அரசியல் சட்டத்திக்கு எதிரான “பழக்க வழக்கங்களை” ஏற்க முடியாது. கேரள உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சனையில் கேரள உயர்நீதிமன்றம் புரட்சிகர தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. “பழக்க வழக்கங்கள்” என்ற சட்டத்தின் பிரிவை கண்மூடித்தனமாக ஏற்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. `பழக்க வழக்கம்’ அரசியல் சட்டத்தின் நோக்கத்திற்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
“அர்ச்சகர்கள் குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாய மத நடைமுறை எதுவும் இல்லை” என்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் செய்வது அரசியலமைப்பு கூறும் சமத்துவத்தை உறுதி செய்யும். ஜாதிக்கும் பாரம்பரியத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் கூறியிருக்கும் நீதிபதிகள், இதுதொடர்பான விவகாரத்தில், அகில கேரள தந்திரி சமாஜம் (AKTS) என்ற பார்ப்பனர்கள் அமைப்பு தாக்கல் செய்த ரிட் மனுவையும் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது 2023-24ஆம் ஆண்டில் (அர்ச்சகர்கள்) நியமன நடவடிக்கைகளை கேரள தேவசம் பணிநியமன வாரியம் (KDRB) மேற்கொண்டது. அப்போது உரிய பயிற்சிப் பெற்றவர்கள் எஸ்.எஸ்.எல்சி கல்வித் தகுதியுடையுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது.
’பிராமணர்கள்’ மட்டுமே படிக்கும் வேத குருகுல பாட சாலையில் வேதம் படித்தவர்களையே நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்கள். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் கே.ஆர். ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். “கேரளத்தில் உள்ள சுமார் 300 பாரம்பரிய தந்திரி குடும்பங்களை உள்ளடக்கிய பதிவுசெய்யப்பட்ட சங்கமான அகில கேரள தந்திரி சமாஜமான தாங்கள் தான், தலைமுறை தலைமுறையாக அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். எங்களை ஆலோசிக்காமல் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய ’தந்திர வித்யா’ பயிற்சி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.
திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜி. பிஜு, கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் வி.வி. நந்த கோபால் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்கள், “அர்ச்சகர் பணியில், ஒதுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதையும், அவர்களை அர்ச்சகர் பணிக்கு தயார்ப்படுத்துவதற்கான பாடத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பு இல்லாததை கவனத்தில் கொண்டே இந்த பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது என்று வாதிட்டனர்.
இந்த வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதிகள், “அர்ச்சகர்கள் நியமனத்திற்குத் தகுதிபெற ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்து வதை, ஒரு அத்தியாவசிய மத நடைமுறை, சடங்கு அல்லது வழிபாட்டு முறையை வலியுறுத்துவதாகக் கருத முடியாது.
அரசியலமைப்பிற்கு முந்தைய காலத்திலிருந்தே எந்தவொரு வழக்கமோ அல்லது பழக்கவழக்கமோ இருந்தாலும், அது மனித உரிமைகள், கண்ணியம் அல்லது சமூக சமத்துவத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதனை அங்கீகரிக்க முடியாது. அடக்குமுறையான, தீங்கு விளைவிக்கும், பொதுக் கொள்கைக்கு முரணான அல்லது நாட்டின் சட்டத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு வழக்கமோ அல்லது நடைமுறையோ, அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற முடியாது.
எங்களைப் பொறுத்தவரை, கோயிலில் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய தகுதினவர்கள் என சான்றளிக்கும் ’தந்திர வித்யாலயா’ என்ற பயிற்சி முறை ஒரு முழுமையான செயல்முறையாகவே தோன்றுகிறது. பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், கோயில் கடமைகளை மேற்கொள்வதற்கான அவர்களின் தயார்நிலையைக் குறிக்கும் வகையில், தீட்சை விழாக்களுக்கும்
உட்படுத்தப்படுகிறார்கள்.
மேலும், அத்தகைய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கூட, இறுதித் தேர்வு மற்றும் முறையாக அமைக்கப்பட்ட குழுவால் தகுதயின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் கற்றறிந்த அறிஞர்களைத் தவிர, ஒரு புகழ்பெற்ற தந்திரி குழுவும் அடங்கும். இந்தப் பின்னணியில், பாரம்பரிய அர்ச்சர்களின் கீழ் பயிற்சி பெற்ற நபர்களை மட்டுமே சாந்திகளாக நியமிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது என்று தீர்ப்பளித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 30102025
