அறிவியலை பாடமாக அல்ல வாழ்வியலாக ஏற்க வேண்டும்! ‘நாத்திகம்’ நூலை வெளியிட்டு மருத்துவர் எழிலன் பேச்சு

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கொளத்தூரில் கழகப் பெண்களே தலைமையேற்று நடத்திய நாத்திகர் விழாவை ஒட்டி கடந்த 5 மாதங்களுக்கு, மேல் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் எழுதிய ‘கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை’ தொடர் கட்டுரைகள் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் முயற்சியில், ‘நாத்திகம் – சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்’ நூலாக தொகுக்கப்பட்டு, 12.11.2025 அன்று சென்னை முற்போக்கு புத்தகக் காட்சியில், கழகத்தின் நிமிர்வோம் பதிப்பகம் அரங்கு எண் 22-இல் வெளியிடப்பட்டது. ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் நூலை வெளியிட, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன் பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்டுப் பேசிய எழிலன் நாகநாதன், “திமுக இளைஞர் அணி சார்பாக அறிவுத் திருவிழா சிறப்புற நடைபெற்று வருகிறது. கருத்தரங்கம், கண்காட்சி என பல்வேறு முற்போக்கு கருத்தியல் கொண்ட தோழர்கள் தங்களின் படைப்புகளை வைத்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் எழுதியுள்ள ‘நாத்திகம் – சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்’ நூலை இங்கு வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடிப்படையில் திராவிடர் இயக்கத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. பெரும் மாநாடு நடத்துவார்கள், அந்த மாநாட்டின் பேச்சுக்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு அடுத்த மாநாட்டில் நூலாக வெளியிடப்படும். மக்களிடம் கொடுப்பார்கள். அதே திராவிடர் இயக்க தொடர்ச்சியாக பெண்கள் பகுத்தறிவு பிரச்சாரத்தையும், மாபெரும் பகுத்தறிவுப் பேரணியும், கருத்தரங்குகளில் பேசிய பேச்சுக்கள் எல்லாமே அழகாக எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது. எப்படி சமூகத்தின் அடிப்படையில் நாத்திகம் பேசப்பட்டதோ, பிறகு அறிவியல் அடிப்படையில் நாத்திகம் பேசுவது அவசியமானது. நாம் அறிவியலை படிப்போம், ஆனால் மக்களிடத்தில் அறிவியல் விழிப்புணர்வு இருக்காது. இந்த காலச்சூழலில், நவீன உலகத்தில் குளோனிங் முறை வந்துவிட்டது; ஜீன் எடிட்டிங் வந்துவிட்டது; மரபணுக்கள் ரீதியாக கருவுற்றப் பெண்ணே, மரபணு நோய்களை சிகிக்சை மூலமாக குழந்தைக்கு நீக்க முடியும்.

இப்படி ஒருபக்கம் அறிவியல் வளர்ந்து வந்தாலும் அறிவியல் விழிப்புணர்வு மக்களிடம் வளர்ந்திருக்கிறதா? …. அறிவியல் வளர்ச்சியில் உண்டான அனைத்து கண்டுபிடிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதாவது அறிவியல் வளர்ச்சியால் உண்டான சவுகரியத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு வாழ்வியலில் மட்டும் அதை ஏற்றுக்கொளாமல் “Split Personlality” வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். “Split Personlality” வாழ்க்கை என்பது என்னோட வாழ்க்கையின் சவுகரியத்துக்கு அறிவியல் வேண்டும், ஆனால் வாழ்வியலாக பெறமாட்டேன் என்பதே இந்த நூலை படிக்கும்போது வாழ்வியலாக அறிவியலை ஏற்றுக்கொண்டு, பகுத்தறிவை நாம் பெற்றுவிட்டால் மனிதர்களை மனிதர்களாக பார்க்கிற பார்வை வரும். மனிதன் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற நிலை வரும், மத்தின் போரால், ஜாதியின் போரால் வெறிபிடித்த மனநிலை அகலும்.

நாத்திகம் என்பது சமத்துவ வாழ்க்கைக்கு எப்படி அடித்தளமானது என்பதை பல்வேறு சான்றுகளுடன் விடுதலை இராசேந்திரன் தொகுத்துள்ளார். முக்கியமாக வேத காலத்தில் இருந்து புத்தர் உருவாக்கிய பகுத்தறிவுக்களம் எப்படி அமைந்தது, அயோத்திதாச பண்டிதர் வழியாக பல்வேறு நாத்திகக் கருத்துக்களும், பிறகு தமிழ்நாட்டில் லௌகீக இயக்கம் எப்படி பகுத்தறிவுச் சிந்தனைகளை கொண்டு சென்றது, பிறகு தந்தை பெரியார் எப்படி சமூகப் புரட்சியில் நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு என்று இல்லாமல் அறிவியல் பார்வையில் மக்கள் இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் பேசிய பல்வேறு சுவாரசியமான தகவல்கள் இந்நூலில் உள்ளது. தோழர்கள் அனைவரும் படித்து உளமாற ஏற்றுக்கொள்ள வேண்டும். நவீனமயமாதலின் விளைவாக இன்றைக்கு பெண்கள் பகுத்தறிவுடன் சிந்திக்கின்றனர். இயக்கம் சார்ந்த நடைமுறை இல்லாமல் வாழ்வியலாக சடங்குகளை தகர்த்து எறிகிறார்கள். சமூகப் புரட்சி செய்து வருகிறார்கள், ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிற புரட்சி வெளியில் வராது. புரட்சியின் பயன்கள் கண்டு, சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அதனடிப்படையில் இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன் பேசுகையில் மிகச்சிறந்த நாத்திக வழியில் வந்த குடும்பத்தைச் சார்ந்த டாக்டர் எழிலன் அவர்கள் இந்நூலை வெளியிடுவதும் நான் பெற்றுக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், தாம்பரம் பகுதி அமைப்பாளர் அருண் கோமதி, திருப்பூர் பிரசாந்த், ஊடகவியலாளர் பிரகாசு மற்றும் கழகத் தோழர் பாரி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

பெரியார் முழக்கம் இதழ் 20112025

You may also like...