மாற்றியமைக்கப்படும் கடவுள்கள் கொளத்தூர் நாத்திகர் விழா சிந்தனை-21 –

பழையனவற்றிலிருந்து புதிய சடங்குகள் மட்டும் உருவமைக்கப்படுவதில்லை; ஆண்-பெண் கடவுளர்களும் புதிய வடிவத்தை அடைகின்றனர். அண்மைக்காலம் வரை சாதாரண மக்களோடு தொடர்புடைய கடவுளர்களும் தேவியர்களும் இப்போது பெருவணிக வளாகங்களும், பல்திரையரங்குகளும் (மால்களிலும் மட்டிபிளக்ஸுகளும்) கொண்ட ஆரவாரப் பகட்டுள்ள புதிய நகர்ப்புறங்களில் இருப்பிடம் பெறுகிறார்கள். நாட்டின் தென் பகுதியில், ஒருகாலத்தில் மக்களின் ஆரோக்கியத்தையும் மண்ணின் வளத்தையும் பாதுகாத்துவந்த கிராம தெய்வங்கள் அல்லது அம்மன்கள், இப்போது நடுத்தர வகுப்பினரால் ஏற்கப்படுகின்றனர். இப்போக்கு, ‘கடவுளரின் தரம் உயர்த்துதல்’ எனப்படுகிறது. நாட்டின் வடக்குப் பகுதியில், ‘மாதா’க்களின் கோயில்கள் அல்லது சக்திபீடங்களுக்குச் செல்லும் (சதி என்ற தேவியின் உடலுறுப்புகள் பலவும் விழுந்ததாகக் கருதப்படுகின்ற இடங்கள்) புனித யாத்திரைகள் மிகவும் பெருகியுள்ளன.

சென்னை மாநகரத்தின் சாலையோரக் கோயில்கள் பற்றி அண்மையில் யு. கல்பகம் என்பவர் செய்த ஆய்வு, மாரியம்மனின் தரம் உயர்த்துதல் பற்றிய இயங்கு முறையைத் தெரிவிக்கிறது. தென் சென்னையின் மயிலாப்பூர் – மந்தை வெளிப் பகுதியில் உள்ள சாலையோரக் கோயிலான ஸ்ரிநாக கன்னியம்மன் கோயிலின் வரலாற்றை இங்கு உதாரணமாகத் தரலாம். ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்பு, கன்னியம்மா என்ற பெயர்கொண்ட பூக்காரி, மக்களால் புனிதமானதாகக் கருதப்படுகின்ற ஓர் அரசமரத்தடியில் ஒரு கல்லை நட்டு, பெண் கடவுளின் ஒரு சிறிய சன்னதியை உருவாக்கினார். ஆண்டுகள் செல்ல, இந்தக் கல், பழங்குடி, தலித் கடவுளர் மற்றும் வேதக் கடவுளர்களின் கலவையாக ஒரு பலகோயில் வளாகமாக வளர்ந்துவிட்டது.

சென்னை புகழ்பெற்ற கோலவிழியம்மன் கோயிலைப் புதுப்பித்துக் கட்டி, புனிதப்படுத்தி, பார்ப்பனப் புரோகிதர்களை வைத்து வேதச் சடங்குகளைக் கொண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தியதை ஆய்வாளர் ஜோன்வேகார்ன் விவரிக்கின்றார். இங்கும் ‘ஒரு புனித மரத்தடியில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால், பழைய முண்டகக் கண்ணியம்மன் எளிய ஒரு கல்வடிவத்தில் அமர்ந்திருந்தாள்’ எனப்படுகிறது. இப்போது ‘அவளுடைய முகமும் முக்கோண உடலும் தடித்த வெள்ளித்தகட்டால் மூடப்பட்டுள்ளன. அவளுடைய மரமும் கீற்றுக்குடிசையும் பளிச்சென வண்ணம் பூசிய மண்டபம், பிரகாரம் அமைத்து இரு கோபுரங்கள் ஆகியவற்றுடன் வளர்ந்துள்ளன.’ இந்த தேவதை, கிராமப்புற நிலங்களின் வளத்தைப் பாதுகாத்து வந்தவள். புதிய பகட்டான நகர்ப்புறத்திற்கு நகர்ந்திருக்கிறாள்.

சென்னைக்கு அருகிலுள்ள மேல்மருவத்தூரில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஆதி பராசக்தி வழிபாடு, மேல்நோக்கிச் செல்லும் கிராம தேவதைக்கு மற்றுமொரு சான்று. இதை நன்கறியப்பட்ட சமகால இந்துமத ஆய்வாளரான வசுதா நாராயணன் விரிவாகக் கூறியுள்ளார். ” இந்தக் கோயில் வளாகத்திற்கு, பத்தாயிரக்கணக்கிலான பக்தர்கள் சிவப்பு உடை அணிந்து வருகிறார்கள். இந்தக் கோயிலின் ஆண் தெய்வ வாக்குரைஞரான பங்காரு அடிகளாரின் உடலில் அம்மன் அவதாரம் குடிகொண்டு பேசுவதாக அவர்கள் நம்புகிறார்கள். அவரை ‘தாய்’ அல்லது ‘அம்மா’ என்றும் அழைக்கிறார்கள். அவளுடைய அவதாரம் தெய்வ வாக்குரைஞரின் வாயிலாக சாதி, சுற்றுச்சூழல், உலக அமைதி ஆகிய சமகாலப் பிரச்சினைகளைப் பற்றியும் அம்மன் பேசுகிறது. பக்தைகளே அதன் ஆன்மிகக் குழுக்கள், சங்கங்கள் பலவற்றை நடத்துகின்றனர். மாதவிலக்குப் பெண்கள், விதவைகள் போன்றோர் மீதான தீட்டு அனுசரிக்கப்படுவதில்லை. சிவப்பு உடையை எல்லா பக்தர்களும் அணிந்துவருவதால் (சிவப்பு என்பது மனித இனத்திற்கே பொதுவான இரத்தத்தின் நிறம்) சாதி வித்தியாசங்கள் பார்க்கப்படுவதில்லை.

ஒருகாலத்தில் அம்மைநோயைத் தீர்ப்பவளாகக் கருதப்பட்ட மாரியம்மன், கர்நாடகாவில் இப்போது எய்ட்ஸ் அம்மனாக மீள் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறாள். இவர் எய்ட்ஸை குணப்படுத்தும் தாய். இந்தப் புதிய தேவதை, எச்.என். கிரீஷ் என்ற உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியரின் கண்டுபிடிப்பு. எச்ஐவி -எய்ட்ஸின் காரணங்களையும் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகளையும் மக்களுக்குக் கற்பிக்க ஒருவேளை இப்படிச் செய்திருக்கலாம். (ஒரு பெண் தெய்வத்துக்கும் எச்ஐவி வைரஸுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வியை எவரும் கேட்கவில்லை!) மதச்சார்பற்ற நோக்கங்களுக்கு மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தினால்தான் கடவுளைக் காப்பாற்ற முடியும் என்று என்பதற்காகவே இந்த மாற்றங்கள் கடவுள் சக்தி என்று ஒன்று இருந்தால் கடவுள்களை இப்படி மாற்றிக் கொள்ளமுடியுமா?

எய்ட்ஸ் அம்மன் ஓர் எளிய விஷயம், மிக அதிகமான பேரை அது ஈர்ப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் தரம் உயர்த்தும் திட்டங்கள் பல, உண்மையிலேயே பிரமிக்கத்தக்க அளவில் நிகழ்த்தப்படுகின்றன, அவற்றுக்குப் பெரிய வணிகர்களிடமிருந்து மிகப் பெரிய கொடைகள் தேவைப்படுகின்றன. சுட்டிக்காட்டக் கூடிய ஓர்உதாரணம், புதுக்கோட்டையில் டிவிஎஸ் மோட்டார்ஸின் நன்கொடையால் தரம் உயர்த்தப்பட்ட மாரியம்மன் கோயில். தமிழ்நாட்டில் முக்கியமான பெரிய கோயில் புதுப்பித்தல்களை மேற்கொண்டுள்ள இந்தியக் கலாச்சார, பாரம்பரிய அறக்கட்டளைக்கு (இண்டியன் கல்ச்சுரல் அண்ட் ஹெரிடேஜ் ட்ரஸ்ட்) முக்கிய கொடையாளர் டிவிஎஸ் குழுமம் ஆகும். டிவிஎஸ் குடும்பம், அய்யங்கார் பார்ப்பனர்கள் அறிவியல் மற்றும் பகுத்தறிவுக்கு எதிராக தங்களின் பார்ப்பனியத்தை மீட்க துடிப்பவர்கள்.

இதே போல் அனுமன் கோயில்கள் கட்டுவதிலும் புதுப்பிப்பதிலும் ஏற்பட்டுள்ள பெருக்கமும், நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவைக் பெருவதற்காகவே செய்யப்படுகிறது. ‘அனுமனுடைய தலைவனுக்கு (இராமனுக்கு) உள்ள கோயில்களைவிட அனுமனுக்கு உள்ள கோயில்கள் அதிகம்’ என்று ஆய்வுகள் கூறுகின்றன.” அனுமன் பரவலாகப் புகழ் அடைந்திருப்பது மட்டுமல்ல, போட்டி போட்டு பெரிய அளவில் அனுமனின் சிலைகளை வைப்பது பரவலாகி வருகிறது. ஆந்திராவில் புட்டபர்த்தியில் சாயிபாபா ஆசிரமத்திலுள்ள 70 அடி உயர அனுமன் சிலை பிரபலமானது. தில்லியில் அதைவிட் உயரமாக புதிதாக 91 அடி, 108 அடி அனுமன் சிலைகளை நிறுவிய பிறகு சாயிபாபாவின் அனுமன் குள்ளமாகிவிட்டார்.

கடவுளின் குணங்களும் மாற்றியமைக்கப்படுகின்றன. புதுதில்லியின் மேட்டுக்குடி நகர் பகுதியான கனாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயில் கூட்டம் அலை மோதுகிறது. கடவுள் காலத்தின் அருமையை மனத்தில் புரிந்துகொண்டு வழிபாட்டு சேவைகளும் மாற்றி அமைக்கப்படுகின்றன. கனாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயில், ஓரிட-முழுச்சேவைக் (ஒன்-ஸ்டாப் ஃபுல் சர்வீஸ்) கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. அங்கேயே பக்தர்கள் துர்கா, லக்ஷ்மி, சந்தோஷ் மாதா, விநாயகரையும் ஒன்றாக இணைத்துவிட்டனர். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு குணாம்சம் கற்பிக்கப்படுகிறது. அனுமன் பிரம்மச்சாரி என்றும், உடல் வலிமை மிக்கவன் என்றும் ஆண்களின் கடவுளாகச் சித்தரிக்கப்பட்டான். இப்போது, அவன் பெண்களின் கடவுளாகவும் மாற்றப்பட்டுள்ளான். ஆண் குழந்தை பிறப்பதற்கும், குடும்பத்தில் செல்வம் வளர்வதற்கும் அனுமன் உதவுவான் என்று கற்பிக்கப்பட்டு பெண்களையும் நம்ப செய்து விட்டனர்.

மதத்தை உயிர்ப்புடன் நிலைத்திருக்க கடவுள்களை கச்சா பொருளாகவே பயன்படுத்துகிறது பார்ப்பனியம். எனவே தேவலோகத்தில் வாழும் பெரிய கடவுள்களைவிட, சாதாரண மக்களின் தேவைகள், விருப்பங்களை உள்ளூர் கடவுள்தான் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை வளர்க்கப்படுகிறது. விஷ்ணுவும் சிவனும் உடனடியாக செயல்படமாட்டார்கள் என்றும் உள்ளூர் கடவுள்களும் அம்மனும், அனுமானும் தூதுவர்களாக செயல்பட்டு கோரிக்கைகளை பெரும் தெய்வங்களுடன் கொண்டு சேர்ப்பார்கள் என்று நடுத்தர மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்டோபர் புல்லர் என்ற ஆய்வாளர் தனது ஆய்வில் இதை சுட்டிக்காட்டுகிறார்.

மதச்சார்பின்மைக் கோட்பாடு, இந்துக்கள் தங்கள் கடவுளர்க்குப் பணிஓய்வு வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தது. இதற்கு மாறாக, நவீனமயமாகும்போது, இந்துக்கள் தங்கள் கடவுளர்களையும் மறுவுருவாக்கம் செய்கிறார்கள். அதற்கு மாறாக பார்ப்பனியம் கடவுள்களை மறு உருவாக்கம் செய்து மக்களிடம் நிலைக்க செய்து வருகிறது.

ஆதாரம்: மீரா நந்தா எழுதிய “God Market” நூல்.
தொடர் நிறைவடைகிறது…
பெரியார் முழக்கம் இதழ் 30102025

You may also like...