தலையங்கம்: குழப்பத்தை விளைவிக்கும் உச்சநீதிமன்றம்!
தமிழ்நாடு அரசின் `10-க்கும் மேற்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல், சட்டத்துக்கு எதிரானது. மசோதா மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், மசோதாவை நிறுத்திவைப்பதாக இருந்தால், 3 மாதங்களுக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் 3 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும், மறுபரிசீலனை செய்வதற்காக மசோதா திருப்பி அனுப்பப்பட்டால் ஒரு மாதத்துக்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். எதுவுமே செய்யாமல் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருக்க ஆளுநருக்கு எவ்வித தனி அதிகாரமும் (வீட்டோ) கிடையாது” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக, உரிய காலக்கெடு தாண்டிய பிறகு, திடீரென 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்துக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வுபெறுவதற்கு முந்தைய நாள், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு குடியரசுத் தலைவரின் கேள்விக்கு ஒருமனதாக பதில் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு வழக்கில் அளித்த தீர்ப்புக்கு முற்றிலும் நேர் முரணாக இந்த பதில் அளிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆளுநரின் முடிவு நீதித்துறைக்கு உள்பட்டதல்ல; அதில் நீதிமன்றம் தலையிடாது, காரணமின்றி, எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் வைத்திருந்தால் அதை நீதிமன்ற ஆய்வுக்குட்படுத்தி தேவைப்பட்டால் ஆளுநர்களுக்கு அந்தவொரு விஷயத்தில் வரையறுக்கப்பட்ட உத்தரவைப் பிறப்பிக்க முடியும்; ஆனாலும் அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்காது; அது அந்தந்த சூழ்நிலைகளைப் பொருத்தது’ என்று தனது தீர்ப்பில் இருந்து அப்படியே பல்டி அடித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
அரசமைப்பின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி, ஆளுநர் கிடப்பில் மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்குகிறது என தீர்ப்பில் கூறியிருந்த நிலையில், தாமதப்படுத்தப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருத, அரசமைப்பின் 142-வது பிரிவின் கீழுள்ள அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கலாகாது என்றும் இப்போது 111 பக்க கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மீறி, ஆளுநர்கள் தான்தோன்றித்தனமாக செயல்படலாம், அதற்கு எந்த வரையறையும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் இந்தக் கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், இது தீர்ப்பு இல்லை, ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எவ்விதத்திலும் பாதிக்காது என்றாலும் கூட, எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளில், அரசியல் சாசன அமர்வின் இந்த கடிதத்தை முன்னுதாரணமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் மோசமான தீர்ப்புகளை வழங்கலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா மாநில அரசுகள் வலியுறுத்தியும் இதை கடமையாக எடுத்துக்கொண்டு, இத்தகைய பதில் கடிதத்தை அனுப்ப வேண்டிய அவசியம் உச்சநீதிமன்றத்திற்கு என்ன வந்தது என்பதே நமது கேள்வி. ஏனெனில் அரசமைப்புச் சட்டப்படி ஆளுநர் என்பவர் ஒரு நியமனப் பதவியாளர். ஆனால் நடைமுறையில் அவர்கள் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாகத்தான் நடந்துகொள்கிறார்கள்.
ஒரு நியமன அதிகாரியாய் உள்ள ஆளுநர், தன்னிச்சையாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் தாமதிப்பதன் மூலம் அல்லது அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவர் அவற்றை காலவரையின்றி நீட்டிக்க அனுமதிப்பதன் மூலம், மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசின் செயல்பாட்டை முடக்க முடிகிறது.
மாநிலப் பட்டியலுக்குள் வரும் சட்டங்களுக்கும் அல்லது ஒத்திசைவு பட்டியலில் வரும் சட்டங்களுக்கும் கூட ஆளுநர் இவ்வாறு தடங்கல் விளைவிக்கின்றார் என்றால் கூட்டாட்சி என்பதே அர்த்தமற்றதாகிறது. மாநில அரசுகள் செயலற்றதாகின்றன.
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-இல் குறிப்பிடப்பட்டுள்ள “as soon as possible” என்ற சொற்றொடர், மாநில மசோதாக்கள் மீது ஆளுநர் ‘நியாயமான காலத்திற்குள்’ முடிவெடுக்க வேண்டும் என்ற பொருளைத் தருகிறது. ஆனால் அது எவ்வளவு காலம் என்ற தெளிவு இல்லை. அந்தத் தெளிவை வரையறுக்கும் விதமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்தது. அரசமைப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதாகவும் அது இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் தற்போது அடித்திருக்கும் பல்டி, நீதித்துறையின் செயல்பாடுகள் சுதந்திரத்தன்மையோடுதான் உள்ளனவா என்ற சந்தேகத்தை வரவைக்கிறது. ‘நிர்வாகம் பலவீனமாக இருக்கும்போது மட்டுமே நீதிமன்றம் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது. ஒரு வலுவான அல்லது ஆதிக்க மனப்பான்மை கொண்ட நிர்வாகத்தின் முன்னிலையில் நீதிமன்றம் சரணடைகிறது’ என்ற How Democracies Die என்ற நூலின் கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக இருக்கிறது உச்சநீதிமன்றத்தின் இந்த பதில் கடிதம். இந்திய ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து, கூட்டாட்சிக்கு கேடு விளைவிக்கக்கூடிய இந்த மோசமான கருத்தை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 27112025
