மற்றுமொரு ஜனநாயகப் படுகொலை!

பீகாரில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என ஆளும் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க எண்ணமில்லாதவர்கள் 65 லட்சம் பேரை நீக்கிய கையோடு தமிழ்நாடு விரைந்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்குப் பெயர் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.). வாக்காளர் பட்டியலில் ஆட்களை குறைப்பதோ, சேர்ப்பதோ அரசியல் கட்சிகளின் பிரச்னை, தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத அமைப்புகளுக்கு அதைப்பற்றி என்ன கவலை என்று ஒதுங்கிவிட முடியாது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.

நீதித்துறையைக் கைப்பற்றுதல், அமலாக்கத்துறையைத் தன்வயப்படுத்துதல், எதிர்க்கட்சிகளை அழித்து அரசியல்வாதிகளை – சட்டமன்ற உறுப்பினர்களை – மக்களவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் என்பன போன்ற பாஜக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்குகள் இப்போது, ‘மக்களைத் தகுதிநீக்கம் செய்தல்’ என்ற இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இந்தத் திருநாட்டில் வாக்காளர் பட்டியல் ஒன்றைத் தவிர வேறெங்கும் அனைவரும் சமமானவர்கள் இல்லை. சேரியை விட ஊர் மேலானது, ஊரை விட அக்ரஹாரம் மேலானது என்ற மோசமான வருணாசிரம கட்டமைப்புக்குள்தான் இந்தியச் சமூகம் சுழன்று கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் அக்ரஹாரத்தில் இருந்தவர்களுக்கும், ஊர் தெருவுக்குள் இருந்த குறிப்பிட்ட சில செல்வந்தர்களுக்கும் மட்டும்தான் வாக்குரிமை இருந்தது. அதிலும் கூட 30% மக்கள் வாக்களித்தாலே ஆச்சரியம்தான்.

வட்டமேசை மாநாட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் அனைவருக்குமான வாக்குரிமையை வலியுறுத்தியதால்தான், 1950-இல் இந்தியாவில் எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை முதன்முறையாக கிடைத்தது. குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் இந்தியா முழுவதும் வாக்குரிமை பெற்றது அப்போதுதான்.

சென்னை மாகாணத்தில் மட்டும் 04.7.1921-இல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இன்றைய ஆளுநர்களைப் போலவே அன்றைய ஆளுநர்களாலும் மசோதா கிடப்பில் கிடந்து, ஒருவழியாக 1926-இல் சட்டமானது. ஆனாலும் அனைத்து பெண்களுக்குமான வாக்குரிமை அப்போது கிடைத்துவிடவில்லை.

ஆக, 1937-க்கு முன்பிருந்த நிலைமையை முற்றுமுழுதாக அடைந்துவிட முடியாது என்றபோதிலும், ஆர்.எஸ்.எஸ்-ஸின் 5 எதிரிகளில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை மட்டும் பெரிய அளவில் குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான் எஸ்.ஐ.ஆர். முயற்சி. பா.ஜ.க.வுக்கு குறுகிய காலப் பலனளிக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சி வாக்குகளை நீக்குவதும் இதில் அடங்கும். ஒட்டுமொத்தத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மற்றொரு வடிவமாகத்தான் இந்த எஸ்.ஐ.ஆர். வந்திருக்கிறது. தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் நவம்பர் 4-ஆம் தேதி எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

தற்போது உள்ள வாக்காளர் பட்டியல் முழுமையாகக் கைவிடப்பட்டு, புதிய கணக்கெடுப்புக்காக படிவம் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொடுக்கப்படும். சரியாக ஒரு மாதம் மட்டுமே அவகாசம். 6.36 கோடி வாக்காளர்களுக்கு ஒரு மாதத்திற்குள் படிவத்தை கொண்டு சேர்த்து, திரும்பப் பெற வேண்டும். பிறந்த தேதி, ஆதார் எண், கைபேசி எண், தந்தை/பாதுகாவலரின் பெயர், தாய் மற்றும் கணவர்/மனைவியின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன.

மேலும், 23 ஆண்டுகளுக்கு முன்பு (2002-இல்) நடந்த முந்தைய சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் இருந்த வாக்காளரின் உறவினர் பெயர் மற்றும் உறவு முறை பற்றிய தகவலும் கூடுதலாகக் கேட்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த உறவினர் இறந்திருந்தால், இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு படிவம் மட்டும்தான். க்யூ.ஆர். கோடு இருப்பதால் அதை பிரிண்ட் செய்தோ, ஜெராக்ஸ் எடுத்தோ மற்றவர் பயன்படுத்த முடியாது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும்போது, வாக்காளர் ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பது கட்டாயம். அவர் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை சென்று சரி பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் வரும்போது வாக்காளர் இல்லை என்றால், அவருடைய பெயர் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. கூலி வேலைகளுக்கும் மற்ற வேலைகளுக்கும் செல்வோர் இதற்கான விடுமுறை எடுத்துக்கொண்டு காத்திருக்க வேண்டும்.

மற்ற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களிலும் வேலைக்கு சென்றோர் அவசர அவசரமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்கள் தங்கள் வாக்காளர் உரிமையை தக்கவைக்க வாய்ப்பே இல்லை. எனவே இது வாக்காளர் சிறப்புத் திருத்தம் இல்லை, சிறப்பு நீக்கம் என்றுதான் கருத வேண்டியுள்ளது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.

இந்த வாக்காளர் சிறப்பு நீக்கத்தை முறியடிக்க வேண்டியது அரசியல் கடமை மட்டுமல்ல, சமூகக் கடமையும் கூட. ஏற்கெனவே நாம் பெற்றிருக்கிற ‘ஒரு மனிதருக்கு ஒரு வாக்கு’ என்ற சம உரிமையைத்தக்க வைப்பதற்கான போராட்டமும் கூட.

பெரியார்முழக்கம்இதழ்06112025

You may also like...