ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் சரியா?- கொளத்தூர் மணி
பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஜீவானந்தம் (ஜீவா) ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பெரியார் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு…
கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த புதிய தோழர்களுக்கான பயிலரங்கின் நிறைவில் 28.9.2025 அன்று மாலை நடந்த ‘அய்யம் களைதல்’ நிகழ்வில் தோழர் பிரவீன் சுப்ரமணியன் எனும் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் “தோழர் ஜீவா எழுதிய ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் வைத்துள்ள விமர்சனங்களைப் பற்றித் தெளிவுபடுத்துமாறு கோரினார். நான் அந்த நூலினைப் பற்றி நூலின் செய்திகளைப் பற்றி நூல் ஆசிரியரைப் பற்றி முன்வைத்த பல செய்திகள் ஜீவா பற்றாளர்களைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கி விட்டது.
ஆவேசமான எதிர்வினைகள் சமூக ஊடகங்களில் கொட்டப்பட்டன. பொழியப்பட்ட வசை மொழிகள் எளிய தோழர்களிடமிருந்து மட்டுமல்ல; முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தும் வந்தன.
சீமானோடு ஒப்பிட்டு விட்டீர்களே என்ற சொற்கள் எல்லா பதிவுகளிலும் தவறாமல் காணப்பட்டன. எவர் ஒருவராலும் சகித்துக் கொள்ள முடியாத ‘உதாரண புருஷராக’ சீமான் திகழ்கிறார் என்ற வெளிப்பாடு மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருந்தது. மற்றவை அனைத்தும் தோழர் ஜீவா அவர்கள் மீது பதிவர்கள் கொண்டிருந்த அதீத மிகைமதிப்பீட்டை மட்டுமே வெளிப்படுத்துவதாக இருந்தன. எனவே அவற்றை வெளிப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் மட்டுமே நான் இப்போது எழுத நேரிட்டுள்ளது.
தோழர் யமுனா ராஜேந்திரன் ஒரு கேள்வியை எழுப்புகிறார். தி.க ஏன் ஐந்து பிரிவுகளாக இருக்கிறது என்பதை பொது மேடையில் மணி விளக்குவாரா? என்று “திணறடிக்கும்” ஒரு கேள்வியை எழுப்புகிறார். தாஷ்கண்டில் பொதுவுடைமை கட்சி கட்டப்பட்ட காலத்திலிருந்து “தளர்வு காணாத ஒற்றுமை உணர்வோடு” செயல்பட்டு வருகிறது என்ற நம்பிக்கையுடன் அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் நோக்கத்துடன் நான் இதை எழுதவில்லை.
காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகளைத் தோற்கடிக்க வேண்டுமானால் அந்தக் கட்சிக்குள் ஊடுருவியுள்ள சோஷலிஸ்ட்களுடன் மார்க்சியர்கள் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. அது “ வரலாற்றை இயங்கியல் ரீதியாக பார்ப்பவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்” என்ற மார்க்சிய சொல்லாடல்களுடன் பாடம் எடுக்கும் தோழர்களுக்காக இதை எழுதவில்லை. இந்த தத்துவ சொல்லாடல்கள் இல்லாமல் இதே கருத்தை பெரியார் மக்கள் மொழியில் சொன்னார்.
அதாவது “ ஜஸ்டிஸ் கட்சியுடன் விமர்சனத்தோடு இணக்கமாக செயல்படுவது” என்று கூறினார். பார்ப்பன பனியா கட்சியான காங்கிரசுக்கு முற்போக்கு மூலாம் பூசுவது வரலாற்று இயங்கியல் என்றும், பார்ப்பன எதிர்ப்பையும் சமூக நீதியையும் பேசிய நீதிக்கட்சியை விமர்சனத்துடன் ஆதரிப்பது முதலாளித்துவப் பார்வை என்றும் குற்றம் சாட்டும் தோழர்களுக்கு சமாதானம் கூறுவதற்காகவும் நான் இதை எழுதவில்லை.
இந்திய பொதுவுடைமைக் கட்சி குறித்த திறனாய்வும் நமது நோக்கம் அல்ல! அது இன்றைய சூழலுக்கு தேவைப்பட்டதும் அல்ல!
“ஈரோட்டுப் பாதை சரியா? என்ற நூல் குறித்த விமர்சனங்களை மட்டுமே நான் எழுத முற்படுகிறேன். 1948 பிப்ரவரி மாதம் வரை தான் ‘ஈவேரா’ பெரியார் மீது கொண்டுள்ள விமர்சனங்களை முன்வைத்து அவர் எழுதியள்ள நூல்தான் ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூல். பல்வேறு பதிப்புகளாக தொடர்ந்து அது பதிப்பிக்கப்பட்டு வருகிறது. 2025 ஏப்ரலில் கூட அச்சிடப்பட்டு தொடர்ந்து சுழற்சியில் இருந்து வருகிறது.
அதில் பெரியார் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களுக்கும் (பழிசுமத்தல் என்ற சொல்லைக் கூட தவிர்க்கிறேன்). தோழர் ஜீவானந்தம் மீதான மிகைமதிப்பீட்டுக்கும் பதில் அளிப்பதே எனது நோக்கம்.
நூலில் தோழர் ஜீவா எழுதியுள்ளவற்றுள் மாதிரிக்கான சில “நாகரீக” சொற்றொடர்கள் கீழே:
ஜஸ்டிஸ் கட்சி உடைய குற்றவாளித்தனத்தை மறைத்தார். பொதுவுடைமை இயக்கமல்ல என்று அரசாங்கத்தை நம்பச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிற, எழுதுகிற அளவுக்குச் சாக்கடையில் சறுக்கி விழுந்தார். தான் உயிரோடு இருக்க (யாருக்காக?) பிற்போக்குக் கும்பல்களின் யோசனைப்படி ஈவெரா யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.”
“சென்னையில் ‘நால்வர் சந்திப்பு’ நடந்தது (1-8- 1927). அடுத்த வார குடிஅரசில் வெளியான பிராமணியச் சடங்கை விலக்கியவர் பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன்வரிசையில் இடம் பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரர்களோடு இணைந்து, சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி, காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாகப் பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா.”
“1935 மார்ச் 10ஆம் நாள் ’குடிஅரசு’ மூலம் மானங்கெட்டத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.”
“1942 வாக்கில் ப.ஜீவானந்தம் நம் ஆள்தான் என்றும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமக்கும் வித்தியாசம் இல்லை என்றும் ….. …. …. வாலிபர்களைத் திராவிடர் கழகம் வலை வீசிப் பிடிக்க முயன்றது.”
“இந்தச் சந்தர்ப்பத்தில் மாகாண சட்டசபை தேர்தல் வந்தது. என்னைப் போன்றவர்களுக்கும் கூட ஓட்டுப் போடாமல் நடுநிலை வகித்தனர் திராவிடர் கழகத்தார்.”
“இங்கிலாந்தில் லான்ஸ்பரி என்ற பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஆற்றிய உரைக்கு விடை கூறும் முறையில் ஈவெரா பேச சந்தர்ப்பம் கிடைத்தது. தோழர் சக்லத்வாலா எழுதிக் கொடுத்த பிரசங்கத்தை ஈவெரா படித்தார்.”
“யார்க்ஷயர் தொழிலாளர்களே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும் கொடிகளையும் நம்பாமல் மனித சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத்தில் தொழிலாளிகளின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள்… … …. எனக் கம்யூனிஸ்ட் சக்லத்வாலாவோடு சேர்ந்த போது ஈவெரா பார்ப்பன ஆதிக்கத்தையும் பனியா சுரண்டலையும் மறந்துவிட்டார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.”
“ராஜாஜி இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினார். வெறும் வாயையே மென்று கொண்டிருந்த கிழவிக்கு ஒரு வாய் அவல் கிடைத்தது. ஈவெரா சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தார். கட்டாய இந்தியை எதிர்த்து காங்கிரஸ் மந்திரி சபைக்கு ஓரளவுக்குத் தொந்தரவு கொடுக்க முடிந்தது. ….. …… …. சோஷலிஸ்ட்களாகிய நாங்கள், இந்தி எதிர்ப்பு மேல்பூச்சு, (ராஜாஜியின்) மந்திரி சபை ஒழிப்புதான் உள்நோக்கம் என்பதைக் கண்டதும், இந்திக் கிளர்ச்சியின் நோக்கத்தை எதிர்த்தோம்.”
“சமூகப் புரட்சியில் தான் சமூக அடிமைத்தனங்கள், பார்ப்பான் _பார்ப்பனரல்லாதவர்; உயர்ந்தவன் – தாழ்த்தப்பட்டவன்; ஆரியன் – திராவிடன் என்ற கொடுமைகளும் இன்னும் மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் ஏற்பட்ட கொடுமைகளும் சுரண்டல்களும் அறவே ஒழியும். சோவியத் யூனியன் இதற்கு எடுத்துக்காட்டு. சோவியத் வாழ்வில் தான் இனக்கொடுமை, மதக் கொடுமை, பணக்கொடுமை ஆகிவை ஒழிந்திருக்கின்றன.”
இவ்வாறான ‘பொன்மொழிகள்’ இன்னும் ஏராளம் உள்ளன. தொடர்ந்து அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விளக்குவோம்.
நூல் முழுவதும் ‘ஈவெரா, ஈவெரா’ என்ற சுட்டலை மட்டும்தான் காணமுடியும். பின் ஏன் இதே மொழியில் பேசும் எச்.ராஜாவோடு பொருத்தாமல் சீமானோடு பொருத்தினீர்கள் என்ற புதிய குற்றச்சாட்டை “தோழர்கள்” புதிதாக எழுப்பவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்.
பெரியார் முழக்கம் இதழ் 23102025
