தூத்துக்குடியில் ஜாதி எதிர்ப்பு பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட க் கழகம் சார்பில் தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவை குளம் முதன்மை சாலையில் 23.09.2025 அன்று மாலை 05.30 மணியளவில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு “மனிதம் நமது அடையாளம் – ஜாதி நமக்கு அவமானம் ” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகப் பொருளாளர் கே. சந்திரசேகர் தலைமை வகித்தார். வடக்கு சோட்டையன் தோப்பு ச.கா.பால சுப்பிரமணியன், ஆழ்வை ஒன்றிய கழகச் செயலாளர் ஆழ்வை இரா.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச.ரவிசங்கர் வரவேற்புரையாற்றினார்.

நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன், தென்காசி மாவட்ட தலைவர் குறும்பை அரு.மாசிலாமணி, தென்காசி செந்தமிழ், பாலசுப்பிரமணியன், மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் செய்யது சம்சுதீன், சமம் குடிமக்கள் இயக்க மாவட்டப் பொறுப்பாளர் ஜாண்.பி.ராயர், வி.சி.க. மகேஷ், தி.மு.க. ஒட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர், இளம்பேச்சாளர் இள.கார்த்திக், மனித நேய மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் முகமது ஜான், தமிழர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் அர்ச்சுணன், வி. சி.க. வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் செந். அர்ஜுன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கா.மை. அகமது இக்பால், கிருத்துவ வாழ்வுரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பணி சுந்தரிமைந்தன், வி.சி.க. முன்னாள் மண்டலச் செயலாளர் சொ.சு. தமிழினியன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பேசுகையில் “ஜாதியை குடி அடையாளம், குடிப் பெருமை என பேசி வருகிறார்கள். குடிதான் தமிழகளின் அடையாளம் என தமிழ்த் தேசியம் எனும் பெயரில் சனாதனவாதிகளிடம் மண்டியிடும் தமிழ்த் தேசியர்கள் பேசி வருகிறார்கள். ஜாதி இழிவானது, அவமானகரமானது என திராவிடர் இயக்கம் ஒரு நூற்றாண்டு போராடி ஜாதிச் சங்கத் தலைவர்களே தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதியை போடுவதை அவமானமாக கருதும் இவ்வேளையில், ஜாதியை பெருமை என தற்போது சில அறிவிளிகள் தன் பெயருக்குப் பின்னால் ஜாதியை போடத் தொடங்கியுள்ளனர்.

ஆண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயர் போடத் தயங்கும் போது, (HCL) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ரோகிணி தன்னை ரோகிணி நாடார் என போட்டுக்கொள்கிற அளவிற்கு மீண்டும் சனாதனம் தலைதூக்குகிறது. இழிவை இழிவு என்று கூட அறிவது தமிழர்கள் சிலர் ஜாதி பட்டம் போட்டுக்கொள்கிறார்கள். குடிப் பெருமையின் வீரம் தான் ஜாதி பெண்ணை இன்னொரு ஜாதி ஆண் திருமணம் செய்தால் அல்லது காதலித்தால் ஆணயோ பெண்ணையோ கொலை செய்வதில் தான் தான் இருக்கிறது என கொலை செய்கிறார்கள். அந்த கொலைகாரர்களை வீரர்களாக தமிழ் தேசியம் பேசும் தலைவர்கள் பாராட்டுவதும் மனித குலத்திற்கு அவமானம். இங்கொன்றும் அங்கொன்றும் என நடைபெறும் ஜாதியக் கொடுமை, தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக அமையும் .

கல்வியால் நாம் பெற்ற முன்னேற்றம் இந்த ஜாதிப் பெருமையால் கொலைக் கைதியாக்க பயன்பெறுமே தவிர அறிவியலில் ஆற்றலில் வளர்ச்சி பெற முடியாமல் போகும். நமக்கு மனிதமே அடையாளம்; ஜாதி அவமானம் என தமிழர்கள் உணர வேண்டும் ” என்று சிறப்புரையாற்றினார். சா.த பிரபாகரன் நன்றி கூறினார். நிகழ்வில் மனித நேய மக்கள் முன்னேற்றக்கழகம், விசிக, மனித நேய மக்கள் கட்சி மற்றும் கழகத் தோழர்கள் தோழமை அமைப்புத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்பகுதியை சார்ந்த பாலன் தானாக முன் வந்து நிகழ்விடத்தை சுத்தம் செய்து தந்ததோடு, அடுக்கு மாடி குடியிருப்பு மக்களை பொதுக்கூட்டம் கேட்கவும் ஏற்பாடு செய்து தந்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 30102025

You may also like...