தொழிலாளர் கொள்கையில் மூக்கை நுழைக்கும் மனுஸ்மிருதி!

தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கைகள், “ஷ்ரம் ஷக்தி நிதி 2025” எனும் பெயரில் மோடி அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்கைகளின் அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவெனில், உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சட்டக் கோட்பாடுகளாக நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்பட்ட மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற பழமையான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே ஒன்றிய அரசின் இக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன எனப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதுதான்.

ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வரைவுக் கொள்கை கூறுவதாவது:

“பழமை ஆவணங்களான மனுஸ்மிருதி, யக்ஞ வல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சுக்ரநீதி, அர்த்தசாஸ்திரம் ஆகியவை அரச நீதி குறித்து வலுவாகக் கூறியுள்ளன. நீதி, நியாயமான ஊதியம், சுரண்டலிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதில் ஆள்வோரின் கடமை என்ன என்பது கூறப்பட்டுள்ளது. நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உழைப்பை நிர்வ கிக்கும் இத்தகைய கோட்பாடுகள் இந்திய நாகரிக உருவாக்கத்தில் வலுவான அடிப்படை அம்சங்களாக உள்ளன.”

இந்தியாவின் பாரம்பரியப் புரிதல் என்னவெனில், உழைப்பு என்பது வாழ்வாதாரத் தேவை மட்டு மல்ல; சமூக ஒற்றுமையையும் கூட்டு முன்னேற்றத்தையும் நிலைநிறுத்த உதவும் புனிதமான மற்றும் தார்மீக அம்சமும் கொண்டது என கூறும் இந்த வரைவுக் கொள்கை, இத்தகைய பாரம்பரிய ஆவணங்களிலிருந்து உத்வேகம் பெறுவதாகவும், இத்தகைய கொள்கைகள் முற்றிலும் நவீன தொழிலாளர் கொள்கைகளுடன் இசைந்துள்ளதாகவும் கூறுகிறது. “தார்மீகம்”, “புனிதம்” போன்ற வார்த்தைகள் உழைப்புச் சுரண்டலையும் அதன் பாதக விளைவுகளையும் மூடி மறைக்கும் பட்டுத்துணி என்பதை கூறத் தேவையில்லை.

மௌரியர் காலத்துக்கு முன்பு அபஸ்தாம்ப தர்மசூத்திரம், பவுதாயன தர்மசூத்திரம், கௌதம தர்மசூத்திரம், வசிஷ்டர் தர்மசூத்திரம் (கி.மு. 300க்கு முன்பு), மௌரியர்கள் காலத்தில் உருவான அர்த்தசாஸ்திரம் (கி.மு. 300 முதல் 200), பின்னர் உருவான மனுஸ்மிருதி (கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை), அதற்குப் பின்னர் உருவான யக்ஞ வல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, விஷ்ணுஸ்மிருதி (கி.பி. 200 முதல் 500 வரை) போன்ற பல கோட்பாடு களும் அடிப்படையில் சொன்ன கருத்து என்ன? சமூகம் நால் வர்ணங்களைக் கொண்டது; அதில் உழைப்பை வழங்கும் சூத்திர வர்ணம் கடைக்கோடியில் உள்ளது; சூத்திரர்களின் கடமை ஏனைய வர் ணத்தாருக்குக் குறிப்பாகப் பிராமணர்கள் மற்றும் சத்திரிய வர்ணத்தாருக்குப் பணிவிடை செய்வது என்பதுதான்.

அர்த்தசாஸ்திரத்தின் பொருளாதார அம்சங்கள்

சூத்திரர்களின் பொருளாதாரம் மற்றும் ஊதியம் குறித்துப் பல கோட்பாடுகளை உருவாக்கியது அர்த்தசாஸ்திரமே. அது முன்வைக்கும் சில அம்சங்கள்:

* புறம்போக்கு நிலங்களைச் சூத்திரர்களின் உழைப்பு மூலம் விளை நிலங்களாக மாற்ற வேண்டும். * இதற்காகச் சூத்திரர்களை அடிமைகளாகப் பயன்படுத்தலாம்.

* நிலங்களை அவர்கள் நிர்வகிக்க அனுமதிக்கலாம், ஆனால் நில உரிமை தரக்கூடாது.

* இலக்குகள் நிறைவேற்றாவிட்டால் நிலம் திரும்பப் பறிக்கப்பட வேண்டும்.

* கால்நடைகளைப் பராமரிக்கும் சூத்திரர்கள் ஒரு கால்நடையைத் தொலைத்தால் கூடத் தண்டனை வழங்க வேண்டும்; அது மரண தண்டனையாகவும் இருக்கலாம்.

* தொல்லைகளின் பிறப்பிடம் தொழிலாளர்கள்தான்! எனவே அவர்களைப் பொருத்தமாகக் கையாள வேண்டும்.

* நிலத்தில் இலக்குகளைத் தவறும் சூத்திர உழைப்பாளிக்கு உடனடியாக ஊதியத்தில் 25% அபராதம்.

* தொடர்ந்து இலக்குகள் தவறினால் ஊதியத்தை விட இரு மடங்கு அபராதம்.

* ஒரு பிராமண ஆன்மீகவாதிக்கு 48,000 பனா (நாணய மதிப்பு) ஊதியம் எனில், சூத்திர கைவினைஞருக்கு 120 பனாக்கள்தான் ஊதியம்.

* வீடுகளில் பணிபுரியும் பணியாளருக்கு 60 பனாக்களுக்கு மேல் ஊதியம் கூடாது.

* அரசு உயர் பதவிகளில் சூத்திரர்களுக்கு இடம் தரக்கூடாது.

* உயர் வர்ணத்தாரின் சட்டப் பிரச்சனைகளில் சூத்திரர்கள் அல்லது சண்டாளர்களின் சாட்சியம் செல்லாது.

* ஒரே குற்றத்தைச் செய்த சூத்திரனுக்குக் கடும் தண்டனையும் உயர் வர்ணத்தாருக்குக் குறைவான தண்டனையும் தரப்பட வேண்டும்.

* உயர் வர்ணங்களைச் சேர்ந்த பெண்கள் சூத்திர ஆண்களை மணந்தால், அவர்கள் மூலம் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடையாது.

* அவர்ணத்தாரான சண்டாளர்கள் சூத்திரர்களுக்குக் கூட இணையில்லாத இழிவானவர்கள்.

* சண்டாளர்களைக் கண்ட கண்கள் கூட அசுத்தப்பட்டுவிடும்; எனவே உடனடியாகக் கண்கள் கழுவப்பட வேண்டும். மனுஸ்மிருதியின் பொருளாதார அம்சங்கள்

* சூத்திரர்கள் சொத்து சேமிக்க அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அது பிராமணர்களுக்கு வலியைத்தரும்.

* தமக்குத் தேவையெனில், பிராமணர்கள் சூத்திரர்களின் சொத்துக்களை எப்பொழுது வேண்டுமானாலும் பறிக்கலாம்.

* கடனுக்கு வட்டி வசூல் செய்யும்பொழுது பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் குறைவான வட்டியும் சூத்திரர்களுக்கு அதிகமான வட்டியும் விதிக்கப்பட வேண்டும்.

* உயர் வர்ணப் பெண்களுக்குப் பிறக்கும் சூத்திர குழந்தைகளுக்கு 10%க்கு மேல் சொத்து தரக்கூடாது.

* உயர் வர்ணத்தாரின் எஞ்சிய உடைகள், உணவுகள்தான் சூத்திரர்கள் பயன்படுத்த வேண்டும்.

(தீக்கதிர் செய்தியில் இருந்து)

பெரியார் முழக்கம் இதழ் 20112025

You may also like...