பா.ஜ.க. ஆட்சியால் இந்தியாவுக்கு தலைகுனிவு!

“உலக நாடுகளில் இந்தியாவையே தலை குனிய வைக்கும் அவமானம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்திருக்கிறது”.

சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு வந்த இரண்டு ஆஸ்திரேலியப் பெண்கள் பட்டப் பகலில் அவர்கள் தங்கி இருந்த ஓட்டலின் அருகிலேயே வன்முறைக் கும்பல்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பாதுகாப்பை நம்பி விளையாட வந்த பெண்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது, உலக நாடுகளில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இந்தியாவிற்குப் பயணம் செய்வது பெண்களுக்கு ஆபத்து நிறைந்தது என்று எச்சரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நிலைமையை மிகவும் மோசமாக்கி விட்டது. சர்வதேச விளையாட்டுப் போட்டியை நடத்தும் ஒரு மாநிலம் அதில் பங்கேற்கும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி இருப்பது வெட்கக்கேடானதாகும் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தலையங்கம் கூறுகிறது.

எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்து இருக்கிறது என்றும் அந்தத் தலையங்கம் கூறுகிறது. அகமதாபாத் நகரில் 2030-ஆம் ஆண்டுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கு அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது.

இந்தூர் சம்பவம் இதற்கான அனுமதியைக் கேள்விக்குறியாக்கி விட்டது. பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டிய ம.பி பாஜக ஆட்சி, பெண்கள் ஏன் ஓட்டலை விட்டு வெளியே வந்தார்கள் என்று பொறுப்பேற்காமல் கேட்கிறது. குற்றவாளியை உடனே கைது செய்ய விட்டோம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் தருகிறது. தமிழ்நாட்டில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மிகவும் எச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பாலியல் வன்முறை சம்பவத்தை முன்வைத்து பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று கூச்சலிட்டு அரசியல் ஆக்க முயன்றவர்கள்; பாஜக ஆட்சியில் நடந்த இந்த சர்வதேச அவமானத்திற்கு என்ன பதிலை கூறப் போகிறார்கள்?”
பெரியார் முழக்கம் இதழ் 06112025

You may also like...