நாத்திகம் பேசிய பார்ப்பன சிந்தனையாளர்கள் – கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை(19)
பார்ப்பனராக பிறந்தாலும் பார்ப்பனியத்தை மறுத்த இரண்டு நாத்திகர்கள் பற்றிய தகவல்களை இக்கட்டுரை விளக்குகிறது. ஒருவர் அஸ்ஸாமியப் பாடகர் ஜுபின் கார்க். அண்மையில் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற அவர் ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. இப்போது மரணத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மற்றொருவர் ஆந்திராவில் பார்ப்பனராக பிறந்து நாத்திகத்தை வாழ்வியலாக ஏற்று இயக்கம் நடத்திய கோரா (கோபராஜூ ராமசந்திர ராவ்). பெரியாருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் இணைந்து மாட்டுக்கறி-பன்றிகறி விழா நடத்தினார்கள்.
செப்டம்பர் 19, 2025 அன்று, கார்க் சிங்கப்பூரில் வடகிழக்கு இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றார். தனது 52 வயதில் இறந்தார். ஜான்ஸ் தீவின் கடற்கரையில் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தும்போது அவரை மரணம் அழைத்துக் கொண்டது. அசாம் அரசு செப்டம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாள் மாநில துக்கத்தை அறிவித்தது, செப்டம்பர் 23 அன்று 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கார்க் தகனம் செய்யப்பட்டது.
மேகாலயாவின் துராவில் உள்ள ஒரு அசாமிய ‘பார்ப்பன’ குடும்பத்தில் மோகினி மோஹோன் போர்தாகூர் மற்றும் இலி போர்தாகூர் ஆகியோருக்கு 1972 நவம்பர் 18 அன்று ஜுபின் கார்க் பிறந்தார்.
கார்க் தனது மூன்று வயதிலிருந்தே பாடத் தொடங்கினார். 40 பிற மொழிகளிலும் மற்றும் அவர் பாடியுள்ளார். 2021-ம் ஆண்டில், அசாம் மொழி திரைப்படமான பிரைட் பை சான்ஸ் திரைப்படத்தின் “தோமர் கோலா ஹவா” பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருதை ஜூபீன் கார்க் பெற்றார். 2009- ம் ஆண்டு திரைப்பட இசை இயக்குனருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருது எக்கோஸ் அஃப் சைலன்ஸ் (Echoes of Silence) என்ற திரைப்படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் மது அருந்துதல் பற்றியும் வெளிப்படையாகப் பேசினார் , ஒருமுறை அவரது சில பாடல்கள் அவர் குடிபோதையில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை என்று கூறினார். சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க நலம் விரும்பிகளின் அறிவுரை இருந்தபோதிலும், கார்க் தனது கருத்துக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினார். நீங்கள் எனக்கு ஆணையிட முடியாது; நான் யாருக்கும் எந்தத் தடையும் விதிக்கவில்லை, நீங்கள் என்னை ஆணையிட முடியாது”) என்ற வரிகளுக்கு பெயர் பெற்றவர்.
அசாமில் நடந்த சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம் -2019) எதிர்ப்புப் போராட்டங்களில் கலைஞராக பங்கேற்றார். அவரது “அரசியல் செய்யாதே, என் நண்பரே” என்ற பாடல் நாடு முழுவதும் ஒலித்தது. 2018 ஆம் ஆண்டில், கார்க், தடகள வீராங்கனை ஹிமா தாஸிடம் கோழி அல்லது புறா இறைச்சியை விட மாட்டிறைச்சியை உட்கொள்ளுமாறு பகிரங்கமாக அறிவுறுத்தினார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு மாட்டிறைச்சி அதிக பலத்தைப் பெற உதவும் என்று கூறினார். விளையாட்டுகளைப் பொறுத்தவரை, மதம், ஜாதி மற்றும் போன்ற காரணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தடகள செயல்திறனுக்கு என்ன நன்மை பயக்கும் என்பதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். இந்த அறிக்கை அசாமில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2019 ஆம் ஆண்டில், ஜுபின் கார்க், “நான் ஒரு ‘பிராமணன்’ ஆனால் எனது (பிராமணர்கள் அணியும் பூணூலை) அறுத்துவிட்டேன். நான் முன்பே அந்த நூலை அகற்றிவிட்டேன், இன்னும் அதை அணியவில்லை. பூணூல் அணியும் பிராமணர்களைக் கொல்ல வேண்டும்” என்று கூறியபோது கடும் எதிர்ப்புகள் வந்தன. ஆனால், பின்னர் அவர் அப்படி அர்த்தப்படுத்தவில்லை என்று தெளிவுபடுத்தினார். “நான் அதை நகைச்சுவையாகச் சொன்னேன், அதனால் மக்கள் அதை தவறாகப் புரிந்துகொண்டனர். நான் சொன்னது – உயர்ஜாதி-தாழ்ந்த ஜாதி என்ற முறையை ஒழிக்க வேண்டும். அந்தக் கருத்தை நான் நம்புகிறேன். ‘பிராமண’ சமூகத்தின் முன் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், கொலைசெய்வது எனது நோக்கம் அல்ல. ஆனால் பார்ப்பனிய மேலாதிக்க அடையாளங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
ஏப்ரல் 2024 இல், பிஹு இசை நிகழ்ச்சியின் போது, அவர் கூட்டத்தினரிடம் ‘கிருஷ்ணர்’ ஒரு கடவுள் அல்ல1 ஒரு மனிதர் என்று கூறினார். பின்னர் அவர் மஜூலி மாவட்ட சத்ர மகாசபாவிலிருந்து தடை செய்யப்பட்டார் .
அவரது பாடல்களில் நாத்திக கருத்தை மக்கள் மொழியில் பாடியுள்ளார்.
oi Dhormo Nuhou ( நான் மதம் அல்லாது என்ற பாடல்), Mur Monot Bhed Bhab Nai O Allah ( என் மனதில் வேறுபாடு இல்லை அல்லாஹ்), Ei Prithibi Ekhon Jagajibon (உயிரின் வட்டம் நிகழ்த்தியது தான் பூமி) கடவுளை அழைக்காதே வாழ்க்கையே ஒரு சுழற்சி ஆகிய பாடல்கள் (I am beyond religion / atheistic humanist) என்ற கருத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.
“ நான் மனிதன்; மனித சிந்தனைகள் மற்றும் மனித உணர்ச்சிகள் தான் என்னைப் பாதிக்கும்; ‘ஆன்மா’ என்ற சொல்லை நான் மதிக்கமாட்டேன்” என்று கூறினார்.
மனித நேயம், சமத்துவம், அறிவியல் கருத்துகளை அடிப்படையாக கொண்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். பாரம்பரிய இசை மரபுகளை நாட்டுப்புறப் பாடல்களை அதிகம் பாடினார். பல ஆண்டுகளாக அசாம் முழுவதும் 250 பழங்குடி சமூகங்களை இணைந்து 5000-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை கற்று பாதுகாத்து வந்தவர். ஜிசி மற்றும் முக்தி ஆல்பங்கள் ஜாதிக்கு எதிரான கருத்துகளை கருப்பொருளாக கொண்டது. புகழ்பெற்ற தன்மை மற்றும் மேற்கத்திய இசை பாணிகள் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். அசாமில் நாட்டுப்புற இசையின் வரையறை தொடர்பான விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக “நான் எனது பாடல்களை எனக்கு வசதியாக இருக்கும் விதத்தில் உருவாக்கினேன்; கலை என்பது சுதந்திரத்தைப் பற்றியது” என்றார். அசாம் மொழி திரைப்படங்களை எழுதி இயக்கி நடித்தார் அவரது சினிமா கருப்பொருள் அசாமிய அடையாளம் இளைஞர் லட்சியவாதம் சமூக மாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
கார்க்கின் மறைவு இந்தியா முழுவதும் பரவலான அஞ்சலிகளைத் தூண்டியது. பிரதமர் நரேந்திர மோடி , எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஏ.ஆர்.ஹ்மான் உள்ளிட்ட பல உயர்மட்ட நபர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.
குவஹாத்தியில் ஒரு நினைவுச்சின்னத்துடன் கூடுதலாக, அவரது மரபை மதிக்கும் வகையில் ஜோர்ஹாட்டில் ஒரு நினைவுச்சின்னம் கட்டும் திட்டத்தை அசாம் அரசு அறிவித்தது.
2019 ஆம் ஆண்டு குவஹாத்தியில் உள்ள பி. போரூவா கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியில், கார்க் தனது “மாயாபினி ராதிர் புகுத்” பாடலை தான் இறக்கும் போது இசைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, இந்தப் பாடல் அவரது இறுதிச் சடங்கில் மட்டுமல்லாமல், அசாம் முழுவதும், வீடுகளிலும், பொது நிகழ்வுகளிலும் பரவலாக நிகழ்த்தப்பட்டு, நினைவேந்தல் இரங்கலாக மாறியது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் துக்கத்தை வெளிப்படுத்தினார், கார்க்கை தனது “அன்பான சகோதரர்” என்று வர்ணித்து, அவரது “இனிய குரல் மற்றும் அடக்க முடியாத மனப்பான்மையை” பாராட்டினார், அவரது பாடல்கள் “என்றென்றும் அழியாதவை” என்று கூறினார்.
இசைத்துறையில் ஜூபீன் கார்க் ஏற்படுத்திய அழியாத முத்திரை மற்றும் ஆழமான தாக்கம் குறித்து தனது இரங்கல் பதிவில் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
————————————————————————————————————————
கோரா: (கோபராஜூ ராமசந்திரச் ராவ் )1902 ஆந்திராவில் நெல்லூரில் பிறந்தார். அவர் இந்தியாவின் மிக முக்கியமான நாத்திக இயக்கத் தலைவர்.
இந்தியாவின் முதல் நாத்திக மையத்தை ” Atheist Centre” 1940-ல் தொடங்கினார். அவரது இணையர் லலிதாவுடன் இணைந்தே சமத்துவம், ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை கருத்துக்களை முன்னெடுத்தார்.
மனிதன் தான் தன் வாழ்க்கையின் ‘கடவுள்’ என்பது அவரது முக்கியக் கருத்து. கடவுளையும், மதத்தையும் மறுத்தார். ஆனால் அது வெறுப்பால் அல்ல! நாத்திக சிந்தனை நேர்மறையானது. அது மனிதம் மற்றும் பகுத்தறிவை உள்ளடக்கியது என்பதே அவர் கருத்து.
“கடவுள் இல்லாமல் நல்ல மனிதராக இருக்க முடியும்” மதம் மக்கள் மனதில் பயத்தையும், அடிமைத்தனத்தையும் உருவாக்குகிறது. “மதம் மனிதனை பிரிக்கிறது, ஆனால் நாத்திகம் மனிதனை இணைக்கிறது”.
ஜாதி ஒழிப்பு, தலித், பெண்கள், விவசாயிகள் மத்தியில் சமத்துவக் கருத்துக்களை பரப்பினார்.
* மதமற்ற கல்வி; குழந்தைகளுக்கு அறிவியல் சிந்தனைகளைக் கற்பித்தல், “செக்யூலர் மேரேஜ்” சடங்கு, மதங்கள், ஜாதி கடந்த திருமணம் (மதமற்ற திருமணம்) ஆகியவற்றை அறிமுகம் செய்தவர்.
மாட்டுக்கறி உணவைப் பரப்ப வேண்டும் என்பதில் பெரியாருக்கும் கோராவுக்கும் ஒரே கருத்து இருந்தது. சென்னை பெரியார் திடலில் மாட்டுக்கறி விழாவில் பெரியாரும் கோராவும் பங்கேற்றனர்.
* ஐக்கிய நாடுகள் (UNO) வரை நாத்திகம் குறித்த உரைகளை நிகழ்த்திய இந்தியரவார்.அதே நேரத்தில் காந்தியாரின் எளிமையை வற்புறுத்தினார்.
அவரை “The Gandhi of Atheism in India” என்று வெளிநாட்டு பத்திரிகைகள் குறிப்பிட்டன. பெரியாரோடும் திராவிடர் கழகத்தினரோடும் நெருக்கமாக இருந்தார்
அறிவியல் சிந்தனை மதத்தை அறிவியல் முறையில் விமர்சித்தார்.பகுத்தறிவு, தர்க்கம் மூலம் மூட நம்பிக்கைகளை எதிர்த்தார்.
கோரா, பெரியாரை ஒருமுறை விஜயவாடா “Atheist Centre”-க்கு அழைத்தபோது, பெரியார் கூறினார்: “கடவுளை மறுப்பது என்பது வெறும் கருத்தியல் வாதமல்ல, அது மனிதனை விடுவிக்கும் புரட்சி.” அதற்கு கோரா பதிலளித்தார்: “அந்த புரட்சிக்கு நாம் இருவரும் வேறு மாநிலங்களில் இருந்தாலும் ஒரே இரத்தம்.”
இது இருவரின் நட்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.
“Positive Atheism” என்றால் “கடவுளை மறுப்பது மட்டும் அல்ல, மனிதனை நம்பி நல்லதைக் கட்டியெழுப்புவது.” அதாவது, இது வெறும் ‘கடவுள் இல்லை’ என்ற எதிர்மறை நிலைப்பாடு அல்ல. இது ‘மனிதனே தனது வாழ்க்கையின் அர்த்தம்’ என்ற நேர்மறையான சிந்தனை என்பது கோராவின் கருத்து. விஜயவாடாவில் நடந்த நாத்திகர் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 16102025
