைத் திட்டி திட்டியே சாவதென்ற தீர்க்கமான தீர்மானத்திற்கு வந்து அந்த ‘புனித’ கைங்கரியத்திலே தனது ‘பொன்னான’ நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர். ஸ்ரீ சி.டி. நாயகமோ ஜஸ்டிஸ் கட்சியின் கீழ் வளர்ந்த கடுமையான வகுப்புவாதி. மேற்சொன்ன அத்தனை பேரும் ஏகாதிபத்தியத்தின் தாஸானுதாசர்கள். ஏகாதிபத்திய எஜமானர்களின் மேஜைகளிலிருந்து விழும் ரொட்டித் துண்டுக்கு நாக்கில் ஜலம் ஊற அண்ணாந்து நிற்கும் அரசியல் பிற்போக்காளர்கள்.”
“ஏகாதிபத்தியத்திற்கு காவடி எடுப்பதன் மூலம் விலா புடைக்க வயிறு வெடிக்கக் கொழுக்கும் சுயநல ஓநாய்களாய் இருத்தல் வேண்டும். மடையர் பேச்சையும் வஞ்சகர் வீச்சையும் ஞாய புத்தியும் நல்லெண்ணமும் படைத்த எவரும் காதறுந்த ஊசி அளவு கூட பொருட்படுத்த மாட்டார்கள்.
‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல்’ மீண்டும் பொதுஜனங்களில் ஒரு சாராரையாவது வகுப்புவாத ஜுரத்திற்கு இரையாக்க முடியுமா என்கிற சூழ்ச்சி தான், ‘அக்ரஹார ஆட்சி ஒழிக!’ என்கின்ற ஜன்னிப் புலம்பல் காங்கிரஸ் நிர்வாகத்தை அக்கிராகார ஆட்சி என்று பிதற்றுவதைப் போல் உள்ள அசட்டுத்தனத்தையும் பச்சை பொய்யையும் நாம் இதுவரை கண்டதில்லை. ஹிந்தியை கட்டாய பாடமாக்க கூடாது என்று கிளர்ச்சி செய்பவர்கள் ‘காங்கிரஸ் ஒழிக’ என்று அலறுவானேன்? தமிழை அரவணைத்து ரட்சிக்க புறப்பட்ட இவர்கள் காங்கிரஸ் மந்திரி சபை ஒழிக என்று குறித்து குதித்து யோசிப்பானேன்’ …………
என்றெல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்துள்ளார்.
“தேசிய போராட்டத்திற்குத் தேசிய பாஷை அவசியம் என்பது கைப்புண்ணை பார்க்க கண்ணாடி காட்டுகிற மாதிரி. பல திறப்பட்ட பாஷைகள் பேசப்படும் நம் நாட்டில், தேசியப் போராட்டத்திற்குப் பொதுஜன சக்தியைத் திரட்ட வேண்டுமானால் ஒரு பொதுமொழி எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக் கூற வேண்டியது இல்லை. பொது பாஷையாக இருக்க தகுதியுடைய பாஷை எது? பழம் பெருமை படைத்த பாஷையா? வண்டி வண்டியாக இலக்கணங்களும் இலக்கியங்களும் உடைய பாஷையா? ‘சிவனார் போல அடியும் அனாதியுமற்ற’ பாஷையா? எஜமானர்கள் இனிக்க இனிக்கப் பேசும் பாஷையா? இன்று பிறந்த பாஷையா? அல்லது எந்த பாஷை தேச மக்களின் பெரும்பான்மையோரால் பேச முடிகிறதும், பேசினால் அறிய முடிகிறதுமான பாஷையே புது பாஷையாக இருக்க எல்லா வகையான தகுதி உடையது. அப்படியானால் ஹிந்தி தான் இந்தியாவின் பொது பாஷையாக இருக்க முற்றிலும் தகுதி உடையது என்று அழுத்தம் திருத்தமாக அறைகிறோம். மறுப்பவர் மறுக்கட்டும்! தேசிய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மதர்ந்து கிளர்ந்து நிற்கும் பொது ஜனங்கள், பொது பாஷையாகிய ஹிந்தியை தேசிய பாஷையாக அட்டி இல்லாமல் அங்கீகரிக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டவும் வேண்டுமோ?”
“மந்திரி சபையின் ஹிந்தித் திட்டம், தங்களுடைய ஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டத்தின் ஓர் அம்சம் என்பதை பொது ஜனங்கள் நன்றாக உணரவேண்டும்!”
“இந்த பொதுஜன விரோதிகளின், இந்தி எதிர்ப்பு என்னும் வஞ்சக வலையில் ஒரு நாளும் பொது ஜனங்கள் சிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். முடிவாக சமீபத்தில் இவ்விஷயமாக வெளிவந்துள்ள சர்க்காரின் அறிக்கையும், ராஜாஜியின் விளக்கத்தையும் நன்றாக சிந்தித்துப் பார்த்து ஹிந்தி எதிர்ப்பு என்னும் விஷ வலையில் சிக்கி உழலும் வாலிபர்கள் திருந்துவார்களாக!
மேலே காட்டப்பட்டுள்ளதுதான் ஜீவா அவர்கள் ‘ஜனசக்தி’யில் எழுதிய தலையங்க வரிகள். இப்போது சொல்லுங்கள் ஜீவா இந்தியை ஆதரித்தாரா? எதிர்த்தாரா?
நினைவூட்ட ஒரு செய்தி. 1936 நவம்பரில் நடந்த சமதர்மக் கட்சியின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின்படி கட்சி கலைக்கப்பட்டு ம.சிங்காரவேலர், ஜீவா போன்ற அனைத்து சமதர்மிகளும் காங்கிரசில் சேர்ந்தனர். ஜீவா 1937-இல் வேலூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டர்.
சுயமரியாதை இயக்கத்தில் இருந்து விலகி காங்கிரசில் ப. ஜீவானந்தம் போன்றோரைச் சேர்த்தவர் ம. சிங்காரவேலர். அந்த சிங்காரவேலர் தனது இறுதி நாட்களில் பிற காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளிடமிருந்து வேறுபட்டவராக இருந்தார். சென்னை மாகாணத்தில் கட்டாய இந்தித் திணிக்கப்பட்டதையும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் ம. சிங்காரவேலர் கண்டனம் செய்தார். பார்ப்பன இந்து மதத்திற்கு எதிராக நாத்திக கருத்துகளை வலியுறுத்தி வந்தார். ஆனால் ஜீவாவோ, கட்டாய இந்தியை ஆதரித்து ‘ஜனசக்தி’யில் எழுதிக் கொண்டிருந்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 20112025
சென்னை மாகாணத்தில் கட்டாய இந்தித் திணிக்கப்பட்டதையும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் சிங்காரவேலர் கண்டனம் செய்தார். பார்ப்பன இந்து மதத்திற்கு எதிராக நாத்திக கருத்துகளையும் வலியுறுத்தி வந்தார். ஆனால் ஜீவாவோ, கட்டாய இந்தியை ஆதரித்து ஜனசக்தி யில் எழுதிக் கொண்டிருந்தார்.
