மத உரிமையில் அரசு தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்
மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எந்த மதத்தில் இருப்பது என்பது தனி மனித உரிமை. அதில் அரசு தலையிட உரிமை இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உ.பி உள்ளிட்ட பல மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நீதிபதி ஜே.பட்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு தனி மனித சுதந்திரத்தை அடிப்படை உரிமையாகவே வெளிப்படுத்துகிறது என்று கூறிய நீதிபதிகள், மனசாட்சி உரிமை என்பது தனி மனிதரின் சிந்தனை உரிமை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.
அதேபோல் திருமணத்தில் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமையும் தனி மனித உரிமை என்றும், யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பதில் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை என்றும், அது தனி நபர் உரிமையைச் சார்ந்தது என்றும் தீர்ப்பளித்துள்ளது. திருமணம் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தனி மனித உரிமையின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 30102025
