ஆணவப் படுகொலை; சில வரலாற்றுத் தகவல்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி கே.என் பாஷா தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளார். ஆணவப் படுகொலைகள் குறித்து பல வரலாற்றுத் தகவல்களை தருகிறது இக்கட்டுரை…

தீண்டாமைக் குற்றச் சட்டம் (Untouchability offences act, 1955) என்னும் சட்டம்தான் தற்போதைய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கான முன்னோடி. முந்தைய சட்டத்தின் போதாமைகளால் உருவானதுதான் பட்டியல் ஜாதியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம். இளையபெருமாள் ஆணையத்தை அடிப்படையாகக் கொண்டு, இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு படுகொலை ஆணவப் படுகொலையா இல்லையா என்பதை வேறுபடுத்தி, அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளத் தனிச்சட்டம் தேவையாக இருக்கிறது. இத்தகைய தனிச்சட்டங்கள் குறித்து நீதிமன்றங்களின் பார்வையை கணக்கில் கொண்டால் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளலாம்.

உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டேதான் இருந்திருக்கிறது. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அளித்த மூன்று வழக்குகளின் தீர்ப்புகளில் இவை வலியுறுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். உ.பி லதா சிங் வழக்கு’, ‘டெல்லி -பசுவான் தாஸ் வழக்கு’, தமிழ்நாட்டில் ‘ஆறுமுக சர்வை வழக்கு’ ஆகிய மூன்று வழக்குகளையும் ஆணவக் கொலை வழக்குகளாக கருதியே இந்த தீர்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளின் ஜாதி மறுப்புத் திருமணத்தில் விருப்பமில்லை எனில், அவர்களால் அதிகபட்சம் தங்கள் மகள் அல்லது மகளுடனான சமூக உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களை மிரட்டவோ, வன்முறைச் செயல்களைச் செய்யவோ, தூண்டவோ எவ்வித அதிகாரமும் இல்லை என்று அழுத்தந்திருத்தமாக லதாசிங் வழக்கின் நீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பகவான் தாஸ் வழக்கில்தான் ஆணவக் கொலையை ‘அரிதிலும் அரிதான வழக்காக’ கருதி, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தூக்குத் தண்டனைத் தீர்ப்பின் கடைசி வரிதான், ஜாதிச் சங்கங்களுக்கும் அடக்கி ஒடுக்க நினைக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கான எச்சரிக்கை மணியாக ஒலித்தது. ‘ஆணவக் கொலைகளை செய்யத் துணியும், திட்டமிடும் எந்த ஒரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் உங்களுக்கு தூக்கு மேடை காத்திருக்கிறது” என்பதுதான் அந்த வரி.

பகவான் வழக்குக்குப் பிறகு ஆறுமுக சேர்வை வழக்கிலும், காவல் துறைக்கான அறிவுறுத்தல்களைக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழிகாட்டல்களை அடிப்படையாக வைத்துத்தான், ஜாதி மறுப்புத் திருமணங்களைப் பிரித்துவைக்கும் ‘காப்’ போன்ற பஞ்சாயத்துகளுக்கு எதிரான நடைமுறைகளைப் பற்றி சட்ட ஆணையத்திடம் நாடாளுமன்றம் பரிந்துரைகளைக் கேட்டது. இந்தியச் சட்ட ஆணையம் தனது அறிக்கை எண் 242-இல் நாம் பேசிக்கொண்டிருக்கும் தனிச்சட்ட முறைகளுக்கான வரைவை அப்போதே அளித்துவிட்டது. சட்ட ஆணையத்தால், 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘சட்டவிரோதத் தலையிடுதல் (திருமணச் சுதந்திரத்தில் தலையிடுதல்) தடுப்புச் சட்டம்’ இன்றுவரை சட்டம் ஆக்கப்படாமல் கிடப்பில் இருக்கிறது. நீதியரசர் பி.வி.ரெட்டி தலைமையிலான ஆணையம், தற்போதைய சட்டங்களில் போதாமைகள் இருப்பதாகவும், இத்தகைய தனிச்சட்டம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கிறது. எந்த அரசாக இருந்தாலும், ஜாதி வாக்குவங்கிகளுக்காக இந்தச் சட்டத்தை நிறைவேற்றத் தயங்குவதும், தவறுவதும் சாபமாக இருக்கிறது. என்பதுதான் செயல்பாட்டாளர்களின் கூட்டு வேதனைக் குரல்.
இந்நிலையில் 2016-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் ராமசுப்ரமணியம் அளித்த தீர்ப்பில், ஆணவக்கொலை அல்லது ஆணவக் கொலை முயற்சிகள் பதிவாகும் பட்சத்தில், காவல்துறை எப்படிச் செயல்பட வேண்டும், ஆணவக் கொலையைத் தடுக்கும் வழிமுறைகளையும், கட்டமைப்பையும் கொடுத்திருக்கிறார். அதேபோலத் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நடைபெறுவதில்லை என்னும் ஆட்சியாளர்களின் கூற்றைப் பொய்யாக்கும்படி 47 ஆணவக் கொலைகளைத் தேதிவாரியாகத் தனது தீர்ப்பில் பட்டியலிட்டுக் காட்டினார்.

உச்சநீதிமன்றமும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான, ஆணவக் ஆணவக் கொலைகளைக் கையாள்வதற்கான தனிச்சட்டத்தை இயற்றுமாறு நாடாளுமன்றத்திடம் அறிவுறுத்தியிருக்கிறது. தனிச்சட்டம் இயற்றப்படும் வரை, பிரபல வழக்கான சக்தி வாஹினி வழக்கில் நாடாளுமன்றத்திடம் உச்ச நீதிமன்றம் முன்வைத்த சட்டப் பரிந்துரையில் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும், சட்டம் இயற்றும் வரைக்குமான வரையறுத்திருக்கிறது. வழிகாட்டல்களையும் மிகத் தீர்ப்பில் இந்தத் தெளிவாக சொல்லப்பட்டுள்ள தடுப்பு- தண்டனை நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு 31.05.2018 அன்று மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை (F.No. 24013/78/2010-SC/ST-W Dt. 31.05.2018) அனுப்பியது. இருந்தபோதும் எந்த மாநில அரசும் இத்திர்ப்பைச் செயல்படுத்த முன்வரவில்லை.
சட்டத்தின் வெற்றி, அச்சட்டத்தின் நடைமுறைப்படுத்தலிலேயே உள்ளது. காவல் துறையினரின் செயல் வெற்றிகரமான பாடுகள்தான் இதில் மிகவும் முக்கியம். காவல் துறையினருக்கான விழிப்புணர்வையும் சமத்துவ உணர்வூட்டப் பயிற்சிகளையும் தருவது. ஆணவக் கொலைகள் நடந்த பின்னர் நீதி கேட்பதைவிடவும் அவற்றைத் தடுப்பதில் அரசின் செல்ல வேண்டும். அதற்கு இச்சட்டம் வெறும் தண்டனைச் சட்டமாக (Punitive Law) மட்டுமல்லாமல், தடுப்புச் சட்டமாக (Preventive Law) இருப்பது அவசியம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டமே ஒரு தடுப்புச் சட்டமாக அல்லாமல் குற்றும் நடந்த பின் செயல்படும் ததண்டனைச் சட்டமாகவே உள்ளது. இது அச்சட்டத்தின் நோக்கங்களுக்கே எதிரானது. தடுப்புச் சட்டமாக செயல்படுவதில் மாநில-மாவட்ட வாரியான விழிப்புணர்வுக் குழுக்கள், கண்காணிபுக் குழுக்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் முக்கியப் பங்கு வகிக்கும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாததற்கு முக்கியக் காரணம் இக்குழுக்களின் செயலற்றதன்மையே. எனவே, இதனையும் களைய வேண்டியது அவசியம்.

தற்போது இருக்கும் தண்டனைச் சட்டத்தில், ஆணவக் கொலையை ஒரு படுகொலை என்று கருதி, கொலையாளிக்கும் அதற்கு உடந்தையாக இருந்தவருக்கும் மட்டும் தண்டனைகள் கிடைக்கும். ஆனால், சிறப்புச் சட்டத்தில் அக்குற்றத்தை ஆதரிப்பவர்கள், ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் செயல்பட்டவர்கள் என அனைவரையும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரலாம். வழக்கு விசாரணை வேமாக நடைபெறும் வண்ணம் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். எனவே தனிச் சட்டம் இயற்றப்படுமாயின் அது ஆணவக் கொலைகளுக்கான தண்டனைச் சட்டமாக மட்டுமல்லாமல், ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டமாகவும் ஜாதிமறுப்பு, மத மறுப்புத் திருமணத்தில் இணைந்த, இணைய விரும்பும் இணையர்களைப் பாதுகாக்கும் காப்புச் சட்டமாகவும் இயற்றப்பட வேண்டும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு விரையான தீர்வை வழங்கும்.

இந்தியா அரசமைப்புச் சட்டக் கூறு 17 தீண்டாமையைத் தடை செய்கிறது. சட்டக் கூறு 15 மதம் ஜாதி பாலினம் ஆகியவற்றின் மூலம் வேறுபாடு காட்டக் கூடாது என்கிறது. சட்டக் கூறு 14 சமத்துவத்தை வலியுறுத்துகிறது ஆனால் இவை இன்று வரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஜாதிய மனநிலைக்கு எதிரான அழுத்தமான செயல்பாடுகளுடன் அரசு அனைவருக்குமானது என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் கடைக்குட்டி விளிம்பு நிலை மனிதர்களை நம்பிக்கையை காக்க வேண்டியது ஆள்பவர்களின் பொறுப்பு.
ராகுல் சிவசுப்ரமணியம்
(ஆய்வு மாணவர், புதுவை பல்கைக்கழகம்)
இந்து தமிழ் திசை, ஆக-12,2025,
பெரியார் முழக்கம் இதழ் 23102025

You may also like...